Home /News /theni /

தேனியில் திமுக ஒன்றிய செயலாளர் மீது கொலை வெறி தாக்குதல்... பதற வைக்கும் சிசிடிவி வீடியோ...

தேனியில் திமுக ஒன்றிய செயலாளர் மீது கொலை வெறி தாக்குதல்... பதற வைக்கும் சிசிடிவி வீடியோ...

திமுக ஒன்றிய செயலாளரை தாக்கும் சிசிடிவி வீடியோ

திமுக ஒன்றிய செயலாளரை தாக்கும் சிசிடிவி வீடியோ

Theni District : தேனியில் திமுக ஒன்றிய செயலாளர் மீது வீடு புகுந்து ஒரு கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்தியது. இதன் பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியானது.  பேரூராட்சி துணைத் தலைவர், பெண் காவலர் உள்பட 8க்கும் மேற்பட்டோர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கொலை வெறித்தாக்குதலுக்கான காரணம் என்ன?

மேலும் படிக்கவும் ...
    திமுக தேனி வடக்கு மாவட்டத்தில் உள்ள தெற்கு ஒன்றிய செயலாளர் பதவி வகிப்பவர் இரத்தினசபாபதி (வயது 65).  இவர்  வீரபாண்டி பிரதான சாலையில் உள்ள தனது இல்லத்தில் நேற்றிரவு உறவினர்,  நண்பர்கள் மற்றும் கட்சியினருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.‌ அப்போது திடீரென வீட்டிற்குள் புகுந்த ஒரு கும்பல் இரத்தினசபாபதி மீது இரும்புக்கம்பி, உருட்டுக்கட்டை போன்ற ஆயுதங்களால் சரமாரியாக கொலை வெறித்தாக்குதல் நடத்தியுள்ளனர்.‌

    மேலும் அங்கிருந்த மேஜை, நாற்காலி, மின் விசிறி உள்ளிட்ட பொருட்களை அடித்து சேதப்படுத்தியதோடு நாற்காலியாலும் இரத்தினசபாபதி மற்றும் அவருடன் இருந்த நபர்கள் மீதும் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். தாக்குதலில் கை, கால் மற்றும் உடலில் பலத்த ரத்த காயமடைந்த இரத்தினசபாபதி சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

    இது குறித்து காவல்துறையினரிடம் இரத்தினசபாபதி அளித்த புகாரில், நடந்து முடிந்த திமுக உள்கட்சி தேர்தலில் வீரபாண்டி பேரூர் செயலாளராக தற்போது பதவியில் இருக்கும் வீரபாண்டி பேரூராட்சி துணைத் தலைவர் சாந்தகுமார் என்பவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.‌ அவருக்கு பதிலாக செல்வராஜ் என்பவருக்கு கட்சித் தலைமை வாய்ப்பளித்தது. இதனால் கட்சியில் பேரூர் செயலாளர் பதவி பறிக்கப்பட்டதற்கு தான் காரணம் என, விரோதம் கொண்ட சாந்தகுமாரின் தூண்டுதலில் அவரது சகோதரர் மகேந்திரன் தலைமையிலான கும்பல்தான் இந்த கொலை வெறி தாக்குதல் நடத்தியதாகத் தெரிவித்துள்ளார்.

    தாக்குதலுக்கு ஆளான இரத்தினசபாபதி..


    அதனடிப்படையில் வீரபாண்டியை சேர்ந்த மகேந்திரன் (சாந்தகுமாரின் சகோதரர்), ராஜேஷ், தாமரைக்கண்ணன், பிரபாகரன், வினோத், தீனா ( சாந்தகுமாரின் மகன்), வீரபாண்டி பேரூராட்சி துணைத் தலைவர் சாந்தகுமார், தேனி நகர் காவல் நிலைய பெண் காவலர் கவிதா  (மகேந்திரனின் மனைவி) மற்றும் சிலர் மீது வழக்குப் பதிவு செய்த வீரபாண்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Also see... குமரி மேற்கு கடல் பகுதியில் முடிவுக்கு வருகிறது மீன்பிடி

    அவரது வீட்டில்  பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வந்ததில் வீரபாண்டியை சேர்ந்த பிரபாகரன் என்பவரை மட்டும் கைது செய்துள்ளனர்.‌ மற்ற நபர்களை தேடி வருகின்றனர்.‌ மேலும் இரத்தினசபாபதியின் இல்லத்திற்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இதனிடையே தன் மீது நடத்தப்பட்ட கொலை வெறித் தாக்குதலுக்கு காரணமான நபர் மீது திமுக கட்சித் தலைமை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட இரத்தினசபாபதி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    உட்கட்சிப் பூசலால் திமுக தேனி ஒன்றிய செயலாளரை வீடு புகுந்து கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    செய்தியாளர்: பழனிக்குமார், தேனி
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Crime News, DMK, Theni

    அடுத்த செய்தி