காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்… என்று பாடிக்கொண்டு காதலர் தினத்திற்காக காகிதங்களில் கிறுக்கி கசக்கி போடும் நேரம் வந்துவிட்டது. முன்பு எல்லாம் எதையாவது எழுத வேண்டும் என்று வோர்ட்ஸ்வொர்த் முதல் வைரமுத்து வரை எல்லாரையும் துணைக்கு அழைத்துக் கொண்டு இருப்பார்கள். ஆனால் சமீபத்திய ஆய்வில், 62% இந்தியர்கள் காதல் கடிதங்கள் எழுதுவதற்கு ChatGPT ஐ பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது.
கடிதங்கள் எழுதும் காலத்தில் இருந்தே தானாக காதலிக்கு கடிதம் எழுதுபவரை விட நண்பர்கள் உதவியோடு எழுதுபவர்கள் தான் அதிகம். இன்னும் ஒரு சிலர் நன்றாக கவிதை எழுதுபவரிடம் இருந்து 1 கவிதையை கடன் வாங்கி அப்படியே காதலியிடம் ஒப்பித்துவிடுவார். ஆனால் காலம் மாற மாற டெக்னாலஜியை துணைக்கு அழைத்து அங்கு இருந்து கொஞ்சம் பிட் அடித்து பாஸ் ஆகி வருகின்றனர்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் OpenAI நிறுவனம் செயற்கை நுண்ணறிவு மூலம் செயல்படும் AI சாட் பாக்ஸான ChatGPT ஐ வெளியிட்டது. பலதரப்பட்ட கேள்விகளை கலந்து கேட்டாலும் அதற்கு தெளிவாக ஒரு பதில் தந்து இணையவாசிகளை குதூகலப்படுத்தி வருகிறது இந்த ChatFGPT. மருத்துவ பரீட்சையில் தேர்ச்சி பெறுவது முதல் புதிய சமையல் குறிப்புகள் வரை அனைத்தையும் சொல்லும் இதை காதலுக்கு உதவ அழைக்காமலா இருக்கப் போகிறார்கள்.
சமீபத்தில் McAfee நிறுவனம், 'மாடர்ன் லவ்' என்ற தலைப்பில் ஒன்பது நாடுகளில் உள்ள 5,000 பேரிடம் ஒரு புதுவித ஆய்வை நடத்தியது. அதில் AI மற்றும் இணையம் எப்படி தங்களது காதலை வெளிப்படுத்த உதவுகிறது என்ற கேள்விக்கு கருத்து கேட்கப்பட்டுள்ளது. பதிலளித்தவர்களில் 62 சதவீதம் பேர், ChatGPTஐப் பயன்படுத்தி காதல் கடிதங்கள் எழுதத் திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ளனர். அதிலும் இந்திய ஆண்கள் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருந்தது.
27 சதவீதம் பேர் ChatGPTயில் இருந்து உதவி பெறுவது கடிதம் அனுப்புவோருக்கு அதிக தன்னம்பிக்கையை ஏற்படுத்துவதாக காரணம் கூறியுள்ளனர். 21 சதவீதம் பேர் நேரமின்மையால் அதை பயன்படுத்துவதாகவும், 21 சதவீதம் பேர் கடிதம் எழுதுவதற்கான உத்வேகமின்மை இருக்கிறது ஆனால் காதலை அழகாக வெளிப்படுத்த ஆசை இருப்பதால் ChatGPTயைப் பயன்படுத்துகிறோம் என்று குறிப்பிட்டுள்ளனர். ஆனால் 49 சதவீதம் பேர் ChatGPT-எழுதிய கடிதங்கள் திருப்திகரமாக இல்லை என்றும் கோரியுள்ளனர்.
ஆனால் இந்த ஆண்டில் காதலர்களுக்குள் பகிரப்படும் கடிதங்களில் அதிகம் செயற்கை நுண்ணறிவால் எழுதப்பட்டதாக தான் இருக்கும் என்பது தெரிந்துவிட்டது. உங்களுக்கு வரும் கடிதங்கள் மிக சிறப்பானதாக இருந்தால் அது நிச்சயம் மனிதனால் எழுதப்படவில்லை என்பதை நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள் மக்களே. காதலன்/ காதலி கவிஞர் என்று ஏமாந்து விடாதீர்கள். எல்லாம் நம் ChatGPT இன் வித்தை என்று புரிந்துகொள்ளுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Valentine's day