விக்கிப்பீடியாவில் அதிக கட்டுரைகளை தமிழில் எழுதி வேலூர் அரசு ஊழியர் புதிய சாதனை!
விக்கிப்பீடியாவில் அதிக கட்டுரைகளை தமிழில் எழுதி வேலூர் அரசு ஊழியர் புதிய சாதனை!
கி. மூர்த்தி
Wikipedia Tamil நாள் ஒன்றிற்கு இரு கட்டுரைகளை எழுதியிருக்கிறார் என்பது வியப்பே. அது மட்டுமல்லாமல் பல கட்டுரைகளை மேம்படுத்தி சுமார் முப்பதாயிரத்திற்கும் மேல் மொத்தத் திருத்தங்களைத் தமிழ் விக்கிப்பீடியாவில் செய்துள்ளார்.
தமிழ் விக்கிப்பீடியா என்ற இணையக் கலைக்களஞ்சியம் இணையத் தமிழ் வளர்ச்சியின் முக்கிய அங்கமாக விளங்குகிறது. இதில் தற்போது வரை சுமார் 1.33 லட்சம் தமிழ்க் கட்டுரைகளுக்கு மேல் உருவாக்கப்பட்டுள்ளன. விக்கிப்பீடியாவில் பல்வேறு நாடுகளில் வசிக்கும் பயனர்கள் எழுதி வந்தாலும், இந்தியாவிலிருந்து தனியொருவராக 5000 தமிழ்க் கட்டுரைகளை உருவாக்கி முதல் நபராக வேலூரைச் சேர்ந்த கி. மூர்த்தி புதிய சாதனை படைத்துள்ளார்.
இணையத்தைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் ஏதோவொரு காலகட்டத்தில் இதைப் பயன்படுத்தியிருப்போம். ஆனால் அவ்வாறு பயன்பட்ட அனைவரும் இதில் பங்களிப்பதில்லை. பொதுவாக, சமூகத் தளங்களில் பொழுதைப் போக்கும் எத்தனையோ இணையவாசிகளின் நடுவே விக்கிப்பீடியாவில் ஐயாயிரம் தமிழ்க் கட்டுரைகளைத் தொடங்கி எழுதிய நபராக இவர் விளங்குகிறார்.
இலங்கையைச் சேர்ந்த புன்னியாமீனுக்கு அடுத்து உலகளவில் அதிக தமிழ்க் கட்டுரைகளை உருவாக்கியவர் என்ற பெருமையும் இவரைச் சாரும். தமிழக அரசின் கருவூலக் கணக்குத் துறையின் பணிகளுக்கிடையே விக்கிப்பீடியாவில் அயராது பங்களித்துவருகிறார். இவர் அறிவியல் சார்ந்தும், அமைவிடங்கள் சார்ந்தும் இதர பொது அறிவு சார்ந்தும் எழுதியிருந்தாலும் வேதியியல் துறைசார்ந்த கட்டுரைகளில் கைத்தேர்ந்தவர்.
2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் எழுதி வரும் இவரின் கட்டுரை எண்ணிக்கையுடன் ஒப்பிட்டால் நாள் ஒன்றிற்கு இரு கட்டுரைகளை எழுதியிருக்கிறார் என்பது வியப்பே. அது மட்டுமல்லாமல் பல கட்டுரைகளை மேம்படுத்தி சுமார் முப்பதாயிரத்திற்கும் மேல் மொத்தத் திருத்தங்களைத் தமிழ் விக்கிப்பீடியாவில் செய்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் விக்சனரி, விக்கிமூலம், பொதுவகம் போன்ற சகோதரத் திட்டங்களிலும் கணிசமாகப் பங்களித்து வருகிறார். வேங்கைத் திட்டம் உட்பட பல்வேறு போட்டிகளில் முக்கிய பங்களிப்புகளைச் செய்து தமிழ் விக்கிப்பீடியாவின் வெற்றிக்குத் துணை நின்றவர். இவருடன் இவர் மனைவியும் பல்வேறு தலைப்புகளில் எழுதிவரும் விக்கிப்பீடியர் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மைக் காலங்களில் இணையவழிக் கற்றல் தவிர்க்கமுடியாத அங்கமாகி வருகிறது. அந்தக் கற்றலுக்கு வேராக இருக்கும் விக்கிப்பீடியா போன்ற கலைக்களஞ்சியத்தை வளர்க்கும் இத்தகைய தன்னார்வப் பங்களிப்புகளைப் பாராட்டி நாமும் இயன்றதை விக்கித் திட்டங்களில் செய்வோம்.
Published by:Yuvaraj V
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.