ஆண்டிபட்டி அருகே 71 அடி உயர நீர்த்தேக்க கொள்ளளவில் வைகை அணை அமைந்துள்ளது. இந்த அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூனி மாதத்தில் முதல் போக பாசனத்திற்கும், அக்டோபரில் இரண்டாம் போக பாசனத்திற்கும் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். தற்போது, மூல வைகை மற்றும் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் வரத்து உள்ளதால் நீர்மட்டம் உயர்ந்து காணப்படுகிறது.
இந்நிலையில் வைகை அணையில் இருந்து பெரியாறு - வைகை பிரதான கால்வாயின் கீழ் உள்ள இரு போக பாசன நிலங்களின் முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதனடிப்படையில் இன்று ஜூன் 2ஆம் தேதி முதல் 45நாட்களுக்கு 900கன அடி வீதமும், அதனைத் தொடர்ந்து 75 நாட்களுக்கு முறைப்பாசனம் அடிப்படையில் என 120நாட்களுக்கு 6,739 மி.கன அடி தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன் மூலம் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவில் 1,797 ஏக்கரும், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகாவில் 16,452 ஏக்கர் மற்றும் மதுரை வடக்கு வட்டத்தில் 26,792 ஏக்கர் என ஆக மொத்தம் 45,041 நிலங்கள் பாசன வசதி அடைகின்றன. தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் பங்கேற்று வைகையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தனர்.இந்த நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.