மதுரை ஆதீனம் அல்ல, காவி துண்டு அணிந்த ஒரு நபரைக்கூட
திமுகவினர் எதுவும் செய்து விட முடியாது.
தேனியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அமைச்சர் சேகர்பாபுவிற்கு
பாஜக ஹெச்.ராஜா பதிலளித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் 8ஆண்டு கால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் தேனியில் நடைப்பெற்றது. தேனி மாவட்ட பாஜக சார்பில் தேனி பங்களாமேடு பகுதியில் நடைபெற்ற இந்த பொதுக் கூட்டத்தில் அகில இந்திய பாஜக செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்திய தேசத்தில் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களின் நலனை கருத்தில் கொண்டு திட்டங்களை செயல்படுத்தியது மோடியின் அரசு தான். அண்மையில் தமிழகம் வருகை தந்த பிரதமர் மோடி, மாநிலத்தின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டி தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்தார்.
பிரதமர் பங்கேற்ற கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், நீட் தேர்வு ரத்து, கச்சத்தீவை மீட்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வைக்கிறார். உண்மையில் நீட் தேர்வு காங்கிரஸ் - திமுக கூட்டணியில் கடந்த 2010ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டமாகும். அதற்கு தடை விதித்த போது உச்சநீதிமன்றத்தில் வழக்காடி அனுமதி பெற்று தந்தவர் காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் தான். எனவே முதலமைச்சர் ஸ்டாலின், நளினி சிதம்பரத்திடம் நீட் தேர்விற்கு விலக்கு கேட்க வேண்டும், இல்லை உச்சநீதிமன்றத்தின் கதவை தட்ட வேண்டும்.
அதை விடுத்து சட்டமன்றத்தில் அமைச்சரவையில் சட்டம் இயற்றி அதனை கவர்னருக்கு அனுப்புவது, பிரதமரிடம் கோரிக்கை விடுப்பது எல்லாம் தேவையற்றது என்றார். அதே போல கச்சத்தீவை அன்றைய இந்திராகாந்தி அரசு இலங்கைக்கு தாரை வார்த்த போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்தது கருணாநிதி தலைமையிலான திமுக அரசு தான். அதனை தற்போது பிரதமர் மோடி மீட்கப் போகிறார் என்ற செய்தி வெளியாவதால் அதற்கு முன்பாக முந்திக் கொண்டு கோரிக்கை விடுப்பதாக கூறினார்.
Also Read: கோயில் உண்டியல் மீதே அறநிலையத்துறைக்கு அக்கறை உள்ளது - அண்ணாமலை பேச்சு
தொடர்ந்து பேசிய அவர், கோயில் நிலம் ஆக்கிரமிப்பு விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த மதுரை ஆதீனத்திற்கு இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மிரட்டல் விடுத்திருப்பது கண்டனத்திற்குரியது. மதுரை ஆதீனம் அல்ல, காவி துண்டு அணிந்த ஒரு நபரைக்கூட திமுகவினர் எதுவும் செய்து விட முடியாது. மேலும் மதுரை ஆதீனம் விவகாரத்தில் பேசிய அமைச்சர் சேகர் பாபு, முதலமைச்சர் ஸ்டாலின் தங்களை அடக்கி வைத்திருப்பதாக பேசியிருக்கிறார். காதல் திருமணம் செய்து கொண்ட அவரது மகள் மற்றும் மாப்பிள்ளை, அமைச்சர் சேகர்பாபுவிடம் இருந்து பெங்களூரு போலீசார் உயிர் பாதுகாப்பு வழங்க உதவிடுமாறு தன்னிடம் கேட்ட ஆதாரங்கள் உள்ளன. எனவே அவரது அடாவடி செயலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
நீர் நிலைகளில் கோயில்கள் ஆக்கிரமிப்பில் இருப்பதாக கூறும் தமிழக அரசு, சென்னை வள்ளுவர் கோட்டம், மதுரையில் உள்ள உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உள்ளிட்ட சில இடங்களும் நீர் நிலை ஆக்கிரமிப்பில் இருப்பதாக தெரிவித்தார். அவற்றை எல்லாம் என்ன செய்யப் போகிறது என்று கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் ஒரு பயங்கர செயல் உருவாக இருப்பதாகவும், அது குறித்து தமிழக உளவுத்துறை அதிகாரி ஒருவர் தொடர்பாக டெல்லி வட்டாரங்கள் தன்னிடம் தெரிவித்ததாக கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
தமிழகத்தில் தேச விரோதம் பலப்படுத்தப்பட்டு வருவதாகவும், தேச விரோதிகள் உருவாகி வருவதாக டெல்லிக்கு புகார்கள் செல்கின்றன. மேலும் தமிழ்நாட்டில் இந்துக்கள் மீது திட்டமிட்ட தாக்குதல் நடைபெறுவதாக குற்றம் சாட்டினார். இந்த பொதுக் கூட்டத்தில் பாஜக மாநில செயலாளர் சீனிவாசன், தேனி மாவட்ட தலைவர் பி.சி.பாண்டியன் உட்பட ஏராளமான பாஜகவினர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: பழனிக்குமார் (தேனி)
உங்கள் நகரத்திலிருந்து(Theni)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.