தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பேருந்து நிலையம் எதிரே அசோகன் ஆபரண மாளிகை செயல்பட்டு வருகிறது. இந்த நகை கடையில் சிறுசேமிப்பு திட்டம், நகைகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும் என சுற்றுவட்டார 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் விளம்பரம் செய்து உள்ளனர். இதனை நம்பி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிறுசேமிப்பில் சேர்ந்துள்ளனர். மேலும் மற்ற வங்கிகளில் உள்ள அடமானம் வைத்த நகைகளை மீட்டு வட்டி இல்லா கடன் என்ற ஆசையில் அசோகன் நகை கடையில் அடகு வைத்துள்ளனர். இந்நிலையில் நகைகளை மீட்பதற்காக கடைக்கு சென்றபோது பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடையிலுள்ள தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் அனைத்தையும் காலி செய்துவிட்டு, கடையை காலி செய்துள்ளனர். இந்த தகவல் அப்பகுதியில் பரவியதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் புகார் அளிக்க வலியுறுத்தினர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் ஒரத்தநாடு காவல் நிலையத்தில் புகார் அளித்து வருகின்றனர். இதுவரை சுமார் 500க்கும் மேற்பட்டோர் அசோகன் தங்க மாளிகை கடை எதிராக புகார் அளித்து வருகின்றனர். இதேபோல் தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, திருக்காட்டுப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளிலும் நகைக்கடை வைத்து அதன் உரிமையாளர் ஏமாற்றிவிட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், “தினமும் 100 ரூபாய் கட்டினால் ஒரு வருடத்திற்கு போனஸ் தொகையுடன் ரூ.39,000 வழங்குவதாக தெரிவித்தனர். அதனை நம்பி தினமும் ரூ.100 சிறுக சிறுக சேமித்தோம். இதே திட்டத்தின் மூலம் தனது நண்பர்களையும் சேர்த்துக்கொண்டு பணம் கட்டினோம். அதன் கடை உரிமையாளர் எங்களை ஏமாற்றி விட்டார். இதேபோல் மற்ற வங்கிகளில் வைத்துள்ள நகை கடன்களுக்கு நீங்கள் வட்டி கட்ட வேண்டும். ஆனால் தங்கள் கடைகளில் நகைகளை 3 வருடம் ஒப்பந்த அடிப்படையில் நகைகளை அடகு வைத்தால் வட்டி கிடையாது என வீடு வீடாக சென்று விளம்பரம் செய்தனர்.
இதனை நம்பி கூட்டுறவு வங்கிகளில் வைத்துள்ள நகைகளை வட்டி இல்லா கடன் என்று ஆசையில் அசோகன் தங்கம் நகை கடையில் அடகு வைத்தோம். ஆனால் நகைகளை திரும்பச் வாங்க செல்லும்போது அவர்கள் கடையை காலி செய்துவிட்டனர். நகைகளை கேட்கும்போது முறையான பதிலும் இல்லை. அதன் உரிமையாளரும் தலைமறைவாகி விட்டார். ஊழியர்களும் தங்களுக்கு எதுவும் தெரியாது என அவர்கள் தெரிவிக்கின்றனர். எங்கள் பகுதியில் மட்டும் சுமார் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை அவர்கள் ஏமாற்றி விட்டனர்” என கூறினர்.
மேலும் நகை கடையின் உரிமையாளர் எங்களிடமிருந்து வசூல் செய்த பணத்தை கொண்டு தஞ்சை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரியல் எஸ்டேட், பிரியாணி கடை, பள்ளிக்கூடம் என பல்வேறு துறைகளில் முதலீடு செய்துள்ளார் எனவும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். காவல்துறையினர் உரிய விசாரணை செய்து பாதிக்கப்பட்டவர்களின் பணத்தையும், நகையையும் மீட்டு தர வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். நகைக்கடை மீது பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, திருக்காட்டுப்பள்ளி உள்ளிட்ட காவல் நிலையங்களில் பாதிக்கப்பட்டவர்கள் காலை முதல் புகார் அளித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Thanjavur