Home /News /theni /

தேனியில் பூங்கா அமை​க்க​​ தோண்டப்பட்ட பள்ள​த்தில் தவறி விழுந்து 8​ ​வயது சிறுமி​ உயிரிழப்பு...

தேனியில் பூங்கா அமை​க்க​​ தோண்டப்பட்ட பள்ள​த்தில் தவறி விழுந்து 8​ ​வயது சிறுமி​ உயிரிழப்பு...

பள்ளத்தில் விழுந்து சிறுமி உயிரிழப்பு

பள்ளத்தில் விழுந்து சிறுமி உயிரிழப்பு

Theni | தேனி அருகே சமத்துவபுரம்  பூங்காவில்  தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் தவறி விழுந்து 8வயது சிறுமி உயிரிழந்தார். உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியரிடம் சிறுமியின் தந்தை மனு அளித்தார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Theni, India
  தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவிற்கு உட்பட்ட மூலக்கடை அருகே உள்ள மந்திச்சுனை கிராமத்தைச் சேர்ந்த தம்பதியர் முத்து சரவணன் - கார்த்திகா. இவர்களுக்கு ராஜகணேஷ் மற்றும் ஹாசினி ராணி என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதில் 8 வயது சிறுமி ஹாசினி ராணி அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வந்தார்‌.

  கூலித்தொழிலாளியான முத்து சரவணன்,  சின்னமனூர் அருகே வசித்து வரும் தனது மாமனார் ரெங்கநாதன் வீட்டிற்கு குடும்பத்தினருடன் கடந்த 4 தினங்களுக்கு முன் சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று வழக்கம் போல ரெங்கநாதனின்  வீட்டருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுமி ஹாசினி ராணி நீண்ட நேரமாகியும் வராததால் அக்கம் பக்கம் முழுவதும் குடும்பத்தினர் தேடியுள்ளனர்.‌

  அப்போது சமத்துவபுரம் பகுதியில் உள்ள பூங்கா விரிவாக்கப் பணிகளுக்காக ஓடைப்பட்டி பேரூராட்சி சார்பில் தோண்டப்பட்ட சுமார் 5அடி ஆழம் கொண்ட பள்ளத்தில், தேங்கியிருந்த தண்ணீரில் சிறுமியின் காலணி மிதந்ததையடுத்து அங்கு தேடி பார்த்தனர்.  அதில் இறந்த நிலையில் சடலமாக சிறுமி மீட்கப்பட்டார்.

  இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஓடைப்பட்டி காவல்துறையினர் சிறுமியின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு  உடற்கூறாய்வு செய்த பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு சிறுமியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

  மேலும் இது தொடர்பாக உத்தமபாளையம் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று  விசாரணை நடத்தினர். இது குறித்து சிறுமியின் தந்தை முத்து சரவணன் அளித்த புகாரில் ஓடைப்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  இந்நிலையில் தனது மகளின் மரணம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி சிறுமியின் தந்தை முத்து சரவணன் நேற்று மாலை தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தார். அவருடன் அவரது உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்களும் வந்தனர். முதலில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் பேரூராட்சிகள் உதவி இயக்குநரிடம் புகார் அளிப்பதற்கு அவர்கள் சென்றனர்.

  மேலும் படிக்க: ஆவடி அருகே நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவி தற்கொலை

  ஆனால் உதவி இயக்குநர் வீடியோ காண்பரன்ஸில் இருப்பதாக அலுவலர்கள் தெரிவித்ததால் அலுவலகத்தை விட்டு வெளியேறினர்.‌ இதனிடையே  தகவல் அறிந்து அலுவலகத்திற்கு ஆட்சியர் முரளீதரன் வருவதற்குள் சம்பந்தப்பட்டவர்கள் அவர்களது ஊருக்கு புறப்பட்டனர். பின் பாதிக்கப்பட்டவர்களை  சந்திப்பதற்காக சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அலுவலக நுழைவாயிலில் ஆட்சித்தலைவர் காத்திருந்தார்.

  அதன் பின்னர் அங்கு வந்த முத்து சரவணன் தனது மகளின் மரணம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இது போன்று மற்றுமொரு உயிர் பலி ஏற்படக்கூடாது என்ற புகார் மனுவை ஆட்சியரிடம் வழங்கினார். அதனைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர், இது தொடர்பாக  உத்தமபாளையம் வட்டாட்சியர் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் அதன் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத்  தெரிவித்தார்.

  Also see... கோவை மேம்பாலத்தில் தொடர் விபத்துகளுக்கு காரணம் என்ன?

  மேலும் சிறுமியின் பிரிவால் வாடிய முத்து சரவணனுக்கு ஆறுதல் கூறியதோடு, சிறுமியின் மரணத்திற்கு அரசு  சார்பில் நிவாரணம் வழங்குவதற்கு பரிசீலனை செய்வதாகக் கூறினார். இதையடுத்து அங்கிருந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

  குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் தோண்டப்பட்ட பள்ளத்தில் மழை காலங்களில் தண்ணீர் தேங்கும் சூழ்நிலை இருப்பதால் அதற்கான எச்சரிக்கை பலகைகள், அறிவிப்புகள் அல்லது வேலிகள் அமைத்திருக்க வேண்டும். இது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏதும் மேற்கொள்ளாத பேரூராட்சி நிர்வாகம் மற்றும் ஒப்பந்ததாரரின் அலட்சியமே சிறுமியின் உயிரிழப்புக்குக் காரணம் என பாதிக்கப்பட்டவர் மற்றும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

  செய்தியாளர்: பழனிக்குமார், தேனி
  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Child, Crime News, Death, Theni

  அடுத்த செய்தி