அதிநவீன ஸ்மார்ட்போன்கள் மற்றும் 4 ஜி தொழில்நுட்ப வருகைக்கு பிறகு மக்களின் தினசரி வாழ்க்கை முறை பெரிதளவில் மாற்றம் கண்டது. புதிய புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகின. மொபைல் ஆப்பின் மூலமே எல்லா தகவல் பறிமாற்றங்களையும் மேற்கொள்ளக் கூடிய தொழில்கள் எண்ணற்ற முறையில் உருவாகின. எல்லாத் தொழில்களும் இணையத்தைச் சார்ந்திருக்க வேண்டிய நிலையை அடைந்தது. 2015-ம் ஆண்டிலிருந்து இந்தியாவில் 4 ஜி அலைக்கற்றை பயன்பாடு தொடங்கியது.
அப்போதிலிருந்துதான் சாமானியர்களும் யூட்யூப் பயன்படுத்துதல், ஆப்பில் உணவு ஆர்டர் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் வேகம் பெறத் தொடங்கின. இந்தநிலையில், கடந்த சில ஆண்டுகளாகவே 5 ஜி தொழில்நுட்ப பயன்பாடு எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு இருந்துவருகிறது.
அரசின் கொள்கை முடிவுகளான டிஜிட்டல் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, மேக் இன் இந்தியா உள்ளிட்ட திட்டடங்களுக்கு டிஜிட்டல் தொடர்பு என்பது முக்கியமான ஒன்றாக இருந்துவருகிறது. 2014-ம் ஆண்டில் ப்ராட்பேண்ட் பயனாளர்களின் எண்ணிக்கை 10 கோடியாக இருந்த நிலையில் தற்போது 80 கோடியாக உயர்ந்துள்ளது.
இந்தநிலையில், பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் 5 ஜி அலைக்கற்றை ஏலம் விடுவதற்கு தொடர்பாக மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சகம் வைத்த கோரிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 5 ஜி அலைக்கற்றையை ஏலம் விடுவதன் மூலம் 5 ஜி சேவை பொதுமக்களுக்கும், தொழில்நிறுவனங்களுக்கும் கிடைக்கும்.
முன்னதாக, இந்தியாவில் 5 ஜி தொழில்நுடப்பத்தை உருவாக்குவதற்காக இந்தியாவின் 8 தலைசிறந்த தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்கு 5 ஜி சோதனை மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தது. வரவுள்ள 5 ஜி தொழில்நுட்பத்தின் மூலம் புதிய தலைமுறை தொழில்கள், புதிய நிறுவனங்கள் உருவாகும். அதன்மூலம் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று கணிக்கப்படுகிறது.
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.