பேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ் ஆப் செயலி, தனது தனியுரிமைக் கொள்கையை மாற்றியது உலக முழுவதும் அந்த செயலியை பயன்படுத்தியவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தனிநபர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பதாக கூறி, எலான் மஸ்க் முதல் Paytm நிறுவனர் வரை பலரும் வாட்ஸ் ஆப் செயலியை புறக்கணிக்குமாறு வெளிப்படையாக அறிவித்தனர். இது டெக் உலகில் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதுடன், கூகுள் பிளே ஸ்டோரில் வாட்ஸ் ஆப் செயலியின் பதிவிறக்கமும் வேகமாக குறைந்தது. இது இந்தியாவிலும் பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது.
வெளிநாட்டு நிறுவனங்களின் செயலிகளை இந்திய மக்கள் பயன்படுத்துவதால், அதன்மூலம் அந்த நிறுவனங்கள் இந்திய மக்களை உளவு பார்ப்பதாகவும் நீண்ட நாட்களாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. தேச பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருப்பதால், டிவிட்டர், பேஸ்புக், வாட்ஸ் ஆப் செயலிகளுக்கு மாற்றாக இந்தியாவிலேயே புதிய செயலிகள் உருவாக்கப்பட வேண்டும் என பலரும் வலியுறுத்தி வந்தனர்.
அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக, வாட்ஸ் ஆப் செயலிக்கு மாற்றாக Sandes App என்ற புதிய குறுஞ்செய்தி செயலி ஒன்றை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இதனை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (MeitY) ஒரு பகுதியாக இருக்கும் தேசிய தகவல் மையம் (NIC) உருவாக்கியுள்ளது.
ALSO READ : ரூ.15,000க்குள் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட் போன்கள்!
சாண்டஸ் என்றால் இந்தியில் மெசேஜ் என்று பொருள். இந்த செயலி அதிகாரப்பூர்வமாக பயன்பாட்டுக்கு வரவில்லை என்றாலும், ஏபிகே (APK File) பயன்பாட்டுக்கு வந்துள்ளது. மத்திய அரசின் GIMS போர்ட்டலில் உள்ள இந்த ஏ.பி.கே பைலை, ஆன்டிராய்டு 5.0 மற்றும் அதற்கு மேலான வெர்சன் செல்போன் பயன்படுத்துபவர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். பதிவிறக்கம் செய்த பிறகு, தொலைபேசி எண் அல்லது இமெயில் ஐடியை மூலம் அக்கவுண்டை ஓபன் செய்ய வேண்டும். நீங்கள் கொடுத்த செல்போன் எண்ணிற்கு ஓடிபி செல்லும். அதனை உள்ளீடு செய்து அக்கவுண்டை உருவாக்கலாம். இமெயில் மூலம் அக்கவுண்ட் உருவாக்குவதற்கு சில கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அரசாங்க அனுமதி பெற்ற இமெயில் மூலம் மட்டுமே அதில் உள்ளீடு செய்ய முடியும். மற்ற அக்கவுண்டுகளுக்கு அனுமதி கிடையாது. மேலும், ஒருமுறை ஒரு மொபைல் எண் மற்றும் இமெயிலை பயன்படுத்தி அக்கவுண்டை ஓபன் செய்துவிட்டால், அதனை மாற்ற முடியாது. அந்த அக்கவுண்டை டெலிட் செய்துவிட்டு வேறொரு மொபைல் எண் மற்றும் இமெயிலை பயன்படுத்தி மட்டுமே அக்கவுண்ட் உருவாக்க முடியும்.
ALSO READ | UIDAI புதிய அப்டேட்: இப்போது mAadhaar செயலியில் 5 பேரின் சுயவிவரங்களை சேர்க்கலாம்!
வாட்ஸ் ஆப் செயலில் கொடுக்கப்பட்டு பல அம்சங்கள் சாண்டஸ் செயலியிலும் உள்ளன. End to End encryption உள்ளது. ரகசிய மெசேஜ் என்றால், அதற்கான சிம்பலை பயன்படுத்தி, நீங்கள் மெசேஜ் அனுப்பும் நபருக்கு தெரியப்படுத்தலாம். மேலும், புகைப்படம் மற்றும் வீடியோக்களை அனுப்பும் அம்சங்களுடன், ஸ்மைலி , கிப்ஸ் உள்ளிட்ட அம்சங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
வாட்ஸ் ஆப்பில் கூகுள் டிரைவில் மட்டுமே பேக்கப் செய்ய முடியும் என இருக்கும் நிலையில், உங்கள் தொலைபேசியிலேயே பேக்கப் எடுத்துக்கொள்ளும் வசதி சாண்டஸ் ஆப்பில் உள்ளது. வாட்ஸ் ஆப் செயலியில், ஒரு அக்கவுண்டில் எப்போது வேண்டுமானாலும் யூசர் மொபைல் எண்ணை மாற்றிக்கொள்ளலாம். ஆனால், சாண்டஸ் ஆப்பில் அக்கவுண்ட் ஓபன் செய்த மொபைல் எண்ணை மாற்ற முடியாது.
ALSO READ | உங்கள் பேஸ்புக் ப்ரொஃபைலை லாக்செய்வது எப்படி?
இந்த செயலியை பயன்படுத்துவது குறித்து மத்திய அரசு இதுவரை தெளிவான விளக்கம் ஏதும் கொடுக்கவில்லை. அரசு அதிகாரிகள் தகவல்களை பரிமாறிக்கொள்ள அதிகளவு இந்த செயலியை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் பொதுமக்களிடையேவும் பயன்பாட்டை அதிகரிக்க திட்டமிட்டுள்ள மத்திய அரசு, அதற்கான பாதுகாப்பு அம்சங்களில் கூடுதல் அக்கறை செலுத்தி வருகிறது.