ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் 2வது நாளாக நீடித்து வரும் நிலையில், ரஷ்ய படைகள் தொடர்பான காட்சிகளைப் பகிர்ந்த பலரது ட்விட்டர் கணக்குகள் அதன் கொள்கையை மீறியதாக கூறி முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய ஐரோப்பிய அமைப்புகளை நோக்கிய உக்ரைனின் நகர்வை ரஷ்யா நீண்ட காலமாக எதிர்த்து வருகிறது. ரஷ்யாவுடன் கலாச்சாரம் மற்றும் மொழி ரீதியாக தொடர்புகொண்டுள்ள உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணக்கம் காட்டுவதை அதிபர் விளாடிமிர் புதின் விரும்பவில்லை. 2014ம் ஆண்டு முதலே இருந்து வரும் இந்த பிரச்சனை கடந்த சில மாதங்களாக உச்சத்தை எட்டியது.
நேற்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கையை அறிவித்தார். இதனையடுத்து உக்ரைனுக்குள் நுழைந்த ரஷ்ய ராணுவப்படையினர் கடும் தாக்குதலில் ஈடுபட்டனர். உக்ரைன் நாட்டின் தலைநகரான கீவ்'-ல் உள்ள ஒடேசா துறைமுகத்தில் ரஷ்ய படைகள் சக்தி வாய்ந்த ஏவுகணை தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை உருவாக்கியது.
மேலும் டோனக்ஸ், கார்கிவ், மைக்கோல், மரியுபோல் உள்ளிட்ட முக்கிய நகரங்களை ரஷ்யா தாக்கி வருவதாகக் கூறப்படுகிறது. 2வது நாளாக உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் நகரம் குண்டு வீச்சுக்கு ஆளாவது, கட்டிடங்கள் பற்றி எரிவது, மக்கள் ரயில், விமான நிலையங்களில் தப்பிக்க வழியின்றி காத்திருப்பது போன்ற வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி மனதை உலுக்கி வருகிறது.
இந்நிலையில் ரஷ்யாவின் போர் தாக்குதல்கள் சம்பந்தமான வீடியோக்களை பதிவிட்ட பலரது ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ரஷ்ய ராணுவ படை மற்றும் கவச வாகனங்கள் உக்ரைன் எல்லைக்குள் நுழைவது, ரஷ்ய ஹெலிகாப்டர்கள் அல்லது டேங்க் வாகனங்களின் படையெடுப்பு காட்சிகளை கிழக்கு டான்பாஸ் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளில் உள்ள ட்விட்டர் யூஸர்கள் பதிவிட்டதாக தெரிகிறது.
இந்த வீடியோக்களை ரீ-ட்வீட் செய்த பலரது கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் 12 மணி நேரத்திற்கு முடக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இது எதிர்பாராதவிதமாக நடந்த தவறு என ட்விட்டர் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
ட்விட்டர் செய்தித் தொடர்பாளர் இன்சைடர் கூறுகையில், "ட்விட்டர் கொள்கைகளை மீறும் விதமாக பரப்பப்படும் வதந்திகள், கட்டுக்கதைகளை முன்கூட்டியே கண்காணித்து கட்டுப்படுத்தி வருகிறோம். இந்த நிகழ்வின் போது தவறுதலாக பல கணக்குகள் முடக்கப்பட்டுவிட்டன. இதுகுறித்து விரைவாக மதிப்பாய்வு செய்யப்பட்டு, முடக்கப்பட்ட யூஸர்களின் கணக்குகளை அனுமதிக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
Also read... War in Ukraine LIVE Updates: உதவி கோரி உக்ரைன் மன்றாடல்- தலைநகருக்குள் ஊடுருவும் ரஷ்யப் படைகள்
மேலும் ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கிய பிறகு OSINT கணக்குகள் மீது பொதுவாக ஆக்டிவ் செய்யப்பட்ட முடக்க நடவடிக்கையால் கூட நடைபெற்றிருக்கலாம் என ட்விட்டர் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ட்விட்டரின் தள ஒருமைப்பாட்டின் தலைவரான யோல் ரோத், சோசியல் மீடியாவில் தவறான தகவல்களை பரப்பக் கூடாது என்பதற்காக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை தவறாகிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.