முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் ஓ.பழனியம்மாள்(95) உடல்நலக்குறைவால் நேற்றிரவு உயிரிழந்தார். தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை அக்ரஹாரத் தெருவில் உள்ள ஓ.பி.எஸ்-ன் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு இன்று காலையில் இருந்தே அதிமுக ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள், அமமுக, திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் என பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், அமைப்பினர் மற்றும் உறவினர்கள், குடும்பத்தினர் என சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், மாலையில் ஓபிஎஸ் தாயாரின் உடல் தகனம் செய்வதற்காக பெரியகுளம் நகராட்சி மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. முன்னதாக ஓபிஎஸ் குடும்ப வழக்கப்படி இறுதிச் சடங்குகள் அவரது வீட்டில் நடைபெற்றது. அதில் ஓபிஎஸ் சகோதர - சகோதரிகள், மகன், மகள்கள் மற்றும் பேரப்பிள்ளைகள் பங்கேற்றனர். பின் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வைக்கப்பட்ட ஓபிஎஸ் தாயார் பழனியம்மாளின் உடல் டிராக்டர் மூலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
இந்த இறுதி ஊர்வலத்தில் ஓ.பன்னீர்செல்வம், அவரது சகோதரர் ஓ.ராஜா, ஓ.சண்முகசுந்தரம், மகன் ஓ.பி.ரவீந்திரநாத் எம்.பி. உள்ளிட்ட அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், உசிலம்பட்டி எம்.எல்.ஏ. அய்யப்பன், பழனி முன்னாள் எம்எல்ஏ சுப்புரத்தினம், மருது அழகுராஜ், புகழேந்தி உள்ளிட்ட ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இதனைத்தொடர்ந்து தென்கரை தெற்கு அக்ரஹாரத் தெருவில் இருந்து கிளம்பிய ஊர்வலம், தேனி - பெரியகுளம் சாலையில் உள்ள தேவர் சிலை, மூன்றாந்தல் காந்தி சிலை, தண்டுபாலம் வழியாக வடகரை சென்று அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை அருகே உள்ள பெரியகுளம் நகராட்சிக்கு சொந்தமான மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு தனது தாயாரின் சிதைக்கு ஓ.பன்னீர்செல்வம் தீ மூட்டினார்.
செய்தியாளர் : பழனிகுமார் - தேனி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, OPS, Theni