தேனியில் பல தொழில் அதிபர்கள் மீது பாலியல் புகார் கூறி, பணம் பறித்து வந்த பெண் மீது மேலும் ஒரு தொழில் அதிபர் ஆதாரப்பூர்வமாக புகார் அளித்துள்ளார். தொழில் அதிபர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி?
தேனி மாவட்டத்தில் உள்ள பிரபல ஜவுளிக்கடை உரிமையாளர் தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதாக மேனகா என்ற 29 வயது இளம்பெண், தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதனடிப்படையில் கடந்தாண்டு மார்ச் 14 ல் ஜவுளிக்கடை உரிமையாளர் மீது வழக்குப்பதிவான நிலையில், ஏப்ரலில் அவர் சரணடைந்தது, பின் நீதிமன்ற ஜாமினில் வெளிவந்தார். இதையடுத்து திருமணம் செய்து கொண்டு தன்னுடன் வாழ மறுப்பதாக கூறி சம்பந்தப்பட்ட ஜவுளிக்கடையினுள் மேனகா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
பெண்ணின் போராட்டத்திற்கு ஆதரவாக சில அமைப்புகளும் ஜவுளிக்கடையை முற்றுகையிட்டனர். கடைக்குள் தர்ணாவில் ஈடுபட்ட மேனகாவை வலுக்கட்டாயமாக தூக்கி சென்ற மகளிர் போலீசார், கைது செய்து பின் ஜாமினில் விடுவித்தனர்.
29 வயதான மேனகாவுக்கு அநியாயம் நடந்திருப்பதாக அனைவரும் நினைத்திருந்த நிலையில், மேனகாதான் தொழில் அதிபர்களை மிரட்டி மீது பாலியல் புகார் கூறி, பணம் பறித்து வந்தது தெரியவந்தது. வயதான தொழில் அதிபர்களிடம் நெருங்கி பழகி, அவர்களின் பாலியல் ஆசைகளை தூண்டி, தனது வலையில் விழ வைத்து, பின்னர் அதை வைத்தே மேனகா மிரட்டி பணம் பறித்து வந்திருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் தொழில் அதிபர்கள் மீது மேனகாவின் பாலியல் புகார் நாடகங்கள் தொடர்பாக தேனி, சின்னமனூர் காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் மேனகா மீது மேலும் ஒரு தொழில் அதிபர் புகார் அளித்து இருக்கிறார்.
மனைவியை இழந்த தன்னை இரண்டாவது திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி 10.5 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றியதாக மேனகா மீது 58 வயது தொழிலதிபர் கம்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
தேனி மாவட்டம் கம்பம் நகராட்சிக்கு உட்பட்ட சுங்கம் தெருவில் வசிப்பவர் 58 வயதான முகமது ரபீக். உணவகம், ரியல் எஸ்டேட் என பிரபல தொழிலபதிரான முகமது ரபீக், கேரளாவில் ஏலத்தோட்டங்களை குத்தகைக்கு எடுத்து விவசாயமும் செய்து வருகிறார்.
இவரது மகன்கள் இருவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வரும் நிலையில் முகமது ரபீக்-ன் மனைவி உடல்நலக்குறைவால் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.
மனைவி இறந்த சோகத்தில் இருந்த தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி 10 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றியதாக மேனகா உட்பட 3 பெண்கள் மீது கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் முகமது ரபீக் புகார் கொடுத்து இருக்கிறார்.
தனது நிறுவனத்தில் வேலை பார்த்த தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியை சேர்ந்த ஜீவா,கோடாங்கிபட்டியை சேர்ந்த சத்யா என்ற இரு பெண்கள் மூலம் மேனகா தனக்கு அறிமுகமானதாக புகாரில் முகமது ரபீக் தெரிவித்துள்ளார்.
ஜீவா, சத்யா இருவரும் தங்களுக்கு பழக்கமான தோழி என்று பெரியகுளம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த மேனகாவை செல்போன் மூலம் அறிமுகம் செய்து வைத்தனர். மேனகாவிடம் பேசியது தனக்கு ஆறுதலாக இருக்கவே, தொடர்ந்து அவருடன் செல்போனில் பேசினேன். வீடியோ காலிலும் பேசியிருக்கிறேன் என்று புகாரில் முகமது ரபீக் தெரிவித்துள்ளார்.
தனக்கு பணப்பிரச்சனை இருப்பதாகவும் அதற்கு நீங்கள் உதவ வேண்டும் என மேனகா கேட்டதால் டிசம்பர் 21ஆம் தேதியன்று அவரது வங்கிக் கணக்கிற்கு ஐம்பதாயிரம் ரூபாய் அனுப்பி வைத்தேன். அதனையடுத்து டிசம்பர் 22ஆம் தேதி மீண்டும் தொடர்பு கொண்ட மேனகா, தான் பெரிய பிரச்சினையில் இருப்பதாகவும் உடனடியாக 10 லட்சம் ரூபாய் சத்யாவிடம் கொடுத்து அனுப்புமாறு கூறி கதறி அழுதார்.
அவர் மேல் இரக்கப்பட்டும், தன்னை திருமணம் செய்து கொள்வார் என்று நம்பியும் ஜீவா, சத்யா இருவரிடமும் டிசம்பர் 23ஆம் தேதியன்று ரூ.10 லட்சம் பணத்தை கொடுத்து அனுப்பியதாக முகமது ரபீக் தெரிவித்துள்ளார். பணத்தை பெற்றுக் கொண்டதாக வாய்ஸ் மெசேஜ் அனுப்பிய மேனகா, டிசம்பர் 26ஆம் தேதியன்று தன்னை நேரில் சந்திப்பதாகவும், அன்று முதல் நாம் இருவரும் திருமணம் செய்து கொண்டு வாழலாம் என்று வாய்ஸ் மெசேஜ் அனுப்பினார். சிறிது நேரத்தில் அந்த வாய்ஸ் மெசேஜை அவர் டெலிட் செய்து விட்டார்.
மறுநாள் மேனகா மற்றும் ஜீவா, சத்யா ஆகியோரை தொடர்பு கொண்ட போது அனைவரது செல்போன்களும் சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது. தொடர்ந்து அவர்கள் யாரையும் தொடர்பு கொள்ள முடியாததால் நான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து புகார் அளித்ததாக முகமது ரபீக் தெரிவித்து இருக்கிறார்.
புகாரின் பேரில் மேனகா, ஜீவா, சத்யா ஆகிய 3 பெண்கள் மீதும் கம்பம் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், முகமது ரபீக்கை தனது வலையில் வீழ்த்திய பின்னர் மேனகா அவரிடம் செல்போனில் பேசும் ஆடியோக்களும் வெளிவந்துள்ளன. தொழில் அதிபர்களை குறிவைத்து இளம்பெண் நடத்திய ஹனிடிராப் மோசடி பெரும் பேசு பொருளாக உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cheating case, Crime News, Theni, Woman