கடந்த வார தொடக்கத்தின் போது, டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் சிஇஓ-வான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தின் 9.2% பங்கை தன்வசம் ஆக்கினார். ஏற்கனவே ட்விட்டரில் மிகவும் பிரபலமான மற்றும் பரபரப்பான ஒருவரான எலான் மஸ்க், 9.2% பங்கை வாங்கியதால் ட்விட்டரில் அவருக்கு சில "ஸ்பெஷலான கவனிப்புகள்" கிடைக்கும் என்று பேச்சு அடிப்பட்டது.
அதற்கு பதில் அளிக்கும் வண்ணம், பிரபல மைக்ரோ-பிளாக்கிங் தளமான ட்விட்டர் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் இடம் பெற்றாலும் கூட, டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க்கிற்கு ட்விட்டர் பிளாட்ஃபார்மில் 'ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட்' எதுவும் அளிக்கப் போவதில்லை என்று ட்விட்டர் நிறுவனம் கூறியுள்ளது.
தி வெர்ஜுக்கு அளித்த ஒரு விளக்கத்தில், ட்விட்டர் செய்தி தொடர்பாளர் அட்ரியன் ஜமோரா, "ட்விட்டர் தளமானது அதன் கொள்கைகள் மற்றும் விதிகளின் வளர்ச்சி மற்றும் அமலாக்கத்தில் பாரபட்சமற்ற தன்மைக்கு உறுதிபூண்டுள்ளது" என்று கூறி உள்ளார். அதாவது எலான் மஸ்க், மற்றவர்களைப் போலவே அதே ட்விட்டர் விதிகளுக்கு உட்படுவார் என்பதை மறைமுகமாக கூறியுள்ளார்.
இன்னும் சொல்லப்போனால், "தேவைப்பட்டால்" ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்க்கை தடை செய்யலாம் அல்லது இடைநீக்கம் செய்யலாம். ஆனால் ட்விட்டர் பிளாட்ஃபார்மில் எலான் மஸ்க்கிற்கு உள்ள செல்வாக்கை வைத்து பார்க்கும் போது, ட்விட்டரின் கொள்கைகள் குறித்து வாரிய உறுப்பினர்களால் எந்த முடிவையும் எடுக்க முடியாது, ஆனால் வழிகாட்டுதல் மற்றும் கருத்துக்களை முன்வைப்பதில் அவர்களுக்கு எப்போதும் பெரிய பங்கு உண்டு என்பதையும் ஜமோரா குறிப்பிட்டு உள்ளார்.
"எங்கள் கொள்கை முடிவுகள் வாரியம் அல்லது பங்குதாரர்களால் தீர்மானிக்கப்படுவதில்லை" என்பதையும் ஜமோரா மேற்கோள் காட்டினார். "எங்கள் சேவையின் முழுமையில், ஆலோசனை மற்றும் கருத்துக்களை வழங்குவதில் எங்கள் வாரியம் எப்போதுமே ஒரு முக்கிய பாத்திரத்தை வகிக்கிறது. ஆனாலும் எங்களின் அன்றாட நடவடிக்கைகள் மற்றும் முடிவுகள் ட்விட்டர் நிர்வாகம் மற்றும் ட்விட்டர் பணியாளர்களாலேயே எடுக்கப்படுகின்றன" என்றும் ஜமோரா கூறி உள்ளார்.
Also Read : ட்விட்டரில் அதிக ஃபாலோவர்ஸை கொண்டுள்ள டாப் 10 பிரபலங்கள்.!
முன்னதாக கடந்த வாரம் ட்விட்டரின் 9.2 சதவீத பங்குகளை எலான் மஸ்க் வாங்கினார். இதனை தொடர்ந்து ட்விட்டர் தளத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆன பராக் அகர்வால், 2024 ஆம் ஆண்டு வரை நிறுவனத்தின் குழுவில் இரண்டாம் வகுப்பு இயக்குநராக எலான் மஸ்க் பணியாற்றுவார் என்பதை உறுதிப்படுத்தினார்.
Also Read : எலான் மஸ்க் - ட்விட்டர் பனிப்போர் : என்ன நடந்தது.!
எலான் மஸ்க்கிற்கு ட்விட்டரில் உள்ள செல்வாக்கை பொறுத்தவரை, அதிகம் பேர் ஃபாலோ செய்யும் பிரபலங்களின் டாப் 10 பட்டியலில் எலான் மஸ்க்கும் உள்ளார். ட்விட்டரில் இவரை மொத்தம் 80.3 மில்லியன் பேர் ஃபாலோ செய்கிறார்கள், குறிப்பிட்ட பட்டியலில் எலான் மஸ்க் 8 வது இடத்தில் உள்ளார். ட்விட்டரின் 9.2% பங்கை வாங்கி உள்ள காரணத்தினாலேயே இவர் வரும் நாட்களில் மேலதிக ஃபாலோவார்ஸை பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.