வாட்ஸ் அப்பை வெப்பில் பயன்படுத்துகிறீர்களா? உங்களுக்கே தெரியாமல் உங்களின் உரையாடல்களை ஹேக்கர்களும் வாசிக்கலாம்!

கடந்த 24 மணி நேரத்தில் பயனர்கள் பலருக்கும் அடையாளம் தெரியாத உள்நுழைவு OTPகள் வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 24 மணி நேரத்தில் பயனர்கள் பலருக்கும் அடையாளம் தெரியாத உள்நுழைவு OTPகள் வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • Share this:
வாட்ஸ் அப்-க்கு இது போதாத காலம் என்றே சொல்ல வேண்டும். சமீபத்தில் அந்நிறுவனம் அறிவித்த புதிய கொள்கை, பயனாளர்களிடம் மாபெரும் எதிர்ப்பை சந்தித்த நிலையில் வாட்ஸ் அப்பை விட்டே வெளியேறி பிற செயலிகளை நாடத் தொடங்கினர். தற்போது வாட்ஸ் அப்பின் மேலும் ஒரு பாதுகாப்பு குளறுபடி அம்பலமாகியிருக்கிறது. அது என்ன என விவரமாக தெரிந்து கொள்வோம்.

வாட்ஸ்-அப்பில் பயனாளர்களின் உரையாடல்கள் கண்காணிக்கப்பட்டு, வணிக நோக்கில் அந்த தகவல்கள் பிற நிறுவனங்களுக்கும் வழங்கப்படும் என சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இதற்கு ஒப்புதல் அளிக்காதவர்கள் பிப்ரவரி 8ம் தேதிக்கு பிறகு, வாட்ஸ்-அப் செயலியை பயன்படுத்த முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கு, கடும் கண்டனங்கள் குவிந்ததுடன், வாட்ஸ்-அப்  பயனாளர்கள் பலர், பிற செயலிகளுக்கு மாறத் தொடங்கினர்.

இந்நிலையில், தங்களது புதிய கொள்கை தொடர்பாக மக்களிடையே தவறான தகவல் பரவுவதாகவும், அதனை நீக்கும் முயற்சியில் ஈடுபட உள்ளதால், மே 15ம் தேதி வரை புதிய கொள்கையை ஆராய்ந்து பயனாளர்கள் அதற்கு ஒப்புதல் வழங்கலாம் என , வாட்ஸ்-அப் நிறுவனம் நேற்று அறிவித்துள்ளது.

“எங்களின் சமீபத்தில் கொள்கை குறித்து பல தரப்பு மக்களிடமும் பல்வேறு விதமான குழப்பங்கள் ஏற்பட்டிருப்பதாக அறிகிறோம். புதிய கொள்கையானது பேஸ்புக் உடன் வாட்ஸ் அப் தரவைப் பகிரும் திறனை விரிவாக்காது.உங்களின் தனிப்பட்ட தகவல்களை எங்களால் பார்க்க முடியாது, நீங்கள் கால்கள் மூலம் பேசும் போது எங்களால் அதனை கேட்க முடியாது. உங்களிடம் யார் யாரெல்லாம் பேசுகிறார்கள் என நாங்கள் பதிவு எதையும் வைப்பதில்லை.நீங்கள் ஷேர் செய்யும் லொகேஷன்களை எங்களால் பார்க்க முடியாது, இது ஃபேஸ்புக்கிற்கும் செல்லாது” என வாட்ஸ் அப் விளக்கமளித்திருந்தது.

இதனிடையே இதனைவிடவும் ஆபத்தான பாதுகாப்பு குளறுபடி வாட்ஸ் அப்பில் இருப்பது தற்போது அம்பலமாகியிருக்கிறது.

தனியார் தொலைபேசி எண்களை வாட்ஸ் அப் கூகுள் தேடலில் அட்டவணைப்படுத்துவதாக தற்போது தெரியவந்துள்ளது. வாட்ஸ் அப் செயலியினை கனிப்பொறி, லேப்டாப்களில் இணைத்து வாட்ஸ் அப் வெப்பில் பயன்படுத்துபவர்களின் எண்களே கூகுள் தேடலில் அட்டவணைப்படுத்தப்படுவதாக தற்போது தெரியவந்துள்ளது. இதன் மூலம் ஹேக்கர்கள் வாட்ஸ் அப் சாட்கள் ஹேக்கர்களின் கைக்கு செல்லும் ஆபத்து ஏற்படுவதாக எச்சரிக்கின்றனர். இது தனிப்பட்டவர்களின் தகவல் திருட்டுக்கு வித்திடும் எனவும் பாதுகாப்பு வல்லுநர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் பயனர்கள் பலருக்கும் அடையாளம் தெரியாத உள்நுழைவு OTPகள் வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் ஹேக்கர்கள் வாட்ஸ் அப் சாட்களை அணுகும் முயற்சியை தொடங்கியிருப்பதாகவே கருதப்படுகிறது.

இது தொடர்பாக விரைவில் வாட்ஸ் அப் நிறுவனம் விளக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Published by:Arun
First published: