தை மாதம் 2ம் நாளான இன்று மாட்டுப்பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் உழவுக்கு உதவிடும் கால்நடைகளுக்கு நன்றி சொல்லும் விதமாக ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை விவசாயிகள் வணங்குவார்கள். அந்த வகையில் தேனி மாவட்டத்தில் உள்ள தம்பிரான் மாட்டு தொழுவத்தில் வளர்க்கப்படும் மாடுகளை விவசாயிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் வணங்கி வழிபட்டனர். அந்த வகையில், தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீநந்தகோபால சுவாமி தம்பிரான் மாட்டுத்தொழுவம். ஒக்கலிகர் சமூகத்திற்கு பாத்தியப்பட்ட இந்த மாட்டுத்தொழுவத்தை அப்பகுதி மக்கள் கோயிலாக வழிபடுகின்றனர்.
இங்கு மூலவர் என்று தனி சன்னிதானம் ஏதும் கிடையாது. தொழுவத்தில் வளர்க்கப்படும் காளைகளில் ஒன்றை பட்டத்துக்காளையாக தேர்ந்தெடுத்து அதற்கு பூஜை செய்து வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. இத்தகைய பிரசித்தி பெற்ற இந்த தொழுவத்தில் ஒவ்வொரு ஆண்டும் தை 2ம் நாளான மாட்டு பொங்கலன்று சிறப்பு வழிபாடு நடைபெறும். தேனி மாவட்டம் கம்பம், கூடலூர், சின்னமனூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் தாங்கள் வளர்க்கும் பசு மாடுகள் உடல் நலம் வேண்டி இங்கு வழிபடுவர். மேலும் இந்த தொழுவத்திற்கு புதிதாக மாடுகள் வாங்கி நேர்த்திக்கடனாக செலுத்துவர். அதோடு மட்டுமல்லாமல், தை 2ம் நாள் பிறக்கிற கன்றுகளை இந்த தொழுவத்திற்கே கொடுத்து விடுவார்கள்.
இந்நிலையில், இந்த ஆண்டிற்கான சிறப்பு வழிபாடு மாட்டு பொங்கலான இன்று தை 2ம் நாளில் நடைபெற்றது. இதற்காக காலையிலிருந்தே தேனி மாவட்ட மக்கள், விவசாயிகள், கோயில் சமூகத்திற்கு பாத்தியப்பட்ட மக்கள் என ஏராளமானோர் பக்தி பரவசத்துடன் குவியத் தொடங்கினர். பெண்கள் தொழுவத்தின் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர். சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்த பட்டத்துக்காளையை பக்தர்கள் வணங்கி சென்றனர்.
இந்த ஒரு நாள் வழிபாட்டிற்காக மலைகளில் இருந்து வந்திருந்த சுமார் 500க்கும் மேற்பட்ட நாட்டு மாடுகளுக்கு விவசாயிகள், பொதுமக்கள், குழந்தைகள் என பலரும் அகத்திக்கீரை, சோளத்தட்டை, வாழைப்பழம் உள்ளிட்டவைகளை அளித்து வணங்கி வழிபட்டனர். வருடத்தில் ஒரு நாள் மட்டும் நாட்டு மாடுகள் சங்கமிக்கும் இந்நிகழ்வை காண்பதற்காக தேனி மாவட்டத்தை சுற்றியுள்ள மக்கள் ஏராளமானோர் குவிந்தனர்.
செய்தியாளர் : பழனிகுமார் - தேனி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Pongal 2023, Theni