ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

'அவசரப்படாதீங்க.. அபராதம் ரூ.133 கோடி கட்டுங்க..' கூகுளை வெளுத்துவாங்கிய தீர்ப்பாயம்!

'அவசரப்படாதீங்க.. அபராதம் ரூ.133 கோடி கட்டுங்க..' கூகுளை வெளுத்துவாங்கிய தீர்ப்பாயம்!

கூகுள்

கூகுள்

அபராதம் விதிக்கப்பட்டு 2 மாதங்கள் கழித்து மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருக்கும் நிலையில், 2 நிமிஷங்களில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

ஆண்ட்ராய்ட் கைப்பேசிகள் தொடர்பான வர்த்தகத்தில் முறைகேடாக  செயல்பட்டதாக கூகுள் நிறுவனத்துக்கு கடந்த அக்டோபர் 20 அன்று இந்திய தொழில் போட்டி ஆணையம்(சிசிஐ) ரூ.1,337.76 கோடி அபராதம் விதித்தது. மேலும் பிளே-ஸ்டோர் கொள்கைகளிலும் முறைகேடான செயல்களில் ஈடுபட்டதாக அந்த நிறுவனத்துக்கு சிசிஐ ரூ.936.44 கோடி அபராதம் விதித்தது. அதனை இரண்டு மாதங்களுக்குள் செலுத்துமாறு கூகுளுக்கு சிசிஐ உத்தரவிட்டது. ஆனால்  கூகுள் நிறுவனம் இன்று வரை இந்த அபராத தொகைகளை  செலுத்தவில்லை. இதையடுத்து அபராதங்களைச் செலுத்த வலியுறுத்தி, அண்மையில் கூகுளுக்கு சிசிஐ நோட்டீஸ் அனுப்பியது.

இதனையடுத்து  கூகுள் சார்பில் சிசிஐ-யின் இரண்டு அபராத உத்தரவுகளுக்கும் தடை விதிக்கக் கோரி தேசிய நிறுவனச் சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில்  மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு தீர்ப்பாய உறுப்பினர்கள் நீதிபதி ராகேஷ் குமார், அலோக் ஸ்ரீவாஸ்தவா ஆகியோரை கொண்ட அமர்வு முன்பாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, கூகுள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் அபிஷேக் மனு சிங்வி, "சிசிஐ அபராத உத்தரவு முற்றிலும் தவறானது. அதில் பிழைகள் நிறைந்துள்ளன. இந்த உத்தரவில் கூகுள் நிறுவனத்துக்கு எதிராக எந்தவித முறைகேடும் கண்டறியப்படவில்லை. எனவே, சிசிஐ சார்பில் கடந்த அக்டோபர் 20-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும்' என்றார்.

இதைக் கேட்ட தீர்ப்பாய உறுப்பினர்கள், "இந்த விவகாரத்தில் கூகுள் இவ்வளவு அவசரம் காட்டுவது ஏன்?  அபராதம் விதிக்கப்பட்டு 2 மாதங்கள் கழித்து மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருக்கும் நிலையில், 2 நிமிஷங்களில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள். முறையான விசாரணை நடத்தாமல் எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்க முடியாது.

சிசிஐ சார்பில் விதிக்கப்பட்ட ரூ. 1,337.76 கோடி அபராதத் தொகையில் 10 சதவீதத்தை (ரூ.133 கோடி) கூகுள் நிறுவனம் கண்டிப்பாக  செலுத்த வேண்டும்' என்று உத்தரவிட்டனர். இதுதொடர்பாக சிசிஐ பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர். மேலும் அடுத்த கட்ட விசாரணையை  பிப்ரவரி 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

First published:

Tags: Consumer tribunal, Google