முகப்பு /செய்தி /தென்காசி / தென்காசி இளம்பெண் கடத்தல் விவகாரத்தில் அதிரடி திருப்பம்! - வெளியான பரபரப்பு வீடியோ

தென்காசி இளம்பெண் கடத்தல் விவகாரத்தில் அதிரடி திருப்பம்! - வெளியான பரபரப்பு வீடியோ

கிருத்திகாவின் வீடியோவால் பரபரப்பு

கிருத்திகாவின் வீடியோவால் பரபரப்பு

Tenkasi kidnap case | தென்காசி இளம்பெண் கடத்தல் விவகாரத்தில் அடுத்தடுத்து வெளிவரும் பெண்ணின் வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டம் கொட்டாக்குளம் பகுதியை சேர்ந்தவர் வினித்(22), அதே பகுதியை சேர்ந்தவர் கிருத்திகா பட்டேல் (20). இருவரும் பல ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில் காதல் திருமணம் செய்து கொண்டனர். காதல் திருமணத்தில் பெண் வீட்டாருக்கு விருப்பம் இல்லாத நிலையில் கிருத்திகா பட்டேலை வலுக்கட்டாயமாக தூக்கிச் செல்லும் சிசிடிவி வீடியோ தென்காசி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக கிருத்திகா பட்டேலின் தந்தை நவீன் பட்டேல், தாய் தர்மிஸ்தா பட்டேல், உறவினர்கள் என 7 பேர் மீது வினித் குற்றாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து காவல் கண்காணிப்பாளர் சாம்சன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு கிருத்திகாவை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் கிருத்திகா தனக்கு வேறு திருமணம் ஆகி விட்டதாகவும் தான் பெற்றோருடன் பாதுகாப்பாக இருப்பதாகவும் கூறும் வீடியோ இந்த வழக்கில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் தன் விருப்பத்துடன் தான் இந்த திருமணம் நடைபெற்றதாகவும் யாரும் தன்னை கட்டாயப்படுத்தவில்லை என கிருத்திகா கூறியிருந்தார்.

இதனை கண்டு பதறிப்போன வினித், தன் மனைவி கிருத்திகா முழு சம்மதத்துடனே தன்னை திருமணம் செய்து கொண்ட நிலையில், அவர்களது பெற்றோரே மிரட்டி வேறு திருமணம் செய்து வைத்ததாகவும், மிரட்டியே கிருத்திகாவை வீடியோ பதிவு செய்ய வைத்துள்ளதாகவும் புகார் தெரிவித்துள்ளார். மேலும், மனைவி வெளியிட்ட வீடியோவில் தனக்கு நம்பிக்கை இல்லை என்றும், தன் மனைவியை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில், கிருத்திகா மேலும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், தான் நலமாக உள்ளதாகவும், தனது கணவருடன் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்த கிருத்திகா, தன்னை வைத்து தந்தையிடம் பணம் பறிப்பதற்காக இப்படி செய்வதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்த வீடியோ தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்: ச.செந்தில், தென்காசி.

First published:

Tags: Crime News, Kidnapping Case, Local News, Tenkasi