ஹோம் /நியூஸ் /தேனி /

இலவசமாக பன்ரொட்டி தர மறுத்த வியாபாரி கட்டையால் அடித்து கொலை... தேனியில் வாலிபர்கள் வெறிச்செயல்

இலவசமாக பன்ரொட்டி தர மறுத்த வியாபாரி கட்டையால் அடித்து கொலை... தேனியில் வாலிபர்கள் வெறிச்செயல்

கைதான வாலிபர்கள், கொலையான பேக்கரி ஊழியர்.

கைதான வாலிபர்கள், கொலையான பேக்கரி ஊழியர்.

Theni Bakery Worker Murder | தேனி மாவட்டத்தில் இலவசமாக பன்ரொட்டி தர மறுத்த வியாபாரி கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசார் இரண்டு வாலிபர்களை  கைது செய்துள்ளனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Theni, India

  தேனி மாவட்டம் கம்பம் நகராட்சிக்கு உட்பட்ட பாரதியார் நகரை சேர்ந்தவர் சுருளி வேலு(52). இவருக்கு சுந்தரி(48) என்ற மனைவியும், காளீஸ்வரி(33), சதீஷ்(24) ஆகிய இரு பிள்ளைகளும் உள்ளனர். இதில்  காஸ்வரிக்கு திருமணமாகி அவரது குடும்பத்துடன் வசித்து வருகிறார். மகன் சதீஷ் கம்பம் வேலப்பர் கோவில் தெருவில் உள்ள பர்னிச்சர் கடையில் வேலை செய்து வருகிறார்.

  பாரதியார் நகர் பகுதியில் செயல்படும் கணேஷ் பேக்கரியில் வேலை செய்து வந்த சுருளி வேலு, பன்ரொட்டி, கேக், பப்ஸ் உள்ளிட்ட தின்பண்டங்களை ட்ரை சைக்கிளில் வைத்து வீதி, வீதியாக வியாபாரம் செய்வது வழக்கம்.‌

  இந்நிலையில், கடந்த அக்டோபர் 16ம் தேதி வியாபாரத்திற்கு சென்ற சுருளி வேலு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாமல் இருந்துள்ளார்.‌ இதனிடையே கம்பம் மெட்டு காலனி பகுதியில் சுருளி வேலு இறந்து கிடப்பதாக அவரது மகள் காளீஸ்வரிக்கு செல்போனில் தகவல் தெரிவித்துள்ளனர்.‌ இதனால் பதற்றத்துடன் சம்பவ இடத்திற்கு சென்ற சுருளி வேலு குடும்பத்தினர், அங்கு ரத்த காயங்களுடன் சடலமாக கிடந்த சுருளி வேலுவை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

  இதுதொடர்பாக சுருளி வேலுவின் மனைவி சுந்தரி அளித்த புகாரில் வழக்குப் பதிவு செய்த கம்பம் வடக்கு காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பேக்கரி பொருட்களை வியாபாரம் செய்து கொண்டிருந்த சுருளி வேலுவுடன் சுமார் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர்கள் இருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்தது தெரியவந்தது.

  இதையும் படிங்க : தேனியில் தொடரும் மழை.. அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு : தற்போதைய நிலவரம் என்ன?

  அப்போது ஏற்பட்ட மின் தடையின்போது சுருளி வேலுவின் அலறல் சத்தம் கேட்டதாகவும், மின் இணைப்பு வந்ததும் பார்த்தபோது அவர் இறந்து கிடந்ததாகவும் அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர். மேலும் சம்பவ இடத்தில் நீல நிறத்தில் ஒரு ஜோடி செருப்பும், ரத்தக்கரையுடன் சவுக்கு கட்டை ஒன்றும் கிடந்ததை போலீசார் கைப்பற்றி குற்றவாளிகளை தேடி வந்தனர்.

  இதனிடையே , சடலத்தை கைப்பற்றி  உடற்கூறாய்வுக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

  சம்பவ இடத்தில் கிடைத்த தகவல் மற்றும் அடையாளங்களை அடிப்படையாக கொண்டு போலீசார் நடத்திய  விசாரணையில், கம்பம் மெட்டு காலனியை சேர்ந்த கிளின்டன்(19), மணிகண்டன்(19) ஆகிய இருவர் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

  இதையும் படிங்க : தேனி மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய கனமழை - பகுதிவாரியாக மழையின் அளவு குறித்த விபரம் இதோ

  சம்பவ இடத்திற்கு வியாபாரத்திற்கு வந்த சுருளி வேலுவிடம் 10 ரூபாய்க்கு 3 பன்ரொட்டி கேட்ட வாலிபர்களிடம், 1 பன்ரொட்டி மட்டுமே தர முடியும் என அவர் கூறியுள்ளார். அதனை ஏற்க மறுத்த வாலிபர்கள், இலவசமாக பன்ரொட்டி தருமாறு கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதில்  ஆத்திரமடைந்த வாலிபர்கள் இருவரும் அங்கிருந்த சவுக்கு கட்டையால் சுருளி வேலுவை தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

  இதையடுத்து கிளின்டன், மணிகண்டன் இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.  இலவசமாக பன்ரொட்டி தர மறுத்த வியாபாரியை வாலிபர்கள் இருவர் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  செய்தியாளர் : பழனிகுமார் - தேனி

  Published by:Karthi K
  First published:

  Tags: Murder, Theni