ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதிலிருந்து பல்வேறு புதிய மாற்றங்களை ஏற்படுத்தி புதிய கொள்கைகளை அமல்படுத்தி வருகிறார். ஏற்கனவே வெரிஃபைடு அக்கவுண்டுகளுக்கு பணம் வசூலிப்பது முதல், தன் நிறுவனத்தின் பணியாளர்களையே வேலையை விட்டு நீக்குவது வரை பல்வேறு கடினமான முடிவுகளை எடுத்து சர்ச்சையில் சிக்கியுள்ளது நிறுவனம். ட்விட்டரின் மீது ஏற்பட்ட அதிருப்தியால் பலர் தங்களுடைய ட்விட்டர் கணக்குகளை நீக்கியும் வருகின்றனர்.
இது போன்ற பல சர்ச்சைகளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுபட்டு இப்போதுதான் ஓரளவு அனைத்தும் சரியாகி வரும் நிலையில் மீண்டும் ஒரு புதிய கொள்கையை அமல்படுத்தி ட்விட்டர் யூசர்களின் வயிற்றெரிச்சலை கிளப்பியுள்ளது அந்நிறுவனம். அதாவது, ட்விட்டர் சமீபத்தில் பதிவிட்ட ஒரு பதிவில் மற்ற சமூக வலைத்தளங்களை இலவசமாக ப்ரமோட் செய்வது போன்ற எந்த நடவடிக்கைகளையும் இனி ட்விட்டர் ஏற்றுக் கொள்ளாது. ட்விட்டர் வாசிகள் மற்ற சமூக வலைத்தளங்களின் லிங்கை ட்விட்டரில் போஸ்ட் செய்வது போன்ற நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டுள்ளன எனவும் இந்த கொள்கைகளை மீறுபவர்களின் பதிவுகள் நீக்கப்படும் என்றும் அவர்களின் கணக்குகள் தற்காலிகமாக முடக்கப்படலாம் என்று அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதாவது இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற மற்ற சமூக வலைத்தளங்களின் லிங்குகளை இனி ட்விட்டர் வாசிகள் தங்களது பக்கத்தில் பதிவிடுவது என்பது அதன் கொள்கைகளுக்கு எதிரானது என்பதுதான் இதற்கான பொருள். ஆனால் இதில் வேடிக்கை என்னவெனில் ட்விட்டர் நிறுவனத்தின் லிங்குகளை மற்ற சமூக வலைதளங்களில் போஸ்ட் செய்வதை அந்நிறுவனம் தடை செய்யவில்லை. அது மட்டுமல்லாமல் ஏற்கனவே நடைமுறையில் உள்ள மற்ற சமூக வலைத்தளங்களை ப்ரமோட் செய்வதற்கான பணம் செலுத்தி விளம்பரங்களை காண்பிக்கும் கொள்கையிலும் ட்விட்டர் நிறுவனம் எந்த திருத்தத்தையும் செய்யவில்லை.
இதன் மூலம் இந்த விஷயத்திலும் ட்விட்டர் நிறுவனம் லாபம் பார்க்க விரும்புகிறது என்று தெளிவாக தெரிவதாக பலர் தங்களுடைய விமர்சனங்களை வைத்தனர். மேலும் ட்விட்டரை அதிகம் பயன்படுத்தும் பத்திரிக்கையாளர்கள், நடிகர்கள் மற்ற பிரபலங்கள் உட்பட பலருடைய ட்வீட்டுகளையும் உடனடியாக நீக்கும் வேளையில் அந்நிறுவனம் ஈடுபட்டது. இதனால் விரக்தி அடைந்த அவர்கள் உடனடியாக ட்விட்டருக்கு மாற்றாக வேறு சமூக வலைத்தளங்களை நாட துவங்கினர்.
உடனடியாக விழித்துக் கொண்டு ட்விட்டர் நிறுவனம் தம்முடைய புதிய கொள்கைகளை திரும்பப் பெறுவதாக அறிவிப்பை வெளியிட்டது. மேலும் அதன் உரிமையாளரான எலான் மாஸ்க் இதற்கான வாக்கெடுப்பையும் நடத்தியுள்ளார். அதில் 87 சதவீத மக்கள் புதிய கொள்கைக்கு எதிராக வாக்களித்துள்ளனர். இதன் காரணமாக இந்த கொள்கைகளை மீண்டும் ட்விட்டர் நிறுவனம் அமல்படுத்தாது என்று தெரிகிறது. ட்விட்டரில் இந்த செயலினால் பலரும் மீண்டும் அதிருப்தியடைந்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Elon Musk, Technology, Twitter