புஷ்பா பட பாணியில் ஆந்திராவில் இருந்து தேனி மாவட்டத்திற்கு கருவாட்டு கூடைகளுக்கு மத்தியில் சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 3கோடி ரூபாய் மதிப்பிலான 1,200கிலோ கஞ்சா பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திர மாநிலத்தில் இருந்து தென் தமிழகத்திற்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் தென் மண்டல ஐ.ஜி. அஸ்ராகார்க் தலைமையிலான தனிப்படையினர் தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி அருகே உள்ள மதுரை மாவட்ட எல்லையான திம்மரசநாயக்கனூர் சோதனைச் சாவடியில் சந்தேகத்திற்கு இனங்க வந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்தனர். அதில் புஷ்பா பட பாணியில் லாரியில் இருந்த கருவாட்டு கூடைகளுக்கு மத்தியில், சுமார் 50 கிலோ எடையளவில் 25க்கும் மேற்பட்ட மூட்டைகளில் கஞ்சா பதுக்கியிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து சரக்கு வாகனத்துடன் அதில் வந்த நபர்களை ஆண்டிபட்டி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து ஐ.ஜி.தனிப்படையினர் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம், அபுபக்கர் சித்திக் ((35), எளுவனூர் தாலுகாவை சேர்ந்த செல்வராஜ் (32), சின்னச்சாமி (25) என்பதும், ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து கஞ்சா கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த ஆண்டிபட்டி போலீசார் வாகனத்தில் இருந்த சுமார் 3கோடி மதிப்பிலான 1,200கிலோ கஞ்சாவை கைப்பற்றி மூவரையும் கைது செய்தனர். பின் அனைவரையும் உத்தமபாளையம் நீதிமன்றத்தில் நீதிபதி இராமநாதன் முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட கஞ்சா தென் தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளில் விற்பனை செய்ய இருந்தார்கள், இதில் வேறு யாருக்கும் எல்லாம் தொடர்பு இருக்கிறது என ஐ.ஜி.தனிப்படையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திரைப்பட பாணியில் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வரப்பட்ட சம்பவம் தேனி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்: பழனிகுமார்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Theni