தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் தன் கார் மீது மோதிய தனியார் பேருந்தை போலீஸ்காரர் ஒருவரே கடத்தி சென்று சம்பவம் அரங்கேறியுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள டி.பொம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கதிரேசன். இவர் தேனி மாவட்ட ஆயுதப்படைப் பிரிவில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் தேனி நோக்கி காரில் சென்றுள்ளார். அப்போது ஆண்டிப்பட்டி அருகே டி.சுப்புலாபுரம் பிரிவில் மதுரையில் இருந்து கம்பம் நோக்கி வந்த தனியார் பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக கதிரேசனின் காரின் பின்பக்கமாக மோதியது.இதில் காரின் பின்பகுதி சேதமடைந்துள்ளது.
இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த ஆயுதப்படை காவலர் கதிரேசன் காரில் இருந்து இறங்கி சென்று பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் தனது ஊர்காரர்கள் சிலருடன் சேர்ந்து பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரை சரமாரியாக தாக்கியுள்ளார். பின்னர், பேருந்தில் இருந்த பயணிகளை கீழே இறக்கிவிட்டு, பேருந்தை தனது ஊருக்கு எடுத்து சென்றுள்ளார். இதுகுறித்து ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் தனியார் பேருந்து ஓட்டுநர் அழகுராஜா புகார் அளித்தார். அதன் அடிப்படையில் டி.பொம்மிநாயக்கன்பட்டிக்கு சென்ற காவல்துறையினர் தனியார் பேருந்தை மீட்டு ஆண்டிபட்டி காவல் நிலையத்திற்கு எடுத்து வந்தனர். மேலும், கதிரேசனின் இன்னோவா காரையும் பறிமுதல் செய்தனர்.
அப்போது பேருந்தை சரிபார்த்த ஓட்டுநர், அதில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராக்கள் சேதமடைந்தும், அதன் ஹார்டு டிஸ்க்குகள், ஊபர் ஒலிப்பெருக்கி, டி.வி. உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டிருப்பதை அறிந்தார். இதுகுறித்து பேருந்து ஓட்டுநர் அளித்த புகாரின் பேரில், ஆண்டிபட்டி காவல்துறையினர் ஆயுதப்படை காவலர் கதிரேசன் மற்றும் சிலர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பேருந்து ஓட்டுநர் அழகுராஜா
விசாரணையில், ஆயுதப்படை காவலரான கதிரேசனுக்கு சொந்தமாக ஆண்டிபட்டி - மதுரை சாலையில் கோழிப்பண்ணை உள்ளது. இதில், கடந்த மே 10ஆம் தேதியன்று இதே தனியார் நிறுவனத்தை சேர்ந்த பேருந்து மதுரையில் இருந்து ஆண்டிபட்டி நோக்கி வந்த போது ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில் கட்டுப்பாட்டை இழந்து கதிரேசனின் கோழிப்பண்ணைக்குள் புகுந்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதனால் பேருந்தில் பயணம் செய்த 10க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது. மேலும் பண்ணையில் இருந்த 50க்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழந்ததோடு, பல லட்சம் ரூபாய் அளவிற்கு பண்ணையும் சேதம் ஏற்பட்டது. அதற்காக ரூ. 1.50லட்சம் விபத்து இழப்பீடாக கதிரேசன் கேட்டும் பேருந்து நிறுவனத்தினர் தர மறுத்த ஆத்திரத்தில் தான் இவ்வாறு செய்ததாக கதிரேசன் தெரிவித்துள்ளார்.
Must Read : பெற்ற மகளையே கர்ப்பமாக்கிய தந்தை போக்சோவில் கைது... வேலூரில் அதிர்ச்சி சம்பவம்
இதையடுத்து கதிரேசனை கைது செய்த ஆண்டிபட்டி காவல்துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின் சிறையில் அடைத்தனர். மேலும் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல்துறை உத்தரவிட்டுள்ளது. இதனிடையே கதிரேசனின் மனைவி அளித்த புகாரில் பேருந்து ஓட்டுநர் மீதும் ஆண்டிபட்டி காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.முன் விரோதம் காரணமாக தனியார் பேருந்தை ஆயுதப்படை காவலர் தன் வீட்டிற்கு எடுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.
செய்தியாளர் - பழனிகுமார்.
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.