விண்வெளி ஆராய்ச்சியாளர்களை பொறுத்தவரையில் Black hole எனப்படும் கருங்குழி அல்லது கருந்துளை என்பது ஒரு பெரும் மர்மமாக நீடித்து வருகிறது. நமது அண்டத்தில் அவிழ்க்க முடியாத பெரும் மர்ம முடிச்சாக கருந்துளை இருப்பதற்கு காரணம், இவற்றினுள் என்ன நடக்கிறது என்பதை யாராலும் இதுவரை கண்டறிய முடியவில்லை. இவற்றின் எல்லைக்குட்பட்டு செல்லும் ஒளி உட்பட எதுவுமே வெளியேற முடியாத அளவு வலுவான ஈர்ப்பு சக்தியை கொண்டிருக்கிறது கருந்துளை. விஞ்ஞானிகளை தொடர்ந்து ஆச்சரியத்தில் ஆழ்த்தும் பிரபஞ்சத்தின் பல விஷயங்களில் கருந்துளை முதன்மையானது எனலாம். கருந்துளை எப்பேர்ப்பட்ட நட்சத்திரத்தையும் விழுங்கிவிடக் கூடும் எனவும் சொல்லப்படுகிறது.
கருந்துளை ரகசியத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் நோக்கில் அமெரிக்காவின் நாசா விண்வெளி அமைப்பானது Imaging X-ray Polarimetry Explorer (IXPE) எனப்படும் எக்ஸ்ரே தொலைநோக்கியை விண்வெளிக்கு அனுப்பியிருக்கிறது. அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஃபால்கன் ராக்கெட் மூலம் இந்த தொலைநோக்கி அனுப்பப்பட்டுள்ளது.
Also read:
சூரியன் போன்ற நட்சத்திரம் வெடித்து சிதறல் - மனித இனத்துக்கு பெரும் பாதிப்பு - விஞ்ஞானிகள் கவலை
மிக விஷேசமாக, உயர் தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த தொலைநோக்கி வாயிலாக கேலக்ஸியில் உள்ள பல்வேறு மர்மங்களுக்கு விடை கிடைக்கும் என நம்பப்படுகிறது. சூரியனின் எந்த பொருளில் இருந்து ஒளி வெளிப்படுகிறது? பெரு வெடிப்புகள், 10 மில்லியன் டிகிரி வெப்பநிலை, வேகமான சுழற்சிகள் மற்றும் வலுவான காந்தப்புலங்கள் குறித்து நீடித்துவரும் ரகசியங்களுக்கு விடை காண விஞ்ஞானிகளுக்கு இந்த தொலைநோக்கி உதவ இருக்கிறது.
IXPE-ன் முக்கிய நோக்கம்:
கருந்துளைகள் எவ்வாறு சுழல்கின்றன?
பால்வீதியின் மையத்தில் உள்ள கருந்துளை கடந்த காலத்தில் தன்னை சுற்றியுள்ள பொருட்களை தன்னகப்படுத்தியிருக்கிறதா?
எக்ஸ்-கதிர்களில் பல்சர்கள் எப்படி பிரகாசமாக பிரகாசிக்கின்றன?
விண்மீன் திரள்களின் மையங்களில் உள்ள பிரம்மாண்டமான கருந்துளைகளைச் சுற்றியுள்ள பகுதியிலிருந்து வெளியேற்றப்படும் ஆற்றல்மிக்க துகள்களின் ஜெட்களுக்கு எங்கிருந்து சக்தி கிடைக்கிறது?
நாசாவின் முயற்சி கருந்துளை குறித்த ஆராய்ச்சியில் புதிய மைல்கல்லாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்களால் நம்பப்படுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.