முகப்பு /செய்தி /தஞ்சாவூர் / தமிழ்நாட்டு இளைஞரை சுட்டு கொன்ற ஆஸ்திரேலிய போலீஸ்.. பின்னணி என்ன?

தமிழ்நாட்டு இளைஞரை சுட்டு கொன்ற ஆஸ்திரேலிய போலீஸ்.. பின்னணி என்ன?

சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞர்

சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞர்

ரயில் நிலையத்தில் வேலை பார்த்து வந்த தூய்மைப் பணியாளரை இவர் கத்தியால் குத்தி விட்டதாகக் கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • interna, IndiaAustralia

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் தமிழ்நாட்டு இளைஞர் போலீசாரால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சிட்னி ரயில் நிலையத்தில் நடந்தது என்ன?

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்தவர் 32 வயதான முகமது ரஹ்மத்துல்லா. இவர், 2019ஆம் ஆண்டில் விசிட்டிங் விசாவில் ஆஸ்திரேலியா சென்று, அங்குள்ள உணவகத்தில் வேலை பார்த்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை ஆஸ்திரேலியாவின் சிட்னியில், அவ்பேர்ன் ரயில் நிலையத்தில் வேலை பார்த்து வந்த தூய்மைப் பணியாளரை இவர் கத்தியால் குத்தி விட்டதாகக் கூறப்படுகிறது.

அதன்பின் ஆவேசமாக சென்றவர் அருகில் உள்ள நியூ சவுத்வேல்ஸ் காவல் நிலையத்திற்குச் சென்று போலீசாரைத் தாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. போலீசாரை கத்தியால் தாக்க முற்பட்டபோது அவர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இந்த சம்பவத்தின்போது போலீஸ் அதிகாரி ஒருவர் ரஹமத்துல்லா மீது மூன்று முறை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இதில் இரண்டு குண்டுகள் ரகமதுல்லாவின் மார்பில் பாய்ந்துள்ளது. சம்பவ இடத்தில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் வெஸ்ட்மெட் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்து விட்டதாக இரவு 1.30 மணிக்கு அறிவிக்கப்பட்டது. ஏன் போலீசார் அவரை உயிரிழக்கும் அளவிற்கு சுட்டார்கள்? என கேள்வி எழுந்துள்ள நிலையில், தங்களை தற்காத்துகொள்ள துப்பாக்கிச் சூடு நடத்தியதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

ஆவேசத்துடன் கத்தியால் தாக்க வந்த நபரை தடுத்து நிறுத்த போலீசாருக்கு சில விநாடிகள் மட்டுமே இருந்தன. அதனால் துப்பாக்கியால் சுடுவதைத் தவிர வேறு வழி இல்லை என்று சிட்னி போலீசார் விளக்கமளித்துள்ளனர். இந்நிலையில், முகமது ரஹமத்துல்லாவால் தாக்கப்பட்ட காயமடைந்த துாய்மை பணியாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

உயிரிழந்த முகமது ரஹ்மதுல்லா, 2012 ஆம் ஆண்டு லண்டனில், முதுநிலை ஆங்கில மொழியியல் பிரிவில் பட்டம் பெற்றுள்ளார். பின்னர் தனது சகோதரருடன் சேர்ந்து வியாபாரம் செய்து வந்ததாகத் தெரிய வந்துள்ளது. 2017ஆம் ஆண்டு முகமது ரஹ்மதுல்லாவுக்கு திருமணமாகியுள்ளது. எனினும் கருத்து வேறுபாட்டால் அவரது மனைவி விவகாரத்து பெற்று பிரிந்து சென்றுள்ளார்.

இதையடுத்து, வேலை தேடி 2019ல் ஆஸ்திரேலியா சென்றவர் அவ்பர்ன் பகுதியில் தங்கி வேலை பார்த்து வந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. தகவல் அறிந்த அதிராம்பட்டினத்தில் வசித்து வரும் ரஹ்மத்துல்லாவின் தாயார் ஆமினா, அவரது அக்கா மசூதா மற்றும் சகோதரர் அப்துல்ஹனி ஆகியோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

First published:

Tags: Australia, Police encounter, Youth dead