தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ரயில் நிலையத்தில் திருச்செந்தூர் மற்றும் மைசூர் விரைவு ரயில் நின்று செல்லாததால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி கொண்டிருக்கின்றனர். தாமதப்படுத்தாமல் ஒப்புதல் வழங்க வேண்டும் என பயணிகள் சங்கம் மற்றும் பொதுமக்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்திய நிலையில் அலட்சிய போக்கில் இருக்கும் அரசால் மக்கள் கடும் கோபத்திற்கு ஆளாகின்றனர்.
பாபநாசம், ஆன்மீக திருக்கோயில் அதிகம் உள்ள ஒரு வட்டமாகும். இவ் ஊரை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அளவில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களாகிய ராமலிங்கம் சுவாமி, திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை, பாலைவன நாதர், நல்லூர் திருக்கோயில் மற்றும் வைணவ திவ்ய தேசங்கள் போன்ற திருக்கோயில்கள் அதிக அளவில் இருக்கும் நிலையில், இக்கோவிலில் தரிசனத்திற்காக நாடு முழுவதிலிருந்தும் குறிப்பாக கர்நாடகம், ஆந்திரா மற்றும் கேரள பகுதியில் இருந்து அதிகமான எண்ணிக்கையில் வரும் பக்தர்கள், பெரும்பாலானோர் இந்த ரயில் மார்க்கமாகவே வந்து செல்கின்றனர்.
இதனால், பாபநாசம் ரயில் நிலையத்தின் மூலம் மாதம் ரூ. 11 லட்சமும், ஆண்டுக்கு சுமார் 1.58 கோடி ரூபாயும் ரயில் பயணச்சீட்டு, வருவாயாகவும், பாபநாசம் ரயில் நிலையம், ரயில்வே நிர்வாகத்தின் அந்தஸ்துடைய அதிக போக்குவரத்து கொண்ட முக்கியமான ரயில் நிலையமாக திகழ்கிறது.
தற்சமயம் இந்த ரயில் நிலையத்தின் வழியாக செல்லும் தஞ்சை டு சென்னை உழவன் விரைவு ரயில், திருச்சி டு சென்னை சோழன் அதிவிரைவு ரயில், கோவை டு மயிலாடுதுறை ஜனசதாப்த்தி அதிவிரைவு ரயில் பாபநாசம் ரயில் நிலையத்தில் நின்று செல்கின்றன. ஆனால், ஏற்கனவே கடந்த 10 ஆண்டுகளாக நின்று சென்று வந்த மைசூர் - மயிலாடுதுறை, திருச்செந்தூர்-சென்னை செல்லும் இரண்டு ரயில்களும் கொரோனா நோய் தொற்று காலத்திற்கு பிறகு நின்று செல்லவில்லை. இது குறித்து மத்திய பிரதிநிதிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லாமல் உள்ளது.
எனவே, ரயில்வே நிர்வாகம், திருச்செந்தூர், மைசூர் விரைவு ரயிலை பாபநாசம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல, உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் இதுகுறித்து ரயில் பயணிகள் சங்க செயலாளர் ரயிலடி சரவணன் கூறியது, திருச்செந்தூர், மைசூர் விரைவு ரயிலை பாபநாசம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல மாநிலங்களவை உறுப்பினர்கள் எம்.சண்முகம், என்.சிவா, ஜிகே.வாசன், மக்களவை உறுப்பினர் செ.ராமலிங்கம் ஆகியோர், மத்திய ரயில்வே துறை அமைச்சரை சந்தித்து மனு அளித்தும் நடவடிக்கை இல்லாமல் உள்ளது.

பாபநாசம் ரயில் நிலையம்
மேலும், இது தொடர்பாக பிரதமர் நரேந்திரமோடி மற்றும் ரயில்வே வாரியத்தின் தலைவர் ஆகியோருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதுடன், அகில இந்திய ரயில்வே வாரிய பயணிகள் குறைதீர்ப்பு குழுவினருக்கும் இருமுறை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டள்ளது. இவ்வளவு தொடர் முயற்சிகள் செய்து வந்த பின்னரும் கூட ரயில்வே நிர்வாகம் இது நாள் வரை ஒப்புதல் வழங்காமல் இருந்து வருவது கண்டனத்துக்குரியது.
ஏற்கனவே, நின்று சென்று வந்த வண்டிகளுக்கான ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றோம். பாபநாசத்தை விட மிக குறைந்த அளவு வருவாய் உள்ள சிறிய ரயில் நிலையங்களில் கூட இந்த வண்டிகள் நின்று செல்வது என்பது புரியாத புதிராகவே உள்ளது. இந்த ரயில்கள், பாபநாசம் நின்று செல்லாத காரணத்தால் 30 கிலோமீட்டர் பயணித்து தஞ்சாவூர் சென்று, ரயில்களுக்கு செல்ல வேண்டியுள்ளது.
இதனால் பயணிகளுக்கு குறிப்பாக முதியோர், மாற்றுத்திறனாளிகள், மருத்துவ சிகிச்சை மேற்கொள்வோர் போன்றோருக்கு தேவையில்லாத பண விரயமும், கால விரயமும் ஏற்படுவதுடன், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகுகிறார்கள்.
ரயில்வே நிர்வாகம், கொரோனா தொற்றுக்கு முன் உள்ள நிறுத்தங்களில் மட்டும் ரயில் நிறுத்தப்படும் என அறிவித்திருந் நிலையில் மதுரை-திருவனந்தபுரம் அமிர்தா விரைவு ரயில், கடந்த 2021-ம் ஆண்டு, ஜூன் மாதம் 16-ம் தேதி முதல் ஒட்டன்சத்திரம் ரயில் நிலையத்தில் நின்று செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, ரயில்வே நிர்வாகம் திருச்செந்தூர்-மைசூர் ஆகிய 2 விரைவு ரயில்களை, பாபநாசத்தில் மீண்டும் நின்று செல்ல ஒப்புதல் வழங்க வேண்டும். காலதாமதம் செய்வதால் அது பெரிய அளவிலான மக்கள் மற்றும் அனைத்து கட்சியினர் போராட்டத்திற்கு வழிவகுக்கும் என தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உங்கள் நகரத்திலிருந்து(தஞ்சாவூர்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.