கோவில்களுக்கு புகழ் பெற்ற தஞ்சை மாவட்டத்தில் சோழ அரசர்களால் பல கோயில்கள் கட்டப்பட்டன. அந்த வழியில் வந்த மராட்டிய மன்னரான சரபோஜியால் பட்டுக்கோட்டை நகராட்சியில் கட்டப்பட்டு தற்போது 400 ஆண்டுகள் பழமையான நாடியம்மன் கோவிலை பற்றிய சுவாரசியமான தகவலை தெரிந்துகொள்ளலாம்.
பட்டுக்கோட்டை நாடியம்மன்:
நாடியம்மன் எனும் பெண் தெய்வத்தை பட்டுக்கோட்டை மக்கள் பல ஆண்டு காலங்களாக வழிபட்டு வருகின்றனர். தன்னை நாடி வருபவர்களுக்கு நல்லதை செய்வதால் நாடியம்மன் என்று இவ்வூர் பக்தர்களால் அழைக்கப்படுகிறது. மேலும் இவ்வூரில் நாடிமுத்து என்ற பெயர் அக்கால கட்டங்களில் அதிகமாக வைத்துக் கொள்ளப்பட்ட ஒரு பெயராகும். இந்தப் பெயரும் அந்த அம்மன் வழியால் ஏற்பட்டதாகும்.
நாடியம்மன் உருவான விதம்:
இந்த நாடியம்மன் கோயில் உருவானதற்கும் ஒரு கதை வழக்கில் இருக்கிறது. ஒருமுறை தஞ்சை மராட்டிய மன்னரான சரபோஜி காட்டில் வேட்டையாடி வந்தபோது, அப்போது குறுக்கிட்ட ஒரு மிருகத்தைத் துரத்திக் கொண்டு சென்று, அது பிடிபடாமல் போகவே அதன்மீது குறிவைத்துத் தாக்க அது ஓர் புதருக்குள் சென்று ஒளிந்து கொண்டது.
அது அடிபட்டிருந்தால் அந்தப் புதருக்குள்தான் இருக்க வேண்டுமென்று, மன்னன் ஆட்களை விட்டு அங்கு தேடச் சொன்னதையடுத்து அப்போது ஆட்கள் புதரை நீக்கிப் பார்த்த போது அங்கு ரத்தம் ஒழுக ஓர் அழகிய பிடாரி அம்மன் சிலை தென்பட்டதால் அதிர்ச்சியடைந்த மன்னன் உடனே அந்த சிலையை வெளியே கொணர்ந்து அதனை சுத்தம் செய்து, பட்டுக்கோட்டையின் கோட்டைப் பகுதியில் இருந்த சிவன் கோயில் பூசாரிகளை அழைத்து பிடாரியம்மனுக்கு அது கிடைத்த இடத்திலேயே ஓர் ஆலயம் கட்டி பிரதிஷ்டை செய்ய உத்தரவிட்டார்.

நாடியம்மன் கோவில்
அவ்வண்ணமே, அந்த பிடாரி சிலை வனாந்திரமாய் இருந்த அந்த இடத்தில் கோயில் கொண்டது. பிறகு காட்டில் இருந்த இந்த அம்மனுக்கு நித்தியப்படி பூசைகளும், விழாக்களும் கொண்டாடும் பொறுப்பையும், ஆலயத்தைக் கட்டி நிர்வகிக்கும் பொறுப்பையும் அவ்வூரிலிருந்த சின்னான் செட்டியார் என்பவரிடம் கொடுத்து பராமரிக்கும்படி சரபோஜி மன்னர் ஆணையிட்டதை தொடர்ந்து, முதலில் காட்டில் கண்டெடுத்த கருங்கல் பிடாரியம்மன் சிலையை வைத்து வழிபட்டு வந்தனர். பின்னர் செட்டியாரின் முயற்சியின் காரணமாக, இந்த அம்மனுக்கு ஓர் ஐம்பொன் சிலை வடிவமைக்கப்பட்டு வழிபாடு நடத்தலாயினர். நாளடைவில் இந்த அம்மன் நாடியம்மன் என்ற பெயர் பெற்றது.
சிறப்புகள்:
ஆண்டுதோறும் பங்குனி- சித்திரை மாதங்களில் இந்த அம்மனுக்கு காப்பு கட்டி திருவிழா நடைபெறுகிறது. திருவிழா காலங்களில் இந்த அம்மன் தனது ஆலயத்தை விட்டு குடிபெயர்ந்து பெரியகடை தெருவின் நடுவில் இருக்கும் மண்டகப்படி என்னும் மண்டபத்தில் குடியேறி திருவிழா முடிந்த பிறகு தான் ஆலயம் திரும்புகிறது என இவ்வூர் மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

நாடியம்மன்
மேலும் அந்தக் காலத்தில் நாதஸ்வர சக்கரவர்த்தி ராஜரத்தினம் பிள்ளை முதல் அனைத்து பெரிய வித்வான்களும் இரவில் அம்மன் புறப்பாட்டின்போது நடந்து வந்தே ஆங்காங்கே இவர்களுக்கு மேடை அமைக்கப்பட்டு தொடர்ந்து பலமணி நேரம் விடிய விடிய நாதசுரம் வாசித்த வரலாறு உண்டு.
வெண்ணை தாலி போன்ற திருவிழாக்களும் சிறப்பான முறையில் இக்கோவிலில் நடைபெறுகிறது. அம்மன் வெண்ணை பானையைக் கொண்டு வீதி உலா வருகையில் பட்டு உடையை அம்மனுக்கு மக்கள் போற்றுவார்கள். அம்மனின் ஐம்பொன் விக்கிரகம் பாதுகாப்பாக கோட்டையினுள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் திருவிழா காலங்களில் மட்டுமே மண்டபத்திற்குள் கொண்டுவரப்படுகிறது. மேலும் தினமும் இக்கோயிலில் மாலை நேரங்களில் மண்டகப்பொடியானது நடைபெறுகிறது.
அணைவராலும் வணங்கப்படும் அம்மன்:
நினைத்ததை நடத்தி வைக்கும் சக்தி படைத்த அம்மனாக திகழ்வதால் இந்த ஊரில் எந்த ஒரு நல்ல நிகழ்வாக இருந்தாலும் இந்த அம்மனை வணங்காமல் இவ்வூர் மக்கள் செய்ய மாட்டார்கள். மேலும் இவ்வூர் மக்களால் ஆண்டுதோறும் இக்கோவில் திருவிழாவை அனைவரும் சேர்ந்து சிறப்பான முறையில் நடத்தி வருகிறார்கள். நாடி வந்தவர்களுக்கு நல்லது செய்யும் இந்த நாடியம்மன் கோவிலை தஞ்சை சுற்றியுள்ள பல ஊர்களில் இருந்து வந்து வணங்குவது குறிப்பிடத்தக்கதாகும்.
தஞ்சாவூரில் இருந்து பட்டுக்கோட்டை நாடியம்மன்கோவிலுக்கு செல்லும் பாதையை காட்டும் கூகுள் வரைபடம்..
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உங்கள் நகரத்திலிருந்து(தஞ்சாவூர்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.