கூகுள் நிறுவனம் VS ஆஸ்திரேலிய அரசு - முற்றும் மோதல்! காரணம் என்ன?

கூகுள் நிறுவனம் VS ஆஸ்திரேலிய அரசு - முற்றும் மோதல்! காரணம் என்ன?

கூகுள் நிறுவனம்

ஆஸ்திரேலியாவில் அதிகளவு வாடிக்கையாளர்களை வைத்திருக்கும் கூகுள், தாங்கள் ஈட்டும் வருவாயில் குறிப்பிட்ட தொகையை ஊடக நிறுவனங்களுக்கு கொடுப்பதில் தவறில்லை என கூறியுள்ளது.

  • Share this:
செய்தி நிறுவனங்களுக்கு ராயல்டி வழங்கும் வகையில் ஆஸ்திரேலிய அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள கூகுள் நிறுவனம், சட்டத்தை கைவிடாவிட்டால் அந்நாட்டில் இருந்து வெளியேறப்போவதாகவும் அறிவித்துள்ளது. மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் என ஆஸ்திரேலிய பிரதமரும் அறிவித்துள்ளதால் மோதல் முற்றியுள்ளது

கூகுள் vs ஆஸ்திரேலியா:

ஆஸ்திரேலிய செய்தி வலைதளங்களின் செய்திகள், இணைப்புகள் ஆகியவற்றை தங்களின் இணைய தளங்களில் வெளியிடுவதற்கு கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள், செய்தி நிறுவனங்களுக்கு ராயல்டி கட்டணம் செலுத்த வேண்டும் என்று ஆஸ்திரேலியா புதிய சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால் அதற்கு கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் தங்களின் கடுமையாக எதிர்ப்பை பதிவு செய்திருக்கின்றன.

இந்த சட்டம் கடினமானதாக இருப்பதாகவும், நாட்டு மக்கள் தங்கள் சேவைகளைப் பயன்படுத்துவதை பாதிக்கும் என தெரிவித்துள்ளன. இது தொடர்பான செனட் விசாரணைக்கு ஆஜரான கூகுள், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து பிரிவின் நிர்வாக இயக்குனர் மெல் சில்வா, புதிய சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், ஆஸ்திரேலியாவில் கூகுள் தேடல் சேவையை ரத்து செய்வதை தவிர எங்கள் நிறுவனத்துக்கு வேறு வழியில்லை என கூறினார். மேலும், கூகுள் சர்ச் என்ஜின் நிறுத்தபடும்பட்சத்தில், அது கூகுளுக்கு மட்டுமின்றி, ஆஸ்திரேலிய மக்களையும் கடுமையாக பாதிக்கும் என தெரிவித்தார்.

கூகுள் நிறுவனம்


பிரதமர் ஸ்காட் மோரிசன் பதிலடி:

கூகுள் நிறுவனத்தின் விளக்கத்துக்கு உடனடியாக பதிலடி கொடுத்துள்ள ஆஸ்திரேலிய பிரதமர் மோரிசன், கூகுள் நிறுவனத்தின் மிரட்டலுக்கு அரசு அஞ்சாது என கூறியுள்ளார். அரசு வகுத்துள்ள விதிகளின்படி மட்டுமே நீங்கள் செயல்பட முடியும் எனவும், புதிய சட்டம் நாடாளுமன்றத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதனால், அரசின் சட்ட திட்டங்களுக்குட்பட்டு செயல்படவேண்டியது அவசியம் என கூகுள் நிறுவனத்துக்கு காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.

ஆஸ்திரேலிய அரசின் நோக்கம்:

ஆஸ்திரேலியாவில் கூகுள் சர்ச் என்ஜின் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. அத்தியாவசிய தேவைகளுள் ஒன்றாக கூகுள் சர்ச் மாறிவிட்டதால், கூகுள் நிறுவனத்துக்கு இதனால் அதிக லாபம் கிடைப்பதாக கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் அதிகளவு வாடிக்கையாளர்களை வைத்திருக்கும் கூகுள், தாங்கள் ஈட்டும் வருவாயில் குறிப்பிட்ட தொகையை ஊடக நிறுவனங்களுக்கு கொடுப்பதில் தவறில்லை என கூறியுள்ளது.

ஜனநாயகத்துக்கு ஊடகங்களின் துணை அவசியம் என்றும், தொழில்நுட்ப நிறுவனங்களின் வளர்ச்சிக்குப்பிறகு அச்சு ஊடகங்களின் வளர்ச்சி மிகப்பெரிய சரிவைக் கண்டிருப்பதாகவும் ஆஸ்திரேலியா தெரிவிக்கிறது. ஆஸ்திரேலியாவின் நடவடிக்கையை உலக நாடுகளும் கவனித்து வருகின்றன. புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை கைவிட வேண்டும் என கூகுள் நிறுவனத்துக்கு ஆதரவாக அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகளும், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவில் கூகுள் சேவை பயன்படுத்துவதன் மூலம் அந்த நிறுவனத்துக்கு 27,000 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாகவும், 335 கோடி ரூபாய் மட்டுமே வரியாக கூகுள் கொடுத்திருப்பதாகவும் ஆஸ்திரேலிய அரசு கூறியுள்ளது.

கூகுள் நிறுவனத்தின் விளக்கம்:

கூகுள் நிறுவனத்தின் சர்ச் என்ஜின் மற்றும் லிங்குகள் மூலம் வாடிக்கையாளர் செய்திகளை படிப்பதற்கு கூகுள் நிறுவனம் எதற்கு பணம் கொடுக்க வேண்டும் எனக் கேள்வி எழுப்பியுள்ளது. இது பொருளாதாரத்துக்கு தவறான முன்னுதாரணமாக அமைந்து விடும் எனவும் விளக்கமளித்துள்ளது. இதனால், தங்கள் நிறுவனத்துக்கு நிதிச்சிக்கல் எழ வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய கூகுள் பொறுப்பாளர் சில்வா, இப்படியான ஆபத்து நிறைந்த இடத்தில் மேலும் சேவையை தொடர்ந்து வழங்க முடியாது என கூறியுள்ளார். கடந்த ஒரு வாரமாக கூகுள் மூலம் உள்ளூர் செய்திகள் வெளியாவது குறைந்துள்ளதாகவும், இதன் பின்னணியில் அரசு இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Arun
First published: