தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதரமாக திகழ்வது முல்லைப் பெரியாறு அணை. நூற்றாண்டு கடந்தும் இன்றளவும் உறுதியாக, கம்பீரமாக வீற்றிருக்கும் இந்த அணையை பல்வேறு இயற்கை இடர்பாடுகள், சிரமத்திற்கு இடையே தனது சொத்துக்களை விற்று கட்டியவர் ஆங்கிலேய பொறியாளர் கர்னல் ஜான் பென்னி குவிக். முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்ட பின்னர் தான் தென் தமிழகத்தில் வறண்ட பகுதியாக இருந்த 5 மாவட்டங்கள் தண்ணீர் தேவை பூர்த்தியாகிறது.
ஏறக்குறைய இரண்டரை லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதன் காரணமாக தான் அடிமையாக ஆட்சி செய்த ஆங்கிலேயர்களுக்கு மத்தியில் கர்னல் ஜான் பென்னி குவிக் மட்டும் 5 மாவட்ட மக்களின் மனங்களில் இன்றளவும் வாழ்கிறார். அதிலும் குறிப்பாக தை மாதத்தில் ஜனவரி 15ம் தேதி அவரது பிறந்த நாளை தேனி மாவட்ட மக்கள் சாதி, மதம் கடந்து சமத்துவ பொங்கலாக கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் பென்னி குவிக்கின் தியாகத்தை போற்றும் வகையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் கடந்த 2014ம் ஆண்டு தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பில் மணிமண்டபம் கட்டி அங்கு அவருக்கு முழு உருவ வென்கல சிலை நிறுவப்பட்டது. அதோடு அவருக்கு மேலும் புகழ்சேர்க்கும் விதமாக தேனியில் கட்டப்பட்ட பேருந்து நிலையத்திற்கும் அவரது பெயர் சூட்டப்பட்டது.
அதன் முத்தாய்ப்பாக கடந்த அதிமுக ஆட்சியில் பென்னி குவிக் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என 2019ம் ஆண்டு முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக 2020ம் ஆண்டு முதல் பென்னி குவிக்கின் பிறந்த நாள் தமிழக அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஜனவரி 15ம் தேதியான இன்று பென்னி குவிக்கின் 182வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதற்காக தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பில் உள்ள அவரது மணிமண்டபம் விழாக் கோலம் பூண்டிருந்தது. தேனி மாவட்ட மக்கள் மணிமண்டபம் முன்பாக பொங்கல் வைத்து கடவுளாக அவரை நினைத்து வழிபட்டனர். மேலும் மணிமண்டபம் வருகை தந்த பொதுமக்கள் சுற்றுலா பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசு சார்பில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மணிமண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த பென்னி குவிக்கின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதேபோல் தேனி மாவட்ட ஆட்சியர் முரளீதரன், திமுக எம்எல்ஏக்கள் கம்பம் ராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி மகாராஜன், பெரியகுளம் சரவணக்குமார் மற்றும் தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் உட்பட பல்வேறு அரசுத் துறை சார்ந்த அதிகாரிகளும் பென்னி குவிக்கின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதன் தொடர்ச்சியாக முன்னாள் அதிமுக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், பென்னகுயிக்கின் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் முன்னாள் கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன் தலைமையிலான அதிமுக எடப்பாடி பழனிச்சாமி அணியினர், பாஜக, கம்யூனிஸ்ட், நாம் தமிழர் கட்சி மற்றும் பல்வேறு விவசாய சங்கப் பிரதிநிதிகள், அமைப்பினர் என ஏராளமானோர் இன்று காலையில் இருந்து பென்னி குவிக்கின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பண்டிகை நாளான இன்று கோயில், சுற்றுலா தளங்களுக்கு செல்லும் தேனி மாவட்ட மக்கள் பென்னி குவிக்கின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது புகழ் மற்றும் தியாகத்தை அறியும் வகையில் லோயர் கேம்ப் மணிமண்டபத்திற்கு படையெடுத்தனர். மணிமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள அணை கட்டுமானம் தொடர்பான புகைப்படங்கள், அவர் பயன்படுத்திய சாய்வு நாற்காலி உள்ளிட்டவற்றை உச்சி முகர்ந்து பார்வையிட்டனர்.
இதனிடையே சின்னமனூர் அருகே உள்ள பாலார்பட்டி கிராம மக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒருங்கிணைந்து பென்னி குவிக் பிறந்தநாளை சமத்துவ பொங்கலாக கொண்டாடினர். சிறுவர்கள் அவரது உருவப்படத்தை ஏந்தியும், இளைஞர்கள் தேவராட்டம் ஆடியும், பெண்கள் பொங்கல் பானையை தலையில் சுமந்தவாறு ஊர்வலமாக வந்தனர். ஊர் கலையரங்கம் முன்பாக பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்த பெண்கள், பென்னிகுவிக்- கை நினைவு கூர்ந்து அவரை வழிபட்டு அங்கிருந்தவர்களுக்கு பொங்கல் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
40 ஆண்டு காலமாக முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தொடர்ந்து விஷமக் கருத்துக்களை பரப்பி வரும் கேரள மாநிலத்திற்கு தகுந்த பதிலடி கொடுத்து அணையின் நீர்மட்டத்தை 152அடியாக உயர்த்திட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடைமடை பகுதியான இராமநாதபுரம் மாவட்டம் வரை முல்லைப் பெரியாறு அணை நீர் சென்றடைந்தால் எந்த நோக்கத்திற்காக பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் தனது சொத்துக்களை இழந்து முல்லைப் பெரியாறு அணையை கட்டி எழுப்பினாரோ தாகம் தீர்த்த தந்தை கர்னல் ஜான் பென்னி குவிக் அவரது ஆன்மா சாந்தியடையும் என்கின்றனர் தேனி மாவட்ட மக்கள்.
செய்தியாளர் : பழனிகுமார் - தேனி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Theni