ஹோம் /நியூஸ் /தேனி /

நண்பனை கொலை செய்து கல்லை கட்டி கிணற்றில் வீசிய கொடூரம்! தேனியில் பயங்கரம்

நண்பனை கொலை செய்து கல்லை கட்டி கிணற்றில் வீசிய கொடூரம்! தேனியில் பயங்கரம்

தேனி கொலை

தேனி கொலை

Theni murder | மோப்ப நாயின் உதவியுடன் அழுகிய நிலையில் கிடந்த சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Theni Allinagaram | Theni

தேனி அருகே நான்கு நாட்களுக்கு முன் காணாமல் போன இளைஞர் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் 4பேர் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம்  தாமஸ் காலணியில் உள்ள தண்ணீர் தொட்டி தெருவை சேர்ந்த செல்வம் என்பவரது மனைவி செல்வி(39). இவருக்கு கிர்த்திக்செல்வா(20), கிஷோர் கரன் மற்றும் கீர்த்தனா ஆகிய 3 பிள்ளைகள் உள்ளனர். இதில் கிர்த்திக்செல்வா என்பவர் கடந்த 24ஆம் தேதியன்று, இரவில் வீட்டை விட்டு வெளியே சென்றவர் எங்கும் தேடியும் கிடைக்காததால் தனது மகனை கண்டுபிடித்து தருமாறு உத்தமபாளையம் காவல் நிலையத்தில் செல்வி புகாரளித்தார்.

அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்த உத்தமபாளையம் போலீசார் கிர்த்திக்செல்வாவின்  நண்பர்கள் மற்றும் அவரது செல்போன் பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தினர்.‌ அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. காணாமல் போன கிர்த்திக்செல்வாவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த  தேவசகாயம் என்பவரது மகன்கள் பிரின்ஸ், பிரதீப் ஆகியோர் நண்பர்கள். கடந்த டிசம்பர் 24ஆம் தேதியன்று அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறி ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். இதனால் மேலும் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க கிர்த்திக்செல்வாவை  உத்தமபாளையத்தில் உள்ள அவரது தாத்தா சவரியின் வீட்டிற்கு செல்வி அனுப்பி வைத்துள்ளார்.

தொடர்ந்து கிர்த்திக் செல்வாவை செல்போனில் தொடர்பு கொண்ட நண்பர்கள் அங்குள்ள தனியார் பள்ளி அருகே வருமாறு அழைத்துள்ளனர். அதனடிப்படையில் அங்கு சென்ற கிர்த்திக் செல்வா மற்றும் அவரது நண்பர்கள் கோபி கிருஷ்ணா, பிரின்ஸ், சுதர்சன், வினோத் ஆகியோர் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது அவர்களுக்குள் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மது போதையில் இருந்ததால் இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியதில் கிர்த்திக்செல்வாவை அவரது நண்பர்கள் கோபி கிருஷ்ணா, பிரின்ஸ், சுதர்சன், வினோத் ஆகியோர் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளனர்.

இதனை தொடர்ந்து உடலை மறைக்க நினைத்த நண்பர்கள், கிரித்திக் செல்வாவின் உடலை கல்லால் கட்டி, மாதா கோவில் அருகில் உள்ள தோட்டத்து கிணற்றில் போட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நேற்று முன்தினம் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மோப்ப நாய் உதவியுடன் அழுகிய நிலையில் கிடந்த சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து கோபி கிருஷ்ணா (19)  பிரின்ஸ்(22)  வினோத் (25) சுதர்சன்(20) ஆகிய நான்கு பேரையும் கைது செய்து உத்தமபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய இருவரை தேடி வருகின்றனர்.

First published:

Tags: Crime News, Local News, Murder, Theni