முகப்பு /செய்தி /தேனி / 80 லட்சம் கொடுத்தால் 1 கோடி கிடைக்கும் - ஹவாலா பணம் மாற்றுவதாக மோசடி செய்த கும்பல் கைது

80 லட்சம் கொடுத்தால் 1 கோடி கிடைக்கும் - ஹவாலா பணம் மாற்றுவதாக மோசடி செய்த கும்பல் கைது

கைதான யுவராஜ், கார்த்திக்

கைதான யுவராஜ், கார்த்திக்

ஹவாலா பணம், கருப்பு பண மாற்றம் என புதுவிதமான மோசடி செய்தி பற்றிய தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.‌

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Theni, India

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளையப்பன் (42). சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் திட்ட மேலாளராக பணியாற்றி வரும் இவர் கடந்த பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது அவரது ஊரை சேர்ந்த நண்பர்களான விஜயகுமார், கோவிந்தன் ஆகியோர் தொடர்பு கொண்டு, தங்களுக்கு தெரிந்த நபர்கள் ஹலாலா பணத்தை மாற்ற இருப்பதாகவும், அதன்படி 80 லட்சத்திற்கு 500ரூபாய் நோட்டுக்கள் கொடுத்தால் அதற்கு ஈடாக 2,000 ரூபாய் நோட்டுக்களாக 1கோடி ரூபாய் பணம் தரப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.‌ அதனை கேட்ட வெள்ளையப்பன் விடுமுறை முடிந்து மீண்டும் சென்னைக்கு பணிக்கு சென்றுள்ளார்.

இதையடுத்து சில நாட்கள் கழித்து மீண்டும் வெள்ளையப்பனை தொடர்பு கொண்ட கோவிந்தன், விஜயகுமார், ஹவாலா பணத்தை மாற்றுவது ரகசியமாக பெரும்பாலான இடங்களில் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது.‌ பினாமிகள் பெயரில் உள்ள பணத்தை இது போன்று தான் சிலர் மாற்றி வருவதாகவும், இதன் மூலம் சுலபமாக 20லட்சம் ரூபாய் வரை பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தைகள் கூறியுள்ளனர்.

அதனை உண்மை என நம்பிய வெள்ளையப்பன் சென்னையில் உள்ள தனது நிறுவனத்தின் உரிமையாளர் முருகராஜ், பங்குதாரர் கோவிந்தன்  உள்ளிட்டோரிடம் இந்த விவரத்தை கூறியுள்ளார். அவர்களும் பல கட்ட ஆலோசனைகளுக்கு பின் இதை  உண்மை என நம்பி ரூ. 60 லட்சத்தை மாற்றுவதற்கு ஒப்புக்கொண்டுள்ளனர். 60லட்சத்திற்கு, 75லட்சம் மாற்றிக்கொள்ளலாம் என தெரிவித்த கோவிந்தன், விஜயகுமார் பணத்தை தேனி மாவட்டத்திற்கு எடுத்து வருமாறு கூறியுள்ளனர்.‌

இதையும் படிக்க :  பிரபல ஜவுளிக்கடை உரிமையாளர் மீது இளம்பெண் பாலியல் புகார்... தேனியில் நடந்த பரபரப்பு சம்பவத்தின் பின்னணி

அதன்படி வெள்ளையப்பன் அவரது உரிமையாளர் முருகராஜ் உள்ளிட்டோர் கடந்த பிப்ரவரி 4ஆம் தேதியன்று 60லட்சம் ரூபாய் பணத்தை 500ரூபாய் நோட்டுக்களாக எடுத்துக் கொண்டு காரில் தேனி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளனர். தேனி பேருந்து நிலையம் அருகில் அவர்களுடன் காரில் இணைந்து கொண்ட விஜயகுமார், கோவிந்தன் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள டீக்கடைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அமர்ந்த போது தேனி அருகே உள்ள வீரபாண்டி கிராமத்தைச் சேர்ந்த யுவன், கார்த்திக் மற்றும் சண்முகம் ஆகியோரை வரவழைத்து இவர்கள் தான் பணத்தை மாற்றித் தருபவர்கள் எனக் கூறி அறிமுகம் செய்து வைத்துள்ளனர்.

அதன்படி அங்கிருந்த மூன்று நபர்களும் பணம் இருப்பதை உறுதி செய்து கொண்டு, பணம் மாற்றுவதற்கு ஆண்டிபட்டி அருகே உள்ள ஒரு தோட்டத்து பங்களாவிற்கு செல்ல வேண்டும் எனவும், அதுவும் ஒரே காரில் தான் போக வேண்டும் எனக்கூறி வெள்ளையப்பன் மற்றும் முருகராஜ் ஆகியோரை மட்டும் ஏற்றிக் கொண்டு சென்றுள்ளனர். கண்டமனூர் சாலையில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி அருகே சென்ற போது, காரில் இருந்த யுவன், கார்த்திக் மற்றும் சண்முகம் ஆகியோர் வெள்ளையப்பன், முருகராஜை கத்தியை காட்டி மிரட்டி அவர்களிடம் இருந்த பணம் ரூபாய் 60லட்சத்தை எடுத்துக் கொண்டு கீழே இறக்கி விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக கண்டமனூர் காவல் நிலையத்தில் வெள்ளையப்பன் புகார் அளித்தார். அதனடிப்படையில்  தேனி மாவட்டம் வீரபாண்டியைச் சேர்ந்த இளைஞர்கள் யுவன் என்ற யுவராஜ் (23), கார்த்திக் (23), சண்முகம் மற்றும் சிலர் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில் தலைமறைவாக இருந்த  இளைஞர்கள் யுவன் என்ற யுவராஜ், கார்த்திக்  ஆகிய இருவர் நேற்று கைது செய்யப்பட்டனர். கண்டமனூர் காவல் நிலையத்தில் அவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கோவிந்தனின் தூண்டுதலில் இதை செய்ததாக கூறியுள்ளனர். மேலும் மோசடி பணத்தை இரண்டு குழுக்களாக பிரிந்து எடுத்து சென்றிருப்பது தெரியவந்தது.  அதில் யுவராஜ் என்பவர் தனது தாயார் பெயரில் 20லட்சம் ரூபாய்க்கு சுமார் 1ஏக்கர் அளவிலான விவசாய நிலம் கிரையம் செய்ததாக கூறியுள்ளனர்.

இதையடுத்து மோசடி பணத்தில் வாங்கப்பட்ட விவசாய நிலத்தின் பத்திரம் மற்றும் அவர்களிிடம் இருந்து சுமார் 2.5 லட்சம் ரூபாய் வரை பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.‌ பின்  இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தொடர்பாக மேலும் சில நபர்களிடம் விசாரணை நடத்தி வருவதாகவும், விசாரணையின் முடிவில் தான் பண மோசடி குறித்த முழு விவரங்கள் தெரியவரும் என போலிசார் தெரிவித்தனர்.

செய்தியாளர் : பழனிகுமார் (தேனி)

First published:

Tags: Crime News, Theni