ஏர்டெல், வோடபோனுக்கு அபராதத்தை ரத்து செய்வது நீதிமன்ற அவமதிப்பு - மத்திய அரசுக்கு ஜியோ கடிதம்

ஏர்டெல், வோடபோனுக்கு அபராதத்தை ரத்து செய்வது நீதிமன்ற அவமதிப்பு - மத்திய அரசுக்கு ஜியோ கடிதம்
ஜியோ | ரவி ஷங்கர் பிரசாத்
  • News18
  • Last Updated: November 3, 2019, 1:51 PM IST
  • Share this:
ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் மறைக்கப்பட்ட வருவாயை செலுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், செல்லுலார் ஆபரேட்டர்ஸ் அசோசியசன் ஆப் இந்தியா இரு நிறுவனங்களுக்கு சாதகமாக பேசியதற்கு ஜியோ கடும் எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதியுள்ளது.

கணக்கில் காட்டாமல் ஈட்டப்பட்ட வருவாயை மறைத்த ஏர்டெல், வோடோபோன் - ஐடியா ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்களின் மீது அரசு தொடுத்த வழக்கில் 92,000 கோடி ரூபாய் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவு பிறப்பித்தது.

நிறுவனங்களின் வாதத்தில் வாடகை, ஈவுத்தொகை, வட்டி வருமானம், நிலையான சொத்துகளை விற்பதன் மூலம் கிடைக்கும் லாபம், உரிமத்தின் மானியம் மற்றும் செயல்பாடு, தொலைத்தொடர்பு அல்லாத வருவாய்கள் போன்றவற்றைக் கணக்கிடப்பட்ட மொத்த வருவாய் வரையறையிலிருந்து விலக்க வேண்டும் என்று கூறப்பட்டது.


மேலும், தற்போதைய பொருளாதாரச் சூழ்நிலை காரணமாக வருமானம் குறைந்துள்ளதால் தங்களுக்கு விதிக்கப்பட்ட 1.33 லட்சம் கோடி ரூபாய் அபராதத்தை தள்ளுபடி செய்ய வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தனர். இவ்வழக்கின் முடிவை அறிவித்த உச்ச நீதிமன்றம், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வைத்த கோரிக்கையை நிராகரித்ததுடன் 92,000 கோடி ரூபாய் அபராதத்தைக் கட்டாயமாகச் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இதற்கு ஏர்டெல்லும், வோடபோனும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

அண்மையில், தொலைத்தொடர்பு நிறுவனங்களின் அமைப்பான செல்லுலார் ஆபரேட்டர்ஸ் அசோசியசன் ஆப் இந்தியா (COAI) சார்பில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், தொலைத்தொடர்பு துறையில் உள்ள நெருக்கடிகளை விளக்கியும், வோடபோன், ஏர்டெல் ஆகிய நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், அரசு உதவாவிட்டால் தொலைத் தொடர்பு துறை பாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, COAI அமைப்பின் செயல்பாடு ஒருதலைபட்சமாக இருப்பதாகவும், தங்களிடம் கலந்தாலோசிக்காமல் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருப்பதாகவும் ஜியோ குற்றம்சாட்டியது. ஏர்டெல், வோடபோன் ஆகிய நிறுவனங்கள் நீலிக்கண்ணீர் வடிப்பதாகவும், அந்த நிறுவனங்களுக்கு சார்பாக COAI செயல்படுவதாகவும் ஜியோ குற்றம் சாட்டியது. அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை அந்த நிறுவனங்களால் கொடுக்க முடியும் என்றும், அதற்கான சக்தி அந்த நிறுவனங்களுக்கு உள்ளதாகவும் ஜியோ தெரிவித்துள்ளது.இந்த நிலையில், ஜியோ தரப்பில் இருந்து மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத்துக்கு இரண்டவதாக ஒரு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில், ”நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதாக ஏர்டெல் மற்றும் வோடஃபோன் நிறுவனங்கள் கூறிவரும் நிலையில், அந்த காரணத்திற்காக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட தொகையை செலுத்த விலக்கு அளித்தால் அது சட்டத்தை மீறும் முடிவாக அமையும். மேலும், தவறான நிறுவனங்களுக்கு அது மோசமான முன்னுதாரணத்தை அளிக்கும்.

உத்தரவின் படி இரு நிறுவனங்களும் செலுத்த வேண்டிய தொகையை தள்ளுபடி செய்வது நீதிமன்ற அவமதிப்புக்கு சமம். கட்டணம் செலுத்த இயலாமைக்கு எந்த ஒரு நிகழ்வையோ, நெருக்கடியையோ காரணமாக சொல்ல முடியாது.

14 ஆண்டுகளாக வருமானத்தை மறைத்து அந்த நிறுவனங்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளதை உச்ச நீதிமன்றமே சுட்டிக்காட்டியுள்ளது. COAI-ஐ அனுகியதன் மூலம் இரு நிறுவன உரிமதாரர்கள் நீதிமன்றத்தின் செயல்முறையை துஷ்பிரயோகம் செய்துள்ளனர் மற்றும் அற்பமான மற்றும் சட்டரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாத காரணங்களுக்காக நிலுவைத் தொகையை வேண்டுமென்றே தாமதப்படுத்தியுள்ளனர்.

உச்ச நீதிமன்றம் செலுத்தக் கூறியுள்ள தொகையை தள்ளுபடி செய்வதற்கான எந்தவொரு திட்டமும் அரசின் நிதித்துறைக்கு இழப்பு ஏற்படுத்தும் முடிவு. இதுவும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணாகவும் கருதப்படும். COAI உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, நிதி நெருக்கடியில் இரு நிறுவனங்கள் உள்ளது என்று கூறுவதை ஏற்க முடியாது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published: November 3, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading