ஹோம் /நியூஸ் /தேனி /

சிறுத்தை உயிரிழந்த விவகாரம்... ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தின் தோட்ட மேலாளர்கள் கைது

சிறுத்தை உயிரிழந்த விவகாரம்... ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தின் தோட்ட மேலாளர்கள் கைது

சிறுத்தை உயிரிழப்பு

சிறுத்தை உயிரிழப்பு

தோட்ட உரிமையாளரான ரவீந்திரநாத் எம்.பி‌ மீதும் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு சங்கத்தினர் குற்றம் சாட்டினர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Theni Allinagaram, India

  தேனி அருகே சிறுத்தை உயிரிழந்த விவகாரத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தி மகனும் அதிமுக எம்.பி.யுமான ரவீந்திரநாத்தின் தோட்ட மேலாளர்கள் இருவரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.

  தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் அடுத்துள்ள சொர்க்கம், கோம்பை வனப்பகுதியை ஒட்டிய இடத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி சிறுத்தை ஒன்று வேலியில் சிக்கியிருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் அங்கு விரைந்த தேனி மாவட்ட உதவி வன பாதுகாவலர் மகேந்திரன் தலைமையிலான வனத்துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

  அப்போது வேலியில் இருந்து தாவிய சிறுத்தை அங்கிருந்த உதவி வன பாதுகாவலரை தாக்கி விட்டு தப்பி ஓடியதாக கூறப்பட்டது. சிறுத்தையின் தாக்குதலில் கை மற்றும் வயிறு பகுதியில் காயமடைந்த உதவி வன பாதுகாவலர் மகேந்திரன் தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

  இந்த நிலையில் உதவி வன பாதுகாவலரை தாக்கிய இடத்திற்கு அருகே உள்ள தனியார் தோட்டத்தில் மறுநாளான செப்டம்பர் 28ஆம் தேதி வேலியில் சிக்கி சிறுத்தை உயிரிழந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் அவசர அவசரமாக கால்நடை மருத்துவர்களை வரவழைத்து சிறுத்தையை உடற்கூறாய்வு செய்து அங்கேயே எரித்துள்ளனர்.

  உதவி வன பாதுகாவலர் தாக்கப்பட்ட இடத்திற்கு அருகே அடுத்த நாளே மர்மமான முறையில் சிறுத்தை உயிரிழந்தது வன ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. எனவே சிறுத்தை மரணம் தொடர்பாக வனத்துறை உயரதிகாரிகள் விரிவான விசாரணை நடத்திட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.‌

  இதையடுத்து நடைபெற்ற விசாரணையில், சம்பவ இடமானது அதிமுக தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி‌.ரவீந்திரதாத்திற்கு சொந்தமானது எனவும், தனது தோட்டத்தை சுற்றி வன விலங்குகள் நடமாட்டத்தை தடுப்பதற்கு சோலார் வேலி அமைத்திருப்பதும் தெரியவந்தது. அவரது தோட்டத்தில் தற்காலிகமாக கிடை அமைத்து ஆடுகளை மேய்த்து வந்த இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் என்ற விவசாயி தான், சிறுத்தையின் மரணத்திற்கு காரணம் எனக் கூறி வழக்குப் பதிவு செய்த வனத்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  கிடையில் இருந்த ஆடுகளில் 2 காணவில்லை எனவும், அதனை வனவிலங்குகள் தான் அடித்து இழுத்துச் சென்றிருக்கும் எனக் கருதிய அலெக்ஸ் பாண்டியன், அதிலிருந்து ஆடுகளை காப்பாற்றுவதற்காக அதன் நடமாட்டம் உள்ள இடத்தில் சுருக்கு வேலியை பயன்படுத்தியுள்ளார். அதில் சிக்கியதால் தான் சுமார் 2வயது ஆண் சிறுத்தை உயிரிழந்ததாக வனத்துறை தரப்பில் கூறப்படுகிறது. மேலும் மாவட்ட உதவி வன பாதுகாவலரை தாக்கியது பெண் சிறுத்தை எனவும் வனத்துறையினர் கூறுகின்றனர்.

  ஆனால் சிறுத்தையின் மரணத்தில் அப்பாவி விவசாயியை வலுக்கட்டாயமாக குற்றத்தை ஒப்புக்கொள்ள சொல்லி அடித்து வனத்துறையினர் துண்புறுத்தியதாகவும், இந்த வழக்கில் தோட்ட உரிமையாளரான ரவீந்திரநாத் எம்.பி‌ மீதும் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு சங்கத்தினர் குற்றம் சாட்டினர். அதன் தொடர்ச்சியாக மேல் விசாரணை நடத்திய வனத்துறையினர், தற்போது ரவீந்திரநாத் எம்.பி.யின் தோட்ட மேலாளர்களான பெரியகுளம் தங்கவேல் (42), போடி நாகலாபுரம் ராஜவேல் (28) ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிந்து அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  மேலும் சிறுத்தையின் மரணம் தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்தி தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தகவல் தெரிவித்தனர்.

  செய்தியாளர்: பழனிகுமார்- தேனி

  Published by:Murugesh M
  First published:

  Tags: ADMK, Leopard