Home /News /technology /

சீன ஆப்-களால் வந்த சிக்கல்..... போலி கடன் செயலிகளை ஒழிக்க தயாராகிறது ‘ஒயிட் லிஸ்ட்’!

சீன ஆப்-களால் வந்த சிக்கல்..... போலி கடன் செயலிகளை ஒழிக்க தயாராகிறது ‘ஒயிட் லிஸ்ட்’!

லோன் ஆப்ஸ்

லோன் ஆப்ஸ்

சீன நிறுவனங்களின் கடன் ஆப்-கள் குறித்து ஏராளமான புகார்கள் எழுந்து வந்த நிலையில், போலி கடன் செயலிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Delhi, India
  கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர்களில் கொட்டிக்கிடக்கும் ஏராளமான லோன் ஆப்களுக்கும் சீன நிறுவனங்களுக்கும் இடையே மிகப்பெரிய தொடர்பு இருப்பது கடந்த சில நாட்களுக்கு முன்பு தெரியவந்தது. சீனாவைச் சேர்ந்த சில கடன் வழங்கும் ஆப்-கள் சிறிய தொகையை கடனாக பெறும் இந்திய மக்களிடம் அதிக வட்டியை வசூலிப்பது, அவரது தனிப்பட்ட தகவலை பெற்றுக்கொண்டு பணம் செலுத்திவிட்டதாக ஏமாற்றுவதாக, கடனை திரும்ப செலுத்தாதவர்களை தொலைபேசி மூலம் மிரட்டுவது போன்ற சட்டவிரோதமான செயல்களை செய்துவந்துள்ளது. இதனால் மன உளைச்சல் அடைந்த பலரும் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து இந்த விவகாரம் விஸ்வரூபமாக உருவெடுத்தது.

  இதுதொடர்பாக பெங்களுரு சைபர் குற்றப்பிரிவு போலீஸார் 18 வழக்குகளைப் பதிவு செய்தது. இதனையடுத்து பெங்களூருவில் சீன கடன் ஆப் மற்றும் அதற்கு தொடர்புடைய நிறுவனங்களுக்குச் சொந்தமான 6 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 17 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த ஆப்கள் அனைத்துமே சீனாவின் கட்டுப்பாட்டில் இருப்பதும், இந்திய மக்களிடையே கடன் மோசடிகளில் ஈடுபட்டு வருவதும் கண்டறியப்பட்டது.

  இதுகுறித்த விசாரணையை மத்திய புலனாய்வு நிறுவனம் நடத்தி வரும் நிலையில், போலி கடன் ஆப்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் வங்கி உயர் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கடன் ஆப்கள் தொடர்பாக நடத்தப்பட்ட ஆலோசனையை அடுத்து, ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா சட்டப்பூர்வமான கடன் ஆப்கள் அடங்கிய ‘ஒயிட்லிஸ்ட்’ ஒன்றை தயாரித்து வருவதாக அறிவித்துள்ளார்.

  ரிசர்வ் வங்கியின் ஒயிட்லிஸ்ட்டில் உள்ள கடன் ஆப்கள் மட்டுமே கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஸ்டோர் போன்ற ஆப் ஸ்டோர்களில் இடம் பெறுவதற்கான பணிகளை மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MEITY) மேற்கொள்ள உள்ளது.

  நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சட்டவிரோத கடன் ஆப்கள் மூலமாக அதிகரித்து வரும் கடன்கள், மைக்ரோ கிரெடிட்கள், அதிக வட்டி விகிதங்கள், மறைக்கப்பட்ட கட்டணங்கள், கடனை வசூலிப்பதற்காக அச்சுறுத்துவது போன்ற விதிமீறல்களால் மக்கள் பலர் ஏமாற்றப்பட்டுள்ளனர். கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வேதனை தெரிவித்தார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

  கடன் ஆப்கள் மூலமாக பணமோசடி, வரி ஏய்ப்பு, தரவுகளின் மீறல் அல்லது தகவல் திருட்டு, மறைக்கப்பட்ட கட்டணங்கள், ஷெல் நிறுவனங்கள், செயலிழந்த NBFCகள் போன்ற தவறான நடவடிக்கைகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுப்பது குறித்து நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

  மேற்கூறிய பிரச்சினைகள் தொடர்பாக சட்ட, நடைமுறை மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் குறித்த விரிவான ஆலோசனைக்குப் பிறகு, ரிசர்வ் வங்கி அனுமதிப் பட்டியலைத் தயாரிக்கும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. கார்ப்பரேட் விவகார அமைச்சகம் ஷெல் நிறுவனங்களைக் கண்டறிந்து, அவற்றின் தவறான பயன்பாட்டைத் தடுக்க அவற்றின் பதிவை ரத்து செய்யும்.

  Read more: முழுமையாக ESIM க்கு மாறிய ஆப்பிள் ஐபோன் 14... ESIM என்றால் என்ன...?

  பேமெண்ட் திரட்டிகளின் பதிவு ஒரு காலக்கெடுவுக்குள் முடிக்கப்படுவதையும், அதற்குப் பிறகு பதிவுசெய்யப்படாத கட்டணத் திரட்டி செயல்பட அனுமதிக்கப்படக் கூடாது என்பதையும் உறுதிசெய்யுமாறு ரிசர்வ் வங்கி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கார்ப்பரேட் விவகார அமைச்சகம் ஷெல் நிறுவனங்களை கண்டறிந்து, அவற்றின் தவறான ஆப்களின் பதிவை ரத்து செய்யும்.

  வாடிக்கையாளர்கள், வங்கி ஊழியர்கள், சட்ட அமலாக்க முகவர் மற்றும் பிற பங்குதாரர்களுக்கு ஆன்லைன் கடன் ஆப்-கள் பற்றியும், அதில் நடக்கும் மோசடிகள் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
  Published by:Srilekha A
  First published:

  Tags: China

  அடுத்த செய்தி