ஸ்மார்ட்போன் விற்பனையில் ’சியோமி’முதலிடம் - சாம்சங், ஆப்பிள் நிறுவனங்கள் சரிவு.. என்ன காரணம் தெரியுமா?

ஸ்மார்ட்போன் விற்பனையில் ’சியோமி’முதலிடம்

உலகளவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் சீனாவின் சியோமி நிறுவனம் முதன்முறையாக சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளது.

  • Share this:
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி, இந்திய ஸ்மார்ட்போன் சந்தைகளில் கடந்த சில வருடங்களாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தற்போது உலகளவிலும் விற்பனையில் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது. ஸ்மார்ட்போன்கள் விற்பனை தொடர்பாக கவுண்டர்பாய்ண்ட் நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தி, புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஸ்மார்ட்போன் விற்பனையில் உலகளவில் ஆதிக்கம் செலுத்தி வந்த சாம்சங் நிறுவனம் சரிவைக் கண்டுள்ளது.

இந்த ஆய்வின்படி, இந்த ஆண்டு மே மாதம் விற்பனையின்படி ஒட்டுமொத்தமாக 26 விழுக்காடு அதிகமாக ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து சியோமி நிறுவனம் முதல் இடத்தை பிடித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக சாம்சங் நிறுவனமும், 3வது இடத்தில் ஆப்பிள் நிறுவனமும் உள்ளன. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சாம்சங் ஸ்மார்ட்போன் உற்பத்திக்கான உதிரி பாகங்கள் கிடைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் தயாரிப்பு பெருமளவு வியட்நாமில் இருப்பதால், அங்கு நிலவும் கொரோனா வைரஸ் பரவல் சாம்சங் ஸ்மார்ட்போன் உற்பத்தியை நேரடியாக பாதித்துள்ளது.

இதனால், உற்பத்தியில் சரிவு ஏற்பட்டு, விற்பனையிலும் சாம்சங் நிறுவனம் பின்தங்கியுள்ளது. கவுண்ட்ர்பாயிண்ட் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, ஜூன் 2021 நிலவரத்தின் அடிப்படையில் உலகளவில் சியோமி நிறுவனம் ஸ்மார்ட்போன் விற்பனையில் 17.1 விழுக்காடு கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளது. சாம்சங் நிறுவனம் 15.7 விழுக்காடு உடன் 2வது இடத்திலும், 14.3 விழுக்காடு உடன் ஆப்பிள் நிறுவனம் 3வது இடத்திலும் உள்ளது.

Also Read : இனி ஸ்மார்ட் ஃபோன் கேமரா மூலம் டிவி-யிலிருந்து வீடியோ கால் - ஜியோ ஃபைபர் யூஸர்கள் மகிழ்ச்சி!

சியோமி நிறுவனம் ஸ்மார்ட்போன் சந்தையில் முதல் இடத்தை பிடித்திருப்பதற்கு சந்தையில் இருக்கும் பல்வேறு காரணிகளும் காரணமாக உள்ளன. சாம்சங் நிறுவனம் உற்பத்தி பாதிப்பு மற்றும் சப்ளை செயின் பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. ஹூவாய் நிறுவனம் அமெரிக்காவில் வர்த்தக தடையை எதிர்கொண்டுள்ளது. இந்த சாதகமான சூழலை சியோமி நிறுவனம், சரியாக பயன்படுத்திக்கொண்டு விற்பனையில் கொடிகட்டி பறக்கிறது.



குறிப்பாக, ப்ரீமியம் செக்மெண்ட் மொபைல் விற்பனை சியோமி நிறுவனத்துக்கு பெரும் வரவேற்பை கொடுத்துள்ளது. கவுண்டர்பாயிண்ட் நிறுவனத்தின் இயக்குநர் தருண் பதாக் பேசும்போது, ஹூவாய் நிறுவனத்தின் சரிவால் ஏற்பட்ட வெற்றிடத்தை சியோமி நிறுவனம் சரியாக பயன்படுத்திக்கொண்டதாக கூறியுள்ளார். இந்த சமயத்தில் உற்பத்தி மற்றும் விற்பனையை சியோமி வேகப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

Also Read : வாங்கிய ஐந்தே நாளில் வெடித்து சிதறிய ஒன்பிளஸ் நார்டு பேட்டரி!

 

 



மேலும், எதிர்பாரதவிதமாக சாம்சங் நிறுவனத்தின் சப்ளை செயின் பாதிக்கப்பட்டது சியோமி நிறுவனத்துக்கான வாய்ப்பாக மாறியதாக குறிப்பிட்டுள்ள தருண் பதக், இந்த நேரத்தில் இந்தியா, சீனா, ஐரோப்பாவில் சியோமியின் விற்பனை இன்னும் அதிகரித்ததாக தெரிவித்துள்ளார். சியோமியின் Mi 11 வகை ஸ்மார்ட்போன்கள், மொபைல் மார்க்கெட்டில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் தருண் பதக் தெரிவித்துள்ளார்

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Tamilmalar Natarajan
First published: