ஹோம் /நியூஸ் /தேனி /

வீட்டு மாடியில் மஞ்சள் தடவி காயவைக்கப்பட்ட சிறுத்தை தோல்.. தேனியில் வனத்துறை தீவிர விசாரணை

வீட்டு மாடியில் மஞ்சள் தடவி காயவைக்கப்பட்ட சிறுத்தை தோல்.. தேனியில் வனத்துறை தீவிர விசாரணை

சிறுத்தை தோல்

சிறுத்தை தோல்

Theni News : வீட்டின் மேல் மாடியில் சிறுத்தை தோல் மஞ்சள் தடவி காயவைத்த துரைப்பாண்டியன் வனத்துறையினர் வருகையை அறிந்து தப்பியோடி தலைமறைவாகியுள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Theni, India

  தேனி அருகே ஊராட்சி மன்ற முன்னாள் கவுன்சிலரின் பூட்டிய வீட்டின் மாடியில் இருந்து சிறுத்தை தோலை வனத்துறையினர் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

  தேனி வனக்கோட்டம்,  ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகம் என இரு வனப்பரப்புகளை கொண்டது.‌ இங்கு புலி, யானை, சிறுத்தை, சிங்கவால் குரங்கு, இருவாச்சி பறவை, காட்டு மாடு, மான் உள்ளிட்ட வன விலங்குகள் ஏராளமானவை வசித்து வருகின்றன.

  இந்நிலையில், அண்மையில் கடந்த சில மாதங்களாக தேனி மாவட்டத்தில் சிறுத்தை தொடர்பான சர்ச்சை எழுந்து வருகிறது.‌ தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வறட்டாறு கோம்பை வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி வேலியில் சிக்கிய பெண் சிறுத்தையை மீட்கச்சென்ற அப்போதைய தேனி மாவட்ட உதவி வன பாதுகாவலர் மகேந்திரனை சிறுத்தை தாக்கியதாக கூறப்பட்டது.

  இதையும் படிங்க : Gold Rate | மீண்டும் குறைந்தது தங்கம் விலை... இன்றைய விலை நிலவரம் என்ன?

  இதையடுத்து அதற்கு மறுநாள் செப்டம்பர் 28ம் தேதி கோம்பை வனப்பகுதியை ஒட்டியுள்ள ரவீந்திரநாத் எம்.பி.யின் தோட்டத்தில் ஆண் சிறுத்தை ஒன்று இறந்த நிலையில் கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய வனத்துறையினர் ரவீந்திரநாத் எம்.பி.யின் தோட்டத்தில் தற்காலிகமாக ஆடு கிடை அமைத்திருந்த ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் என்பவர் சுருக்கு வேலி வைத்ததாக கைது செய்தனர்.

  அதற்கு தமிழ்நாடு கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்த பின்  ரவீந்திரநாத் எம்.பி.யின் தோட்ட மேலாளர்கள் தங்கவேல் ராஜவேல் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.‌

  மீட்கப்பட்ட சிறுத்தை தோல்

  இதனிடையே வேட்டையாடப்பட்டிருக்கலாம், விஷம் வைத்து கொன்றிருக்கிலாம் அல்லது உறுப்புகள் விற்பனைக்காக கொல்லப்பட்டிருக்கலாம் என ரவீந்திரநாத் எம்.பி.யின் தோட்டத்தில் சிறுத்தை உயிரிழந்தது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியது.

  இதற்கிடையே  வனத்துறையினர் விசாரணைக்கு நேரில் ஆஜரான ரவீந்திரநாத் எம்.பி சிறுத்தையின் மரணம் தொடர்பாக முழ ஒத்துழைப்பு அளிக்க தயாராக இருப்பதாகவும், உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார்.

  இதையும் படிங்க : வாரிசு படத்துக்கு சிக்கல்... தமிழகத்தில் தெலுங்குத் திரைப்படங்களை வெளியிட விடமாட்டோம் - சீமான் எச்சரிக்கை

  இந்நிலையில்,பெரியகுளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சிறுத்தையின் தோல் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் நேற்று  வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

  அப்போது வடபுதுப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அம்மாபட்டி கிராமத்தில் உள்ள துரைப்பாண்டியன்(50) என்பவரது பூட்டிய வீட்டின் மாடியில் இருந்து சிறுத்தையின் தோல் ஒன்றை கைப்பற்றினர்.

  இதுதொடர்பாக தேனி வனத்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், விவசாயியான துரைப்பாண்டியன் மாடுகள் வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகிறார். மேலும் கடந்த 2011ம் ஆண்டு முதல் 16ம் ஆண்டு வரையில் வடபுதுப்பட்டி ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினராகவும் பதவி வகித்தது தெரியவந்தது.

  அவரது வீட்டின் மேல் மாடியில் சிறுத்தை தோல் மஞ்சள் தடவிய நிலையில் காய வைக்கப்பட்டிருந்ததாகவும், வனத்துறையினர் வருகையை அறிந்த துரைப்பாண்டியன் தப்பியோடி தலைமறைவாகி விட்டதாகவும், அவரை தீவிரமாக தேடி வருவதாகவும் வனத்துறையினர் கூறினர்.

  மேலும் அவரிடம் மேல் விசாரணை நடத்தினால் தான் இந்த சிறுத்தையின் தோல் எங்கிருந்து எடுத்து வரப்பட்டது. அல்லது வேட்டையாடப்பட்டதா? இல்லை வேறு யாருக்கெல்லாம் இதில் தொடர்பு இருக்கிறது எனத் தெரியவரும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.‌

  தொடர்ந்து தேனி மாவட்டத்தில் சிறுத்தை தொடர்பாக நிலவும் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து உண்மையான குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

  செய்தியாளர் : பழனிகுமார் - தேனி

  Published by:Karthi K
  First published:

  Tags: Crime News, Theni