கும்பகோணம் அருகே முருகனின் நான்காம் படைவீடான சுவாமிமலையில் கந்தசஷ்டி விழாவின் 7ம் நாளான சஷ்டியை முன்னிட்டு, உற்சவர் சண்முக சுவாமிக்கு நேற்று தேவசேனாவுடன் திருக்கல்யாணம் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடாக அமையப்பெற்ற கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலை சுவாமி நாதசுவாமி திருக்கோயில், பிரபவ முதல் அட்சய வரையிலான அறுபது தமிழ் வருட தேவதைகள் அறுபது படிக்கட்டுகளாக இருந்து இத்தலத்திற்கு வருகை தரும் முருக பக்தர்களுக்கு சேவை செய்வதாக ஐதீகம்.
கட்டுமலை கோயிலான இத்தலத்தில் தான் முருகப்பெருமான், தன் தந்தை சிவபெருமானுக்கு ஓம் எனும் பிரணவ மந்திரப்பொருளை குருவாக இருந்து உபதேசம் செய்தார் என்ற பெருமை கொண்டது, சுவாமிக்கே (சிவபெருமானுக்கே) நாதன் (குருவானதால்) ஆனதால் இத்தல முருகப்பெருமான் சுவாமிநாதசுவாமி என போற்றப்படுகிறார்.
மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறந்தது, நக்கீரரால் திருமுருகாற்றுப்படையிலும், அருணகிரிநாதரால் திருபுகழிலும் பாடல் பெற்றது என பெருமை கொண்டதாகும். இத்தகைய சிறப்பு பெற்ற சுவாமிமலையில் ஆண்டு தோறும் கந்தசஷ்டி விழா பத்து தினங்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
அதேபோல இவ்வாண்டும் இவ்விழா கடந்த 24ம் தேதி திங்கள்க்கிழமை தொடங்கியது. விழாவின் 6ம் நாளான கந்தசஷ்டியை முன்னிட்டு, உற்சவர் சண்முகசுவாமி ஆட்டுக்கிடா வாகனத்தில் வந்து மீனாட்சியம்மனிடம் சக்திவேல் வாங்கும் நிகழ்வும் தொடர்ந்து, திருக்கோயில் வெளி பிரகாரத்தில் சூரசம்ஹாரமும் சிறப்பாக நடைபெற்றது.
Also see... மாமனும் மருமகனும் மருவும் மதுரை மலை - பழமுதிர்சோலைமலை திருத்தலம், வரலாறு, சிறப்பு
இந்நிலையில் விழாவின் 7ம் நாளான நேற்றிரவு தேவசேனா திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக முதலில் மாலை மாற்றும் வைபவமும் அதனை தொடர்ந்து ஊஞ்சலில் நலங்கு வைக்கும் நிகழ்வு நடைபெற்ற பிறகு சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க அக்னியாகம் வளர்த்து மங்கள ஞான் பூட்ட தேவசேனா திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து 16 விதமான சோடச உபசாரங்கள் செய்யப்பட்ட பிறகு கோபுரத்தையும் பஞ்ச ஆர்த்தியும் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kandha Sashti, Kumbakonam, Murugan, Thanjavur