Home /News /thanjavur /

Thanjavur | சோழர் காலத்து அரசர்களால் உருவாக்கப்பட்ட தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் சிறப்புகள்

Thanjavur | சோழர் காலத்து அரசர்களால் உருவாக்கப்பட்ட தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் சிறப்புகள்

தஞ்சாவூர் புன்னைநல்லூர் கோவில்

தஞ்சாவூர் புன்னைநல்லூர் கோவில்

thanjavur | தஞ்சாவூரிலுள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்ற கோவிலாக இருந்துவருகிறது.

கோவில்களுக்கு புகழ்பெற்ற மாவட்டங்களில் தஞ்சை மாவட்டம் முக்கியமான ஒரு மாவட்டமாகும். தஞ்சையில் சோழர் காலத்தில் நிறைய கோவில்கள் கட்டப்பட்டன. அந்த வழியில் வந்த சோழ அரசரால் அம்மனுக்கு என கட்டப்பட்ட மிக முக்கியமான கோவில் தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில். இக்கோயிலைப் பற்றிய தேடலின் போது சில சுவாரசியமான தகவல்கள் கிடைத்தது.

இக்கோயில் உருவாக காரணம் மற்றும் வரலாறு:

தஞ்சையை ஆண்ட வெங்கோஜி மகாராஜா 1680-இல் திருத்தல் யாத்திரை செய்யுங்கால் கண்ணபுரம் என்னும் சமயபுரத்தில் தங்கி வழிபாடு செய்தார். அன்றிரவு அம்பிகை அரசனின் கனவில் தோன்றி, தஞ்சைக்கு கிழக்கே 5 கி.மீ தூரத்தில் உள்ள புன்னைக்காட்டில் புற்று உருவாய் உள்ள தன்னை வந்து சேவிக்கும்படி கூறவே அவ்வரசன் தலைநகராகிய தஞ்சைக்கு வந்து, புன்னைகாட்டிற்கு வழியமைத்து அம்பிகை இருப்பிடத்தைக் கண்டு சிறிய கூரையமைத்து புன்னைநல்லூர் என்று பெயரிட்டு அக்கிராமத்தையும் ஆலயத்திற்கு வழங்கினார்.

பின்னர் (1739-1763) ஆண்ட பிரதாப மகாராஜா அருள்மொழிப்பேட்டை என்னும் கிராமத்தையும் மானியமாக அளித்ததோடு அம்பாள் மற்றும் ஈஸ்வரனை வழிபடுவதுடன் பெருமாளையும் வழிபடும் பொருட்டு அம்பாளின் கோயிலுக்கு வடபால் அருள்மிகு கோதண்டராமா கோயிலைக் கட்டி மானியங்களையும் வழங்கினார்.

இத்திருக்கோயிலில் உள்ள ஸ்ரீ ராமா, சீதாதேவி, லெட்சுமணர், சுகரீவா ஆகிய மூர்த்தங்கள் சாளக்கிராமம் எனும் கல்லினால் மிக அழகிய சிற்ப வேலைபாடுகளுடன் செய்யப்பட்டுள்ளன இக்கல் நேபாள மன்னரால் பிரதாபசிங் மன்னருக்கு அன்பாளிப்பாக வழங்கப்பட்டதாகும்.

தஞ்சாவூர் புன்னைநல்லூர் கோவில்


பின்னர் (1763-1787)இல் தஞ்சையை ஆண்ட தூளஜா ராஜாவின் புதல்விக்கு வைசூரியால் கண்பார்வை மங்கியது. அரசனின் கனவில் அம்பிகை ஓர் அந்தணச் சிறுமி போல் தோன்றித் தன் சன்னதியில் புதல்வியுடன் வந்து வழிபடும்படி கூறி மறைந்தாள். அரசனும், அரசகுமாரியுடன் சென்று அம்பிகையை வழிபட்டவுடன் அரசகுமாரி தனது பார்வையைத் திரும்பப் பெற்றாள். அரசன் அம்பிகையின் அருளில் மெய்மறந்து அம்பிசைக்கு சிறியதொரு கோயிலைக் கட்டுவித்துத் திருச்சுற்று மாளிகையையும் அமைத்தார்.

இம்மன்னரே தபோபலத்தில் சிறந்த ஞானியாகிய சதாசிவ பிரம்மேந்திர சுவாமிகளைக் கொண்டு புற்று உருவாய் இருந்த அம்பிகைக்கு மாரியம்மன் வடிவமைத்துச் சக்கர பிரதிஷ்டையும் செய்தார்.

தஞ்சாவூர் புன்னைநல்லூர் கோவில்


பின்னர் 1798 முதல் 1832 வரை அரசாண்ட சரபோஜி மகாராஜா இத்திருக்கோயில் மகா மண்டபம், நர்த்தன மண்டபம், முன் கோபுரம், பெரிய திருச்சுற்று முதலியவற்றைக் கட்டுவித்து அம்பிகைக்குக் கும்பாபிஷேகம் செய்வித்தார்.

பின்னர்சிவாஜி மகாராஜா வெளி மண்டபம், போஜன சாலை, வடக்குக் கோபுரம் ஆகியவைகளை 1892-இல் சிவாஜி மன்னர் கட்டினார். சிவாஜி மகாராஜா 3-வது திருச்சுற்றைக்கட்டி மேலும் திருப்பணிகளை செய்வித்தார்.

கோவிலின் தனிச்சிறப்புகள் :

இந்தக் கோவில் 5 காலகட்டங்களில் ஆண்ட ஐந்து மன்னர்களால் கட்டப்பட்டது. இத்திருக்கோயிலின் மூலஸ்தான மாரியம்மன் புற்று மண்ணால் உருவாக்கப்பட்டது ஒரு தனிச்சிறப்பாகும்.

ஒவ்வொரு வருடமும் கோடை நாட்களில் அம்பாளுக்கு முகத்தினும், சிரசிலும் முத்து, முத்தாக வியர்வை வியர்த்துத் தானாகவே மாறிவிடும் வழக்கம் தற்போது வரை உள்ளது. இதன் காரணமாகவே இந்த அம்மனை முத்துமாரியம்மன் என்று அழைக்கின்றார்கள்.

ஒரு வருடத்தில் நடக்கும் சிறப்பு பூஜை மற்றும் திருவிழாக்கள்:

இன்று வரை அம்பாளுக்கு ஒவ்வொரு வருடமும் ஆடி, ஆவணி, புரட்டாசி மாதங்களில் திருவிழா நடைபெறும். ஆடி மாதம் பூச்சொரிதல், முத்து பல்லாக்கு திருவிளக்குப் பூஜைகள் ஆவனி மாதம் வருடாந்திர திருவிழாவும். கடைசி ஞாயிற்றுகிழமை தேரோட்டமும், புரட்டாசி மாதம் எதப்ப உற்சவம் மற்றும் நவராத்திரி திருவிழாவும், மார்கழியில் இலட்ச திருவிளக்கு விழா, மாசி-பங்குனி மாதங்களில் பால்குட விழா சிறப்பாக நடைபெறும். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் இத்திருக்கோயிலுக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் பல ஊர்களிலிருந்து வந்து அம்பாளைத் தரிசித்து பேரானந்தம் அடைகின்றனர்.

மக்கள் வழிபடும் முறை:

ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் மாவிளக்கு எடுப்பது, உப்பு, மிளகு இடுவதும், வேப்பஞ்சேலையை உடுத்தி, அக்கினி சட்டி எடுப்பதும், கோயில் தீர்த்தமான வெல்லக்குளத்தில் வெல்லம் வாங்கி போடுவதும் பக்தர்களால் செய்யப்படுகின்றது. மேலும் பக்தர்கள் நோய்களுக்கு, புற்று மண்ணை பிரசாதமாகக் வழங்கப்படுகின்றது.

கோவிலுக்கு வந்து அம்பாளை வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும் என அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக இன்று வரை இருக்கின்றது. அதனாலயே இக்கோவிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் தினந்தோறும் வருகின்றனர் என அப்பகுதி மக்கள் மற்றும் பக்தர்கள் கூறினார்கள்.
Published by:Karthick S
First published:

Tags: Local News, Thanjavur

அடுத்த செய்தி