ஹோம் /நியூஸ் /தேனி /

ஸ்கூலுக்கு லேட்.. கடத்தியதாக சிறுவர்கள் பொய்.. கம்பளி விற்ற வடமாநிலத்தவர்களை அடித்து துவைத்த பொதுமக்கள்... தேனியில் அதிர்ச்சி சம்பவம்

ஸ்கூலுக்கு லேட்.. கடத்தியதாக சிறுவர்கள் பொய்.. கம்பளி விற்ற வடமாநிலத்தவர்களை அடித்து துவைத்த பொதுமக்கள்... தேனியில் அதிர்ச்சி சம்பவம்

பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள்

பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள்

பள்ளிக் குழந்தைகளைக் கடத்திவிட்டதாகப் பொதுமக்களால் வடமாநில இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Theni, India

  தேனி மாவட்டம் போடி அருகே உள்ள சில்லமரத்துப்பட்டியில் இயங்குகிறது  ஊராட்சி ஒன்றிய அரசு துவக்கப்பள்ளி. இங்கு 1 முதல் 5ஆம் வகுப்பு வரை உள்ளது. இந்த பள்ளியில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று அப்பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள் மூன்று பேர் பள்ளிக்கு வருகை தராதது குறித்து பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்களுக்கு தகவல் அளித்துள்ளனர்.

  இதனிடையே  சம்பந்தப்பட்ட மாணவர்களில் இருவர் தாமதமாக பள்ளிக்கு வந்துள்ளனர். மேலும் தகவல் அறிந்த பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து தாமதம் குறித்து மாணவர்களிடம் விபரம் கேட்டுள்ளனர். அதற்கு வழக்கம் போல பள்ளிக்கு வரும் வழியில் கம்பளி, போர்வை உள்ளிட்ட பொருட்களை  தள்ளுவண்டியில் வைத்து விற்பனை செய்யும் வடமாநிலத்தவர் தங்களை கத்தியை காட்டி மிரட்டி கடத்த முயன்றதாக தெரிவித்துள்ளனர்.

  அதில் தாங்கள் இருவரும் தப்பியோடி வந்ததாகவும், ஒரு சிறுவனை மட்டும் போர்வைக்குள் சுற்றி தள்ளுவண்டியில் வைத்து கடத்தி சென்றதாக தெரிவித்தாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் தேவாரம் சாலையில்  சுமார் 4கி‌.மீ தொலைவில் உள்ள சிலமலை கிராமத்தில் தள்ளுவண்டியில் சென்று கொண்டிருந்த வடமாநிலத்தவரை பிடித்து அடித்துள்ளனர்.

  மேலும் வடமாநிலத்தவர் குழந்தைகளை கடத்தியதாக காட்டுத்தீ போல பரவிய வதந்தியால் சில்லமரத்துப்பட்டியில் உள்ள அரசுப் பள்ளியை  பெற்றோர்கள் முற்றுகையிட்டனர். இதற்கிடையே காணாமல் போனதாக சொல்லப்பட்ட சிறுவனும் சிறிது நேரத்தில் வீட்டில் இருந்து  பள்ளிக்கு வந்துள்ளான். தகவல் அறிந்து வந்த போடி காவல்துறையினர் சம்பந்தப்பட்ட நபரிடம் நடத்திய விசாரணையில்,  மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த திலீப் எனவும், போடியில் இருந்து வாடகைக்கு தள்ளுவண்டி எடுத்து பொருட்களை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

  மேலும் கம்பளி, போர்வை உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யும் அவர் குழந்தைகளை ஏதும் கடத்தவில்லை என அங்கிருந்த சிசிடிவி கேமிராக்கள் மற்றும் சிறுவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது‌. சம்பந்தப்பட்ட சிறுவர்கள் பள்ளிக்கு செல்லாததை மறைப்பதற்காக தங்களை வடமாநிலத்தவர் கடத்தியதாக பொய் புகார் கூறி நாடகமாடியது தெரியவந்தது.

  இது போன்ற குழந்தைகள் கடத்தப்படுவதாக எழுகின்ற புகாரின் உண்மைத் தன்மையை ஆராயாமல் பொதுமக்கள் யாரும் உணர்ச்சி வசப்பட வேண்டாம் எனவும்,  காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் போடி காவல் துணைக் கண்காணிப்பாளர் சுரேஷ் தெரிவித்தார்.

  Also see... நிர்வாண மாடலிங்.. இன்ஸ்டாவில் பழக்கம்.. இளம்பெண்ணை ஆபாசமாக மார்ஃபிங் செய்த இயக்குநர்.!

  மேலும் சமூக வலைதளங்கள் உட்பட ஊடகங்களிலும் இது போன்ற புகார்களின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து பகிரப்படும் தகவல்களால் தேவையற்ற பீதி உண்டாகக்கூடும் என்பதால் அவற்றை தவிர்க்க வேண்டும். சம்பந்தப்பட்ட சிறுவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

  பள்ளி செல்லாமல் ஊர் சுற்றியதை மறைப்பதற்காக சிறுவர்களின் கடத்தல் நாடகம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  செய்தியாளர்: பழனிக்குமார், தேனி

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Child, Kidnap, Theni