Home /News /thanjavur /

Thanjavur | சிவாஜி கணேசனின் பாரம்பரிய பண்ணை வீடு- சிறப்புகள் என்ன?

Thanjavur | சிவாஜி கணேசனின் பாரம்பரிய பண்ணை வீடு- சிறப்புகள் என்ன?

சிவாஜி கணேசனின் பண்ணை வீடு

சிவாஜி கணேசனின் பண்ணை வீடு

Thanjavur News | நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பூர்வீகமான தஞ்சாவூரில் அவரது பண்ணை வீடு இன்றும் சிறப்புடன் இருந்துவருகிறது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தமிழ் சினிமாவால் தவிர்க்க முடியாத ஒரு நடிகராவார். சிவாஜி கணேசன் இவரது இயற்பெயர் விழுப்புரம் சின்னையா மன்ராயா் கணேசமூர்த்தி ஆகும். ஆரம்பத்தில் மேடை நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த சிவாஜி கணேசன், 1952-ல் பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். வித விதமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து அதில் திறம்பட நடிப்பது இவரின் தனி திறனாகும்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் 288 படங்களில் நடித்துள்ளார். தமிழ் திரைப்படத்துறையில் 250 படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடித்த ஒரே நடிகர் சிவாஜி கணேசன். மேலும் புதுக்கதைகள் முதல் புராணக் கதைகள் வரை அனைத்தையும் தனது வித்தியாசமான நவரச நடிப்பால் அனைவரையும் ஈர்த்தார்.

இப்படிப்பட்ட ஒரு நடிகரின் பூர்வீகத்தை பற்றி அறியலாம் வாங்க!

சிவாஜி கணேசன், சின்னையா மன்றாயருக்கும், ராஜாமணி அம்மாளுக்கும் 4-வது மகனாக விழுப்புரத்தில் 1928-ம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி பிறந்தார். சிவாஜி கணேசனின் பூர்வீகம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சூரக்கோட்டை எனும் கிராமம் ஆகும். ராஜாமணி அம்மாளின் பூர்வீகம் விழுப்புரம். அங்குதான் 1928 இல் சிவாஜிகணேசன் பிறந்தார்.

சிவாஜியின் தந்தை சின்னையா மன்றாயர் ரயில்வே துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தார். மேலும் அவர் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபாடு கொண்டவர். ஒருமுறை வெள்ளைக்கார சிப்பாய்கள் செல்லும் ரயிலுக்கு சின்னையா வெடி வைத்ததற்காக அவருக்கு ஆங்கிலேய அரசால் 7 வருடம் சிறை தண்டனை வழங்கப்பட்டது. சின்னையா மன்றாயர் கைது செய்யப்பட்ட அதே நாளில்தான் சிவாஜி பிறந்தார்.

கணவர் சிறை சென்று விட்டதால் ராஜாமணி அம்மாள், பால் வியாபாரம் செய்து குடும்பத்தை காப்பாற்றினார். சிவாஜிக்கு 4 வயதாக இருக்கும் போது சின்னையா மன்றாயர் நன்னடத்தைக்காக, 7 வருட தண்டனை 4 ஆண்டு தண்டனையாகக் குறைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். பிறகு சிவாஜியின் குடும்பம் திருச்சியில் உள்ள சங்கிலியாண்டபுரம் என்ற இடத்திற்கு குடியேறியது.

அவருக்கு நான்கு வயதிலேயே சினிமாத்துறையில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகம் இருந்ததால் 7 வயதில் பெற்றோருக்கு தெரியாமல் திருச்சியில் முகாமிட்டு இருந்த மதுரை ஸ்ரீபாலகான சபா என்ற நாடகக்குழுவில் சேர்ந்தார். அந்த நாடகக் குழுவில் இருந்த சின்ன பொன்னுசாமி படையாச்சி என்பவர் தான் சிவாஜி கணேசனுக்கு நடிப்புப் பயிற்சி அளித்தார்.

சிவாஜி பண்ணை வீடு


பின்பு அவர் மிகப் பெரிய நடிகனாக பல மொழிகளில் நடித்தவர் மட்டுமின்றி அவருடைய தலை முறைகளான பிரபு அவருடைய மகனான விக்ரம் பிரபு ஆகியோர் தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான ஒரு நடிகர்களாக திகழ்கிறார்கள். எனவே, இன்றிருக்கும் நிலையில் அவரது பூர்வீகத்தை பற்றி அறிய தஞ்சாவூர் சூரக்கோட்டையில் இருக்கும் அவரது பண்ணையில் வேலை பார்க்கும் கணக்கு பிள்ளைகளிடம் விசாரித்தோம்.

சிவாஜி பண்ணை:

தஞ்சையில் இருக்கும் அவரது பண்ணையானது சுமார் 48 ஏக்கர் ஆகும். இந்தப் பண்ணையில் தஞ்சை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து சிலர் வேலை செய்கின்றனர். நாற்பத்தி எட்டு ஏக்கர் முழுவதும் தென்னந்தோப்புகள் நிறைந்த இவரது பண்ணையில் தேங்காய் சாகுபடி அதிக அளவில் நடைபெறுகிறது.

இந்த தோப்பில் இருந்து அறுக்கப்படும் ஆயிரக்கணக்கான தேங்காய்கள் வியாபாரிகளிடம் மொத்தமாக விற்கப்படுகிறது. பின்பு விற்கப்பட்டு கிடைக்கும் பணத்தை பிரபுவின் குடும்பத்திற்கு அனுப்புவதாக இந்த பண்ணையை பல ஆண்டுகளாக நிர்வகித்து வரும் கணக்குப்பிள்ளை கூறினார்.

சிவாஜி பண்ணை வீடு


மேலும் அந்தப் பண்ணையின் ஓரத்தில் இருக்கும் ஒரு கூரை வீட்டில் தான் சிவாஜி குடும்பத்தினர் இருந்ததாகவும். பின்பு சிவாஜி சினிமாவிற்கு வந்த பிறகு, வீட்டை சுற்றியுள்ள நாற்பத்தி எட்டு ஏக்கர் இடத்தையும் வாங்கி அந்த இடத்தில் ஒரு பெரிய வீட்டையும் கட்டியுள்ளார். மான் கொம்புகளும் மாட்டு வண்டிகளும் நிறைந்த அந்த வீடானது 60 ஆண்டுகள் பழமையான மிகவும் அழகான தோற்றத்தில் காட்சியளிக்கிறது.

நடிகர் திலகம் சிவாஜி குடும்பத்தை சேர்ந்தவர்கள் வருவார்களா?

பொங்கல் பண்டிகையின்போது தவறாமல் நடிகர் பிரபு குடும்பத்தினர் பொங்கல் விழாவை கொண்டாடுவதாகவும் மற்றும் சில நிகழ்ச்சிகளை நடத்துவதாகவும் கூறினார். மேலும் தஞ்சையை சுற்றியுள்ள பக்கத்து மாவட்டங்களுக்கு படப்பிடிப்பு வேலையாக பிரபு குடும்பத்தினர் யார் வந்தாலும் பண்ணையை வந்து பார்த்துவிட்டு வேலைகள் சரியாக நடக்கின்றதா? பாதுகாப்பாக இருங்கள்' என்று கூறுவார்.

மேலும் சில தமிழ் படங்களுக்கும் இந்த பண்ணையில் படப்பிடிப்பு நடந்துள்ளதாகவும் கூறினார் அங்கு வேலை பார்க்கும் கணக்குப்பிள்ளை.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Karthick S
First published:

Tags: Local News, Thanjavur

அடுத்த செய்தி