Home /News /theni /

எனக்கு பதவி ஆசையா..! எடப்பாடி பழனிச்சாமி பதவியை ராஜினாமா செய்யத்தயாரா.? - ஓ.பி.எஸ் சவால்

எனக்கு பதவி ஆசையா..! எடப்பாடி பழனிச்சாமி பதவியை ராஜினாமா செய்யத்தயாரா.? - ஓ.பி.எஸ் சவால்

ஓபிஎஸ்

ஓபிஎஸ்

Theni | தன்னை பதவி ஆசை பிடித்தவர் எனக்கூறும் எடப்பாடி பழனிச்சாமி தனது பதவியை ராஜினாமா செய்யத்தாரா? மக்களை சந்திக்க நான் தயார் என ஆதரவாளர்கள் மத்தியில் ஓ.பி.எஸ் சவால் விட்டார்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Theni, India
    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் உள்ள தனது பண்ணை வீட்டில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்,  மதுரை மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை சந்தித்தார். மதுரை புறநகர் மாவட்ட கழக செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்தனர்.‌ அப்போது சால்வை, மலர் மாலை மற்றும் பூங்கொத்து கொடுத்து அதிமுகவினர் ஓ.பி.எஸ்-க்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

    அப்போது பேசிய ஓ.பி.எஸ், ”ஜெயலலிதா மறைவுக்குப் பின் நடந்த பல்வேறு சோதனைகள் மற்றும் தர்மயுத்தத்திற்கு பிறகு இன்றைக்கு நம்முடன் எதிரும் புதிருமாக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நான்காண்டுகள் அதிமுக ஆட்சி செய்தது. பின்னர் யார் கண் பட்டதோ இன்றைக்கு நாம் பிரிந்திருக்கிறோம். அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பதே எனது விருப்பம். அதுவே முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரது மட்டுமல்லாமல் மக்களின் விருப்பமாக இருக்கிறது.‌ ஆனால் அதனை சிலர் ஏற்க மறுக்கின்றனர்.

    ஜூன் 23ஆம் தேதியன்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்திற்கு நான் செல்லும் போது, என்னை வர விடாமல் தடுப்பதற்காக வேண்டும் என்றே என் இல்லம் அமைந்திருக்கும் பகுதியில் எடப்பாடி பழனிச்சாமிக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது. ஆனால் காவல்துறையினர் உதவியுடன் பொதுக்குழு கூட்ட மேடைக்கு சென்றேன். அங்கேயும் எடப்பாடி பழனிச்சாமி வந்ததும் அவருடன் சேர்ந்து செல்லுங்கள் என மகாலிங்கம் சொன்னதால் அவருக்காக நான் காத்திருந்தேன். ஆனால் வந்ததும் என்னுடன் இணைந்து மேடைக்கு செல்லாமல் எடப்பாடி பழனிச்சாமி தனியே சென்றார்.‌ அதையும் பெரிதுப்படுத்தாமல் பொதுக்குழு கூட்ட மேடைக்கு சென்றேன். அதன் பின்னர் நடந்தது எல்லாம் அனைவருக்கும் தெரியும்” என்றார்.‌

    அதனைத் தொடர்ந்து பேசியவர், இந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளராக நான்காண்டுகள் இருந்த என்னை பொதுக்குழு கூட்டத்தில் பேச விடாமல் தடுத்தும், குண்டர்கள், ரவுடிகளை வைத்து அராஜகம் செய்தார்கள். அதனை இந்த இயக்கத்தை கட்டி காப்பாத்த போகிறோம் என்று தப்பட்டம் அடிக்கும் தலைமைக் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் என யாரும்  தடுக்கவில்லை, கட்டுப்படுத்தவும் இல்லை” எனக் கூறினார்.

    மேலும்,” ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இல்லாமல் அவசர அவசரமாக ஜூலை 11ஆம் தேதியன்று பொதுக்குழு கூட்டம் என்று மேடையில் அறிவித்தார்கள். ஆனால் அன்றைய பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்காமல் சில மாவட்ட செயலாளர்கள் தலைமைக் கழக அலுவலகத்தில் இருந்து கொண்டு என்னை உள்ளே விடாமல் தடுப்பதற்காக காத்திருந்தனர்” என்றார்.

    ”அதிமுக தலைமை கழக அலுவலகம் என்ன அவர்கள் அப்பன் வீட்டு சொத்தா எனக் கேள்வி எழுப்பினார். இது  தொண்டர்களுடைய  சொத்து. கட்சிக்காக ஜானகி அம்மையார் வழங்கினார். மேலும் அலுவலகத்தில் உள்ளே புகுந்து நான் திருடி சென்றதாக கூறுகின்றனர். என் வீட்டில் நான் ஏன் திருடப்போகிறேன் என்றார். மேலும் எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின் நடைபெற்ற தேர்தலில்  போடி தொகுதியில் ஜானகி அணியை சேர்ந்த நடிகை நிர்மலாவிற்கு ஏஜென்டாக செயல்பட்டதாக கூறுகின்றனர்.

    உண்மையிலேயே அப்போது போடி தொகுதியில் நிர்மலாவுக்கு ஏஜென்டாக வழக்கறிஞர்களான ஜெயக்குமார், ராஜ்மோகன் ஆகியோர் தான் பணிபுரிந்தனர்.‌ நான் பணிபுரிந்தேன் என என் மீது ஏதாவது குறை  சொல்ல வேண்டும் என்பதற்காக பேசி வருகிறார்கள்” எனக் கூறினார்.

    மேலும்,”  2019ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் அதிமுகவின் தோல்வி குறித்து தலைமைக் கழகத்தில் கூட்டம் நடைபெற்றது.‌ அப்போது நான் உள்பட அமைச்சர்கள் 10 பேர் ராஜினாமா செய்து விட்டு ஒவ்வொருத்தரும் தலா 4 அல்லது 5 மாவட்டங்களில் கட்சி வேலை செய்து மீண்டும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவோம் எனக் கூறினேன். அதற்கு யாரும் முன்வரவில்லை.‌ 2008 முதல் நடைபெற்ற அனைத்து சட்டமன்ற இடைத்தேர்தலிலும் கட்சியின் தேர்தல் பொறுப்பாளராக ஜெயலலிதா என்னை நியமித்தார்.‌

    Also see...டேஞ்சர் டிரைவிங்.. அபராதம் விதித்த போலீஸ்.. சாபம் விட்ட வாகன ஓட்டி

    பதவி ஆசை பிடித்தவர் என என்னைச் சொல்லும் எடப்பாடி பழனிச்சாமி தனது பதவியை ராஜினாமா செய்யத் தயாரா? நான் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன். மக்களை சந்திப்போம் யாருக்கு ஆதரவு இருக்கிறது எனத்தெரியவரும்” என ஆதரவாளர்கள் மத்தியில் எடப்பாடி பழனிச்சாமிக்கு சவால் விடுத்து ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

    செய்தியாளர்:பழனிக்குமார், தேனி
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: ADMK, OPS - EPS, Theni

    அடுத்த செய்தி