மைக்ரோசாப்ட் vs கூகுள் மோதல் பின்னணி.. அப்படி என்ன தான் பிரச்சனை?

மைக்ரோசாப்ட் vs கூகுள்

டிஜிட்டல் தளங்களில் செய்தியை வெளியிடுவதில் கூகுள் மற்றும் பேஸ்புக் ஆதிக்கம் செலுத்தக் கூடாது என்ற விவகாரத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கும் கூகுள் நிறுவனத்துக்கும் இடையே முரண்பாடு எழுந்துள்ளது.

  • Share this:
செய்தி நிறுவனங்களுக்கு பணம் கொடுப்பது தொடர்பான விசாரணையில், போட்டியாளரை எதிர்கொள்ள துணிவில்லாமல், மறைமுகமாக குறைக்கும் முயற்சியில் மைக்ரோசாப்ட் ஈடுபடுவதாக கூகுள் குற்றம்சாட்டியுள்ளது.

இலவச மற்றும் பன்முக பத்திரிக்கைகளின் நம்பிக்கையற்ற மற்றும் வணிக அம்சங்கள் குறித்து, அமெரிக்காவில் இதற்காக அமைக்கப்பட்ட ஹவுஸ் கமிட்டி விசாரித்து வருகிறது. இதில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர் பிராட் ஸ்மித் (Brad smith) பிரமாணப் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்தார். அதில், உலகளவில் செய்தி நிறுவனங்களின் வளர்ச்சியை கூகுள் தடுத்து வருவதாக குற்றம்சாட்டினார். விளம்பரங்களை விற்பதற்கான முகாந்திரம் செய்தி நிறுவனங்களுக்கு இருப்பதாகவும், ஆனால் விரும்புகிற இடத்தில் அவர்களால் அதனை ஒருபோதும் செய்ய முடிவதில்லை என்றும் கூறினார்.

ஆனால், கூகுள் நிறுவனத்தின் உபகரணங்களை செய்தி நிறுவனங்கள் பயன்படுத்த வேண்டியிருப்பதாகவும், கூகுள் நிறுவனத்தின் விளம்பர எக்ஸ்சேஞ்ச் மற்றும் கூகுள் ஆபரேஷனுக்கு டேட்டா பங்களிப்பு செய்ய வேண்டியிருப்பதாகவும், அதற்கு பணமும் செலுத்துவதாக ஸ்மித் தெரிவித்தார். இதற்கு பதில் அளித்துள்ள கூகுளின் சர்வதேச விவகாரங்களை கவனித்து வரும் கென்ட் வால்கர் (Kent Walker), மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் குற்றச்சாட்டு ஒன்றும் புதிதல்ல, நீண்டகாலமாக அவர்கள் பின்பற்றி வரும் நடைமுறையின் வெளிப்பாடு தான் எனத் தெரிவித்துள்ளார். எப்போதெல்லாம் கூகுள் நிறுவனத்துக்கு எதிராக காற்றுவீசுகிறதோ, அப்போதெல்லாம் இதுபோன்ற செயல்களில் மைக்ரோசாப்ட் ஈடுப்பட்டு வருவதாகவும் கென்ட் வால்கர் கூறியுள்ளார்.

இதன்மூலம் வெளிப்படையாக செயல்பட்டு வரும் இணைய சேவையை உடைத்து, தங்களுக்கான போட்டியாளரை குறைக்கும் முயற்சியில் அந்நிறுவனம் ஈடுபட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ள வால்கர், கூகுள் நிறுவனத்துக்கும், செய்தி நிறுவனங்களுக்கும் இடையில் இருக்கும் தொழில் ஒப்பந்தம் மற்றும் பிற புரிந்துணர்வுகள் குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனம் புரிந்துகொண்டிருப்பது முற்றிலும் தவறானது எனக் கூறியுள்ளார்.

விளம்பர உரிமை டிஜிட்டல் தளங்களில் செய்தியை வெளியிடும் செய்தி நிறுவனங்களிடம் மட்டுமே இருக்க வேண்டும், அதில் டெக் ஜாம்பவான்களாக இருக்கும் கூகுள் மற்றும் பேஸ்புக் ஆதிக்கம் செலுத்தக் கூடாது என்ற விவகாரத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கும் கூகுள் நிறுவனத்துக்கும் இடையே முரண்பாடு எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் பேஸ்புக் நிறுவனத்தையும் மைக்ரோசாப்ட் விமர்சித்து வருகிறது. இதுதொடர்பாக ஆஸ்திரேலிய அரசு கொண்டு வந்த சட்டத்துக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனம் தன்னுடைய முழு ஆதரவையும் தெரிவித்திருந்தது.

அதாவது, செய்திகளை வெளியிடும் நிறுவனங்களுக்கு விளம்பரத்தில் கிடைக்கும் வருவாயை பங்கீடு செய்து கொள்ள வேண்டும் என ஆஸ்திரேலிய அரசு தெரிவித்தது. இது தொடர்பாக அந்த நாடு புதிய சட்டம் ஒன்றையும் இயற்றி, நடைமுறைப்படுத்த முயன்று வருகிறது. இந்த சட்டத்துக்கு கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. ஆஸ்திரேலியாவில் புதிய சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் கூகுள் சேவை ஆஸ்திரேலியாவில் இருந்து முழுமையாக விலக்கிக் கொள்ளப்படும் எனவும் அந்நிறுவனம் எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.
Published by:Tamilmalar Natarajan
First published: