முன்னாள் முதல்வர்
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் அ.தி.மு.கவில் பொதுச்செயலாளர் பதவிக்கு பதிலாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை பதவி உருவாக்கப்பட்டது. தொடர்ந்து 5ஆண்டுகளுக்கு மேலாக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வம் இருந்துவருகிறார். அதேபோல, இணை ஒருங்கிணைப்பாளராக
எடப்பாடி பழனிசாமி இருந்துவருகிறார்.
அதேபோல, சட்டமன்ற எதிர்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர் செல்வமும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும் பதவி வகித்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையில் நேற்று நடைபெற்ற அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் ஒற்றைத் தலைமையின் கீழ் அ.தி.மு.க செயல்பட வேண்டும் என பெரும்பாலானோர் கருத்து தெரிவித்ததாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார்.
மேலும் நேற்றைய கூட்டரங்கிலும் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள், ஓ.பி.எஸ்ஸும், இ.பி.எஸ் ஆதரவாளர்கள் இ.பி.எஸ்- ஒற்றைத் தலைமை ஏற்குமாறு கோசங்களை எழுப்பினர்.
அதன் தொடர்ச்சியாக இன்று, ஒற்றைத் தலைமை ஏற்று கழகத்தை வழிநடத்த வருமாறு ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து அவரது சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் சுவரொட்டிகள், பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
‘முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட தொண்டர்களின் பாதுகாவலரே! ஒற்றைத் தலைமை ஏற்று கழகத்தை வழிநடத்த வாருங்கள்" என தேனி - அல்லிநகரம் நகர் கழகம் சார்பில் நகரின் முக்கிய பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. சின்னமனூர் நகரில் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவு சுவரொட்டிகள் மற்றும் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
இதே போல போடி பகுதியிலும் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அ.தி.மு,கவின் ஒற்றைத் தலைமை சுவரொட்டிகள் அவரது ஆதரவாளர்களால் ஒட்டப்பட்டுள்ளன. இது தவிர பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவு கார்டுகள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் இரட்டைக்குழல் துப்பாக்கி போன்று இணைந்து செயல்பட்டு அ.தி.மு.கவை வழிநடத்தி வருவதாக ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி கூறி வந்த நிலையில் தற்போது எழுந்துள்ள ஒற்றைத் தலைமை குரல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உங்கள் நகரத்திலிருந்து(Theni)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.