தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டி மலையில் உள்ள கைலாசநாதர் கோயிலில் தீபத்திருவிழா நடைபெற்றது. நூற்றாண்டு பழமையான இந்த கோயில் ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்தினரின் முயற்சியால் கடந்த 2012-ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது. இதையடுத்து, ஆண்டு தோறும் திருக்கார்த்திகை அன்று, ஓபிஎஸ் அல்லது அவரது குடும்பத்தினர் தான் தீபம் ஏற்றி வந்தனர்.
இந்நிலையில், திமுக தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்கதமிழ்செல்வன் மற்றும் திமுக எம்.எல்.ஏ. சரவணக்குமார் ஆகியோர், பெரியகுளம் பாலசுப்ரமணியர் கோயில் பெண் செயல் அலுவலர் மூலம் தீபத்தை ஏற்றி வைக்க மேடையேறினர்.
அப்போது, தீபம் ஏற்ற வந்த ஜெயபிரதீப்க்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் அங்கிருந்த திமுக மற்றும் அதிமுகவினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதேநேரம், ஜெயபிரதீப் கொண்டு வந்த தீபத்தை அர்ச்சகர் முதலில் ஏற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுகவினர் அவரது வேட்டியை பிடித்து இழுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
உடனே மேடையில் இருந்து கீழே இறங்கிய தங்கதமிழ்செல்வன் மற்றும் பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணக்குமார் அங்கிருந்து சென்றனர். பின்னர் வழக்கம் போல தீப்பந்தம் மற்றும் சொக்கப்பனை கொளுத்தப்பட்டன. இதையடுத்து கோயில் மேடை முன் வந்த ஓ.பி.எஸ். மகன் ஜெயபிரதீப், ஆன்மீக தளத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இது போன்று செயல்பட்டவர்களை தெய்வம் பார்த்துக் கொள்ளட்டும் என ஆவேசத்துடன் பேசினார்.
Also see... தென்காசிக்கு இன்றிரவு ரயிலில் செல்லும் முதல்வர் ஸ்டாலின்!
திமுக - அதிமுகவினருக்கு இடையே ஏற்பட்ட இந்த வாக்குவாதத்தால் வழக்கமாக கைலாசநாதர் கோயிலில் ஏற்ற வேண்டிய தீபம் தாமதமாக நடைபெற்றதால் அங்கு வந்த பக்தர்கள் அதிருப்தி அடைந்தனர்.
இதையடுத்து இரவில் கைலாசநாதர் கோயிலுக்கு வந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்ட கொப்பரையில் ஒரு குடம் நெய் ஊற்றி வழிபட்டு பின் சுவாமி தரிசனம் செய்து விட்டு சென்றார்.
இதற்கிடையே கைலாசநாதர் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்வில் ஓ.பி.எஸ் குடும்பத்தினருக்கு அளித்த முக்கியத்துவம் குறித்து தேனி மாவட்ட ஆட்சியர் முரளீதரனை அவரது முகாம் அலுவலகத்தில் நேரில் சந்தித்து திமுக தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்கதமிழ்செல்வன் மற்றும் பெரியகுளம் திமுக எம்.எல்.ஏ சரவணக்குமார் புகார் அளித்தனர்.
அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயிலில் அதிமுக முன்னாள் முதலமைச்சரின் குடும்பத்தினருக்கு முன்னுரிமை அளித்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்ததாக தங்கதமிழ்செல்வன் தெரிவித்தார்.
செய்தியாளார்: பழனிக்குமார், தேனி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: DMK, Karthigai Deepam, OPS, Theni