ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

இந்திய மொழிகளில் தமிழ் விக்கிப்பீடியா இரண்டாமிடம் !

இந்திய மொழிகளில் தமிழ் விக்கிப்பீடியா இரண்டாமிடம் !

  • 2 minute read
  • Last Updated :

இந்திய மொழிகளுக்கிடையே நடந்துவரும் விக்கிப்பீடியாக் கட்டுரைப் போட்டியில் தமிழ் இரண்டாமிடத்தில் உள்ளது.

இப்போட்டி என்பது கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் முந்நூறு வார்த்தைகளுக்குக் குறையாத கட்டுரையை எழுதி சமர்ப்பிக்க வேண்டும். ஒவ்வொரு விக்கிப்பீடியாவிலும் இருக்க வேண்டிய முக்கியத் தலைப்புகள், இந்திய அணைகள், ஆறுகள், தொகுதிகள், கல்வி நிலையங்கள் போன்றவை உட்பட பல தலைப்புகள் போட்டிக்கு உள்ளன.

மேலும் தமிழர்கள் அதிகம் தேடிய தலைப்புகளை கூகிளும் போட்டித் தலைப்புகளாகப் பரிந்துரைத்துள்ளது. இப்படிப் பல வகையான தலைப்புகள் துறைவாரியாக உள்ளன. விரும்புபவர்கள் ஆங்கிலக் கட்டுரையையே மொழிபெயர்க்கலாம் அல்லது சொந்தமாகவும் கட்டுரை எழுதலாம்.

போட்டிப் பக்கம் http://ta.wikipedia.org/wiki/WP:TIGER2

இந்திய மொழிகளில் பதினாறு மொழியினர் போட்டியிட்டு வருகின்றனர். இதில் தற்போதைய நிலவரப்படி தமிழ் மொழியானது இரண்டாயிரத்து நூறு கட்டுரைகளுக்கு மேல் எழுதப்பட்டு இரண்டாமிடத்தில் உள்ளது, போட்டியானது 2020 ஜனவரி 10 வரை நடக்கிறது. மாதத்திற்கு மூன்று பரிசும், மொத்தமாக வெற்றி பெறும் குழுவினர்க்குச் சிறப்புப் பரிசும் காத்திருக்கின்றன.

கூகிளின் நிதிநல்கையுடன் விக்கிப்பீடியா அறக்கட்டளையின் ஆதரவுடன் பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்ட சி.ஐ.எஸ் என்ற தன்னார்வ நிறுவனம் இந்தப் போட்டியை ஒருங்கிணைக்கிறது. விக்கிப்பீடியா என்பது தன்னார்வலர்களால் எழுதப்படும் ஒரு கலைக் களஞ்சியமாகும். அவர்களுக்குள்ளேயே விதிமுறைகளும், கண்காணிப்பு முறைகளும் கொண்டு வெற்றிகரமான ஒரு அறிவுத் தளத்தை உருவாக்கிவருகின்றனர்.

இரண்டாமிடத்திலிருந்து முன்னேறி வெற்றி பெற்றுப் பரிசை அள்ளும் முதலிடத்தைத் தமிழ் விக்கிப்பீடியா அடைவதற்கு  இதுவரை அறுபதிற்கும் மேற்பட்டவர்கள் கட்டுரைகளை உலகளவில் எழுதிவருகிறார்கள்.

சேலத்தைச் சேர்ந்த பாலசுப்ரமணியன் 400 கட்டுரைகளும் விருதுநகரைச் சேர்ந்த ஸ்ரீதர் 250 கட்டுரைகளும் இலங்கையிலிருந்து பாத்திமா சுமார் 200 கட்டுரைகளும் கடந்து எழுதிவருகின்றனர். அடுத்து கி.மூர்த்தி, பா. ஜம்புலிங்கம், தகவலுழவன், வசந்த லட்சுமி போன்றோர் தலா நூறு கட்டுரைகளைக் கொடுத்துள்ளார்கள்.

வேங்கைத் திட்டப் போட்டியில் புதியவர்களுக்கு அறிமுகம் செய்யும் நோக்கில் வேளச்சேரி பயிலகம்,  மதுரை மன்னர் கல்லூரி போன்ற இடங்களில் தொடர்தொகுப்பு நிகழ்வு நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக கடந்த 15 ஆம் நாள் சென்னை லயோலா கல்லூரியில் தொடர்தொகுப்பு நிகழ்வு நடந்தது.

அதாவது மாரத்தான் போல ஒரே இடத்தில் கூடி விக்கிப்பீடியாவில் எழுதுவார்கள். இது தொடர்பாக உள்ள சந்தேகங்களைத் தீர்க்கவும் கற்றுக் கொள்ளவும் மற்றவர்களுடன் சேர்ந்து விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுதவும் இத்தகைய சந்திப்புகள் உதவுகின்றன.

அவ்வகையில் பலர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் விக்கிப்பீடியா அறிமுகமும் வேங்கைத் திட்டப் போட்டி அறிமுகமும் செய்யப்பட்டு, போட்டிக் கட்டுரைகளை எழுதப் பயிற்சியும் வழங்கப்பட்டன. மாணவர்கள், பணி ஓய்வு பெற்றவர்கள், மருத்துவர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் எனப் பலரும் கட்டுரைகளை எழுதினர். தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதுவதன் மூலம் உலகளவில் அங்கீகாரமும் பணியளவில் மரியாதையும் கிடைத்ததாக விக்கிப்பீடியர் கி. மூர்த்தி தனது அனுபவங்களைப் பகிர்ந்தார். தொடர்ந்து பல கல்லூரியில் பயிற்சி மனைகள் மூலம் விக்கிப்பீடியாவை மாணவர்களிடம் கொண்டு செல்லவுள்ளதாக

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுள் ஒருவரான ஆல்பர்ட் கூறினார். நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாகப் பார்வை மாற்றுத்திறனாளிகளும் ஆர்வத்துடன் கற்றுக் கொண்டு பயனடைந்தனர். நிகழ்ச்சியின் முடிவில் தமிழ் கலைச்சொற்களைத் தொகுக்கும் நிகண்டியம் என்ற திட்டம் குறித்தும் விவாதிக்கப் பட்டது.

விக்கிப்பீடியாவில் எழுதுவதன் மூலம் பொதுவறிவை வளர்ப்பதைத் தாண்டி இணையத்தில் ஆக்கப்பூர்வமான ஒரு பணியைச் செய்ய முடியும். பல தகவலுக்கு விக்கிப்பீடியாவை நாம் தினமும் பயன்படுத்தியிருப்போம், இவையெல்லாம் யாரோ ஒருவரின் பலன் எதிர்பாராத ஒரு கொடையாகும்.

அது போல நாமும் கற்றவற்றை விக்கிப்பீடியாவில் பகிர்வதால் மற்றவர்களுக்குப் பயனளிக்கும். நடைபெற்றுக் கொண்டிருக்கும் போட்டியிலும் கலந்து கொண்டு தமிழ் விக்கிப்பீடியாவை வெற்றி பெறவைப்பது இணையத் தமிழர்களின் கடனாகும்.

Published by:Yuvaraj V
First published:

Tags: Wikipedia