மனிதர்களைப் போன்று வீட்டை பராமரிப்பதுடன், பாதுகாப்புக்காக ரோந்து செல்வது, உடற்பயிற்சி செய்யாமல் ஏமாற்றுபவர்களைக் கண்டுபிடிப்பது போன்ற பணிகளை மேற்கொள்வதற்காக பந்து வடிவிலான ரோபா ஒன்றை சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் லாஸ் வெகாஸ் நகரில் நுகர்வோர் மின்சாதனப் பொருட்கள் கண்காட்சி நடைபெற்று வருகிறது. முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடஸ் பென்ஸ் உள்ளிட்டவை தங்களது நிறுவனங்களின் எதிர்கால தயாரிப்புளைக் காட்சிப்படுத்தியுள்ளன. அந்த வகையில், சாம்சங் நிறுவனம் மஞ்சள் நிறத்தில் டென்னிஸ் பந்து அளவிலான "பாலி ரோபோ" ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
தரையில் ஊர்ந்து செல்லும் இந்த ரோபோவில் கேமரா, ஸ்பீக்கர், மனிதர்களின் கட்டளையை ஏற்று செயல்படுத்துதல், உடல் ஆரோக்கியத்தை கண்காணிப்பது, மின்சாதனப் பொருட்களை இயக்கும் ரிமோட் போன்ற பல்வேறு தொழில்நுட்பங்கள் இடம்பிடித்துள்ளன.
இதில், இடம்பெற்றிருக்கும் கேமரா மூலம் மனிதர்களின் அழகான தருணங்களை தத்ரூபமாக படம் பிடிக்க உதவுகிறது. நாம் வீட்டில் இல்லாத தருணங்களில் வீடு முழுவதும் ரோந்து செல்வதுடன், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் செல்லப் பிராணிகளை கண்காணிக்க பயன்படுகிறது.
செல்லப்பிராணிகள் வீட்டை அசுத்தப்படுத்தி விட்டால் வாக்கும் கிளினருக்கு கட்டளை கொடுத்து எஜமானரை போன்று வேலை வாங்குகிறது. புகைப்படங்கள் எடுப்பது, உடற்பயிற்சி செய்வதாகக் கூறிவிட்டு தொலைக்காட்சி பார்ப்பவர்களை காட்டிக் கொடுப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரோபோவுக்கு பாலி ( Ballie) என பெயரிடப்பட்டுள்ளது.
கும்பகர்ணனை போன்று தூங்குபவர்களை தட்டி எழுப்பி அன்றாட பணிகளை செய்ய வைக்க ரோபோ உதவுகிறது. மனிதர்களின் அன்றாட வாழ்க்கையில் உதவியாளரை போன்ற இடத்தை பிடிக்க கூடிய இந்த பாலி ரோபோவின் விலை இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை.
இதேபோன்று உடற்பயிற்சி கற்றுக் கொடுப்பதற்காக GEMS வெர்ச்சுவல் பயிற்சியாளர், பார்வையற்றவர்களுக்கான இலக ரக கருவி, தீயணைப்பு வீரர்களுக்கான IGNIS என்ற நவீன சாதனங்களையும் சாம்சங் நிறுவனம் காட்சிப்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.