ஹோம் /நியூஸ் /தென்காசி /

கேரளாவில் கொள்ளை அரசுப்பேருந்தில் எஸ்கேப்.. காட்டிக்கொடுத்த சிசிடிவி கேமரா - எல்லையில் மடக்கி பிடித்த தமிழக போலீஸ்

கேரளாவில் கொள்ளை அரசுப்பேருந்தில் எஸ்கேப்.. காட்டிக்கொடுத்த சிசிடிவி கேமரா - எல்லையில் மடக்கி பிடித்த தமிழக போலீஸ்

கைதான திருடர்கள்

கைதான திருடர்கள்

Tenkasi News : கேரளாவில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த நபர்களை தமிழக - கேரள எல்லையான தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடியில் தமிழக போலீசார் மடக்கி பிடித்தனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tenkasi, India

  கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் இருந்து ஒரு மோட்டார் சைக்கிளை திருடிய 2 மர்ம நபர்கள், அங்கிருந்து சாத்தனூர் பகுதிக்கு வந்துகொண்டிருந்தனர். அப்போது சாத்தனூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் பூட்டை உடைத்து வீட்டில் இருந்த தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து விட்டு மோட்டார் சைக்கிளை அங்கே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

  இந்நிலையில், கொள்ளை சம்பவம் குறித்து சாத்தனூர் போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அந்த பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளை அந்த பகுதியில் நிறுத்திவிட்டு கேரளா அரசு பேருந்து ஒன்றில் ஏறி தமிழகத்தை நோக்கி சென்று கொண்டிருப்பது தெரியவந்தது.

  இதனைத்தொடர்ந்து, கேரள போலீசார், தமிழக காவல்துறைக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில், தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள புளியரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சஞ்சய்காந்தி மற்றும் செங்கோட்டை தனிபிரிவு காவலர் அரவிந்த் தலைமையிலான போலீசார் புளியரை சோதனை சாவடியில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.அப்போது, கேரளாவில் இருந்து தமிழகத்தை நோக்கி வந்த கேரளா அரசு பேருந்து ஒன்றை மறித்து சோதனை செய்தபோது, கேரளா போலீசார் சொன்ன அடையாளங்களில் 2 நபர்கள் பயணம் செய்து வந்தது தெரியவந்தது.

  இதையும் படிங்க : கள்ளக்காதலுக்கு இடையூறு.. கூலிப்படையை ஏவி கணவனை தீர்த்துக்கட்ட மனைவி போட்ட ஸ்கெட்ச் - மதுரையில் பரபரப்பு

  இதையடுத்து, அவர்களை பிடித்து போலீசார் விசாரித்தபோது, அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளிக்கவே சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது, அந்த நபர்கள் கேரள மாநிலம் சாத்தனூர் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து வந்தது உறுதிசெய்யப்பட்டது.

  மேலும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மதுரை பகுதியை சேர்ந்த சுரேஷ் என்ற பட்டரை சுரேஷ் மற்றும் தூத்துக்குடி பகுதியை சேர்ந்த எட்வின்ராஜ் உள்ளிட்ட 2 நபர்களை கைது செய்து, அவர்களிடம் இருந்து 36.2 கிராம் மதிக்கத்தக்க தங்க நகைகள் மற்றும் 178.3 கிராம் மதிக்கத்தக்க தங்க முலாம் பூசப்பட்ட கவரிங் நகைகள், ரூ.1,18,350 உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.

  மேலும் சம்பவம் குறித்து கேரள மாநிலம் சாத்தனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், அங்கிருந்து விரைந்து வந்த சாத்தனூர் போலீசார் புளியரை காவல் நிலையத்தில் பிடித்து வைக்கப்பட்ட கொள்ளையர்கள் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மற்றும் பணத்தை மீட்டு கொள்ளையர்களை அங்கிருந்து கேரள மாநிலம் சாத்தனூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். மேலும் தமிழக போலீசார் துரிதமாக செயல்பட்டு கொள்ளையர்களை பிடித்ததற்கு கேரள போலீசார் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

  செய்தியாளர் - செந்தில் (தென்காசி )

  Published by:Karthi K
  First published:

  Tags: Crime News, Local News, Tenkasi