முகப்பு /செய்தி /தென்காசி / பட்டப்பகலில் கிருத்திகாவை கடத்தியதற்கான ஆதாரம்... பெற்றோருக்கு எச்சரிக்கை - முன் ஜாமீன் மனுதள்ளுபடி செய்த நீதிமன்றம்!

பட்டப்பகலில் கிருத்திகாவை கடத்தியதற்கான ஆதாரம்... பெற்றோருக்கு எச்சரிக்கை - முன் ஜாமீன் மனுதள்ளுபடி செய்த நீதிமன்றம்!

கிருத்திகா வழக்கு

கிருத்திகா வழக்கு

இந்த கடத்தல் வழக்கில் நாங்கள் என்ன செய்வது என்று தெரியவில்லை - நீதிபதிகள்

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

தென்காசி கிருத்திகா கடத்தல் வழக்கில் கிருத்திகாவின் பெற்றோர்  உள்ளிட்ட 8 பேரின் முன் ஜாமின் மனுக்களை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.

தென்காசி அருகே உள்ள கொட்டாக்குளம் இசக்கியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வினித், உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், “தென்காசியில் மரக்கடை வைத்துள்ள குஜராத்தை பூர்வீகமாக கொண்ட நவீன் படேல், மகள் கிருத்திகாவும், நானும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்தோம். இருவரும் கடந்த (2022 ) டிசம்பர் 27ம் தேதி நாகர்கோவிலில் காதல் திருமணம் செய்து பதிவு செய்து கொண்டோம். கடந்த ஜனவரி மாதம் 25ம் தேதி நவீன் பட்டேல் கும்பலுடன் வந்து என்னை தாக்கி, என் மனைவி கிருத்திகாவை, அவரது விருப்பம் இல்லாமல் கடத்தி சென்றார். என் மனைவி எங்கே உள்ளார் என தெரியவில்லை. அவரது உயிருக்கும், எனது உயிருக்கும் ஆபத்து, எனவே என் மனைவியை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கில், கிருத்திகாவின் பெற்றோர்கள் தாக்கல் செய்த மனுவில், “இது உண்மை இல்லை. வினித்திற்கும் கிருத்திகாவுக்கும் இடையே திருமணம் நடைபெறவில்லை. கடந்த 6 ஆண்டுகளாக காதல் இல்லை. கிருத்திகாவிற்கு கடந்த அக்டோபர் மாதம்  வேறு ஒருவருடன் திருமணம் நடந்தது. எங்கள் பெண்ணை காப்பற்றி வந்தோம். எனவே எங்களுக்கு இந்த வழக்கில் ஜாமின் வழங்க வேண்டும்” என கூறி உள்ளனர்.

இதே போல், இந்த வழக்கில் தொடர்புடைய நவீன் பட்டேலின் மனைவி தர்மிஷ்தா பட்டேல், விஷால், கிரித்தி பட்டேல், ராஜேஷ் பட்டேல், ராசு, ஷண்முகராஜ், மைத்ரிக் உள்ளிட்ட 8 பேர் முன் ஜாமின் மனு தாக்கல் செய்து உள்ளனர். இந்த ஜாமீன் மற்றும் முன் ஜாமின்  மனுக்கள் நீதிபதி ஜெகதீஸ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், “கிருத்திகாவிற்கு கடந்த அக்டோபர் மாதம் குஜராத்தில் திருமணம் நடைபெறவில்லை. நிச்சயதார்த்தம்தான் நடைபெற்றது. நிச்சயதார்த்தம் நடைபெற்றதற்கான ஆதாரங்கள் மட்டுமே உள்ளது. அதன் பிறகு இவர், தென்காசி வினித் என்பவருடன் காதல் திருமணம் செய்து கொண்டார். திருமணம் பதிவு செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

மேலும், “வினித்துடன் கிருத்திகா காதல்  திருமணம் செய்து கொண்டதை ஏற்காத கிருத்திகாவின் பெற்றோர், தை பொங்கலுக்கு முதல் நாளும், மற்றொரு நாள் என இரண்டு முறை கிருத்திகாவை கடத்திச் செல்வதற்கு முயற்சி செய்தனர். 2 முயற்சியும் தோல்வியில் முடிந்தது. மூன்றாவது முறையாக ஜனவரி 25ஆம் தேதி அன்று காவல் நிலையத்திற்கு சென்று வினித்தும் கிருத்திகாவும் திரும்பும்பொழுது கிருத்திகாவை அவரது பெற்றொர் பலவந்தமாக  கடத்தி சென்றுள்ளனர். தரதரவென இழுத்து பட்டப்பகலில் கடத்தி சென்றுள்ளனர். CCTV ஆதாரங்கள் உள்ளது. எனவே, கிருத்திகாவையும் இந்த வழக்கில் சேர்த்து விசாரிக்க வேண்டிய சூழல் உள்ளது.

கிருத்திகா கடத்தப்பட்ட பிறகு அவர் பேசுவதற்கும் அதற்கு முன்னர் அவர் பேசுவதற்கும் பல்வேறு முரண்பட்ட தகவல் உள்ளன. அவர் பொற்றோரால் மூளை சலவை செய்யப்பட்டு, அச்சுறுத்தப்பட்டு உள்ளார். எனவே இந்த வழக்கில் ஜாமின், முன்ஜாமின் வழங்கக் கூடாது” என அரசு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “கிருத்திகா தென்காசி மாவட்ட நீதிமன்றத்தில், நீதிபதிக்கு அளித்த வாக்குமூலத்தில் தன்னை யாரும் கடத்தவில்லை, தானாக விரும்பிச் சென்றதாக கூறியுள்ளார். மேலும் தற்போது அவர் வினித்துடன் செல்ல விரும்பாமல் அவரது சித்தப்பாவுடன் கேரளாவில் தங்கி உள்ளார்.

எனவே இந்த நிலையில் இந்த கடத்தல் வழக்கில் நாங்கள் என்ன செய்வது என்று தெரியவில்லை. எனவே, அதே நேரத்தில் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆணவத்துடன் கிருத்திகாவை அவரது பெற்றோர்கள் பட்டப்பகலில் கடத்தி சென்றனர். இதற்கான  CCTV  ஆதாரம் உள்ளது.  இது காதல் திருமணத்தை தடுப்பதற்கான  பெற்றோரின் ஆணவ, அராஜக செயலாகவே பார்க்கப்படுகிறது. எனவே கடத்தல் விவகாரத்தில் முழு விசாரணை வேண்டும்” என கூறினர்.

மேலும், “கிருத்திகா கடத்தியதற்கு முன்பும் பின்பும் முரணாக பேசி வருகிறார். கிருத்திகா அவரது பெற்றோரால் அச்சுறுத்தப்பட்டிருக்க வேண்டும் என அரசு தரப்பில் கூறுகின்றனர். எனவே விசாரணை தேவைப்படுகிறது என கேட்கிறார். அதில் நீதிமன்றம்  உடன்படுகிறது. அதே நேரத்தில் கிருத்திகா கடத்தல் வழக்கில் தற்போது ஜாமீன் கேட்டுள்ள ஐந்து பேர், கிருத்திகாவின் கடத்தல் சம்பவத்தில் நேரடியாக சம்பந்தபடவில்லை. ஆனால் அவர்கள்  கிருத்திகா கடத்தலுக்கு உடந்தையாக கூட்டு சதியில் ஈடுபட்டு உள்ளனர்.

எனவே, கிருத்திகா கடத்தல் வழக்கில் 5 பேருக்கு நிபந்தனையுடன்  ஜாமீன் வழங்கப்படுகிறது. ஐந்து பேரும் மறு உத்தரவு வரும் வரை காலை, மாலை இருவேளையும் குற்றாலம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். மேலும் 8 பேரின் முன் ஜாமின் மனுக்களை  பொருத்தவரை பட்டப்பகலில்  கிருத்திகாவை  கடத்தியதற்கான ஆதாரங்கள் உள்ளதால், உரிய விசாரணை தேவைபடுவதால் முன் ஜாமின் மனுக்கள் வாபஸ் பெற்றுகொண்டதை தொடர்ந்து  தள்ளுபடி செய்யப்படுகிறது” என உத்தரவிட்டார்.

First published:

Tags: Crime News, Kidnapping Case, Madurai High Court