மதுபோதையில், பள்ளிக்குள் புகுந்து மாணவியின் தந்தை தகராறில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கள்ள பெரம்பூரில் அரசு உயர்நிலைபள்ளி செயல்பட்டு வருகிறது. நேற்று காலை பிரேயர் நடந்து கொண்டு இருந்தபோது, அந்த பள்ளியில் படிக்கும் மாணவியின் தந்தை செல்வக்குமார் என்பவர் மதுபோதையில் பள்ளிக்குள் நுழைந்து தகராறு செய்துள்ளார். மேலும் பள்ளியை விட்டு வெளியே செல்லுமாறு தலைமை ஆசிரியை கூறி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த செல்வக்குமார் தலைமை ஆசிரியை அருவருக்க கூடிய ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளார் . இதனை தட்டி கேட்ட உடற்கல்வி ஆசிரியர் சண்முகத்தின் கன்னத்தில் அறைந்துள்ளார்.
மேலும் இதனை தடுக்க முயன்ற மற்றொரு ஆசிரியருக்கு அடி விழுந்தது. இந்த சம்பவம் குறித்து பள்ளி தலைமை ஆசிரியை அளித்த புகாரின் பேரில் பள்ளிக்குள் ரகளையில் ஈடுப்பட்டு, தலைமை ஆசிரியை இருக்கையில் அமர்ந்து ஆசிரியர் சட்டையை இழுத்து தகராறில் ஈடுபட்ட மாணவியின் தந்தை செல்வகுமாரை கள்ள பெரம்பூர் காவல்துறையினர் கைது செய்தனர்.
காவல்துறையின் விசாரணையில், பள்ளி நேரத்தில் தனது மகளை செல்வக்குமார் மதுபோதையில் பார்க்க வந்ததாகவும், அதற்கு தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அனுமதி அளிக்காததால் அவர் தகராறில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.