மத்திய அரசு கொண்டு வந்த புதிய விதிமுறைகளுக்கு எதிராக வாட்ஸ் அப் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்திய அரசின் புதிய விதிகள் தனியுரிமை தரவு பாதுகாப்பிற்கு முடிவு கட்டும் விதத்தில் அமையும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.
சமூக வலைதளங்களான
வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற நிறுவனங்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசு புதிய விதிகளை வகுத்தது. அந்த விதிகளில் ஒன்றான ஒரு சர்ச்சைக்குரிய தகவலை யார் முதலில் பகிர்ந்தார் என்ற தகவலை இந்திய அரசு கேட்கும்பட்சத்தில் அதனை ஆராய்ந்து தகவல் கூற சமூக வலைதள நிறுவனங்கள் தயாராக இருக்க வேண்டும் என்பதாகும். இந்த விதிகளை ஏற்கவில்லை என்றால், இந்தியாவில் அந்நிறுவனங்கள் இயங்குவதில் சிக்கல் ஏற்படும் என தெரிவித்திருந்தது.
இந்நிலையில், அதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது. இதனையடுத்து ட்விட்டர், ஃபேஸ்புக் ஆகிய சமூக வலைதளங்கள் இன்று முதல் இந்தியாவில் முடக்கப்படுமா என்ற விவாதம் இரண்டு நாட்களாக வந்த வண்ணம் இருந்தன. மேலும், மத்திய அரசு அறிவித்துள்ள சமூக வலைதளங்கள் தொடர்பான புதிய விதிகளை ஃபேஸ்புக் ஏற்றுக்கொண்டதாக பரவிய தகவலில் உண்மையில்லை என கூறப்பட்டுள்ளது.
உண்மையில், ஃபேஸ்புக் தெரிவிப்பது, மக்களின் கருத்து சுதந்திரத்தை மதிக்கும் தளமாக எங்கள் தளம் இயங்கி வருகிறது. ஆனால் எங்களுக்கு இந்திய அரசின் விதிகளுக்கு இணங்கி இயங்குவதில் பிரச்சனை இல்லை, அதேசமயம் எங்கள் தரப்பில் இருக்கும் சில விஷயங்களையும் அரசு ஏற்க ஆலோசனை வேண்டும் என தெரிவித்தது. இருப்பினும் ட்விட்டர் தரப்பில் இருந்து எந்தவித கருத்து வெளிவரவில்லை.
இந்நிலையில், மத்திய அரசின் புதிய விதிகளுக்கு எதிராக
வாட்ஸ் அப் நிர்வாகம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது. இந்திய அரசின் புதிய விதிகளின்படி ஒரு தகவலை யார் முதலில் பகிர்ந்தார் என்பதை ஆராய்வது கடினம். ஏனெனில், வாட்ஸ் அப் பாதுகாப்பு ப்ரைவசிப்படி, ஒருவர் இன்னுருக்கு பகிரும் தகவலை கண்காணிப்பது தனியுரிமை தரவு பாதுகாப்பிற்கு முடிவு கட்டும் விதத்தில் அமையும் என்றும் இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்றும்
வாட்ஸ் அப் நிறுவனம் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அவ்வாறு செய்யும்பட்சத்தில் அது எண்ட்-டூ-எண்ட் என்கிரிப்ஷன் விதிக்கு எதிரானதாக அமைந்துவிடும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. இந்த வழக்கானது விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.