என் கழுத்தை நெரித்து என் மனைவியை அவரது குடும்பத்தினர் தூக்கி சென்றதாகவும் அவர்கள் ஏற்கனவே அவரை கொலை செய்ய முயற்சித்ததாகவும் இந்த முறை எனக்கும் என் மனைவிக்கும் பாதுகாப்பு வேண்டும் எனவும் தென்காசியை சேர்ந்த நபர் காவல்துறையில் புகாரளித்துள்ளார். தென்காசி மாவட்டம் இலஞ்சி அருகேயுள்ள கொட்டாகுளம் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். விவசாயியான இவரது மகன் வினித் சென்னையில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அதேபகுதியை சேர்ந்த குஜாரத் மாநிலத்தை சேர்ந்த நவீன் பட்டேல் என்பவர் 20 ஆண்டுகாலமாக மரக்கடை நடத்தி வருகிறார். இவரது மகள் கிருத்திகாவும், வினித்தும் பள்ளி பருவம் முதலே ஒருவருக்கொருவர் காதலித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் -27ம் தேதி இருவரும் திருமணம் செய்துகொண்டு அதை சட்டப்பூர்வமாக பதிவு செய்து கொண்டனர். பெண் வீட்டாரை எதிர்த்து இந்த திருமணம் நடைபெற்றதால் பாதுகாப்பு கேட்டு குற்றால காவல்துறையிடம் மணமக்கள் மனு அளித்திருந்தனர். இதற்கிடையே புதன் மதியம் தென்காசி குத்துக்கல்வலசை பகுதியில் உறவினர் வீட்டில் வினித் தன் மனைவி மற்றும் பெற்றோருடன் இருந்த போது அடியாட்களுடன் அங்கு வந்த பெண் வீட்டார் கண்மூடித்தனமான தாக்குதலில் ஈடுபட ஆரம்பித்தனர்.
அங்கிருந்த காரை அடித்து நொறுக்கியதுடன் கிருத்திகாவின் சம்மதமின்றி அவரையும் அடித்து வலுக்கட்டாயமாக தூக்கி சென்றுள்ளனர். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகார் மீதும் போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் தூக்கிச் செல்லப்பட்ட பெண்ணின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சத்துடன் இருந்து வருகின்றனர்.
காவல்துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு பெண்ணை பத்திரமாக மீட்டு தரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து வினித், “நாங்கள் காதலித்து திருமணம் செய்துகொண்டோம். கிருத்திகா என்னுடன் தான் இருக்க வேண்டும் என காவல்துறையில் எழுதிகொடுத்துள்ளார். இப்போது பெண்வீட்டார் என் கழுத்தை நெரித்து என் மனைவியை அவரது குடும்பத்தினர் தூக்கி சென்றதாகவும் அவர்கள் ஏற்கனவே அவரை கொலை செய்ய முயற்சித்ததாகவும் இந்த முறை எனக்கும் என் மனைவிக்கும் பாதுகாப்பு வேண்டும்” எனவும் புகாரளித்துள்ளார்
இந்நிலையில், வினித் கொடுத்த புகாரின் பேரில் கிருத்திகாவின் உறவினர்களான நவீன் பட்டேல், தர்மிஸ்தா பட்டேல், கீர்த்தி பட்டேல், மைத்திக் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாப்பிள்ளை வீட்டாரை அடித்து நொறுக்கி திருமணமான பெண்ணை அவரது சம்மதம் இன்றி, பெண் வீட்டார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Love marriage, Tenkasi