ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படும் சிஓஏஐ அமைப்புக்கு ஜியோ எதிர்ப்பு - மத்திய அரசுக்கு கடிதம்

ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படும் சிஓஏஐ அமைப்புக்கு ஜியோ எதிர்ப்பு - மத்திய அரசுக்கு கடிதம்
ரிலையன்ஸ் ஜியோ
  • Share this:
ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படும் சிஓஏஐ அமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அமைச்சருக்கு ஜியோ கடிதம் எழுதியுள்ளது.

அண்மையில், தொலைத்தொடர்பு நிறுவனங்களின் அமைப்பான செல்லுலார் ஆபரேட்டர்ஸ் அசோசியசன் ஆப் இந்தியா (COAI) சார்பில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அதில், தொலைத்தொடர்பு துறையில் உள்ள நெருக்கடிகளை விளக்கியும், வோடபோன், ஏர்டெல் ஆகிய நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், அரசு உதவாவிட்டால் தொலைத் தொடர்பு துறை பாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில்,  COAI அமைப்பின் செயல்பாடு ஒருதலைபட்சமாக இருப்பதாகவும், தங்களிடம் கலந்தாலோசிக்காமல் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருப்பதாகவும் ஜியோ குற்றம்சாட்டியது.

இது தொடர்பாக அந்த அமைப்புக்கு கடிதம் ஒன்றையும் ஜியோ எழுதியுள்ளது. அதில், ஏர்டெல், வோடபோன் ஆகிய நிறுவனங்கள் நீலிக்கண்ணீர் வடிப்பதாகவும், அந்த நிறுவனங்களுக்கு சார்பாக COAI செயல்படுவதாகவும் ஜியோ குற்றம் சாட்டியது. அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை அந்த நிறுவனங்களால் கொடுக்க முடியும் என்றும், அதற்கான சக்தி அந்த நிறுவனங்களுக்கு உள்ளதாகவும் ஜியோ தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இன்று மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்துக்கு கடிதம் ஒன்றை ஜியோ அனுப்பியுள்ளது. அதில், COAI மனுவில் குறிப்பிட்டவாறு அரசு உதவவில்லை என்றால் தொலைத்தொடர்பு துறை பாதிக்கும் என்பதை ஏற்கமுடியாது என்று தெரிவித்துள்ளது. மேலும், COAI அமைப்பானது தொலைத்தொடர்பு துறை சார்பாக இல்லாமல், குறிப்பிட்ட 2 நிறுவனங்களின் குரலாக மட்டும் செயல்பட்டிருப்பதாக குற்றம்சாட்டியுள்ளது.

என்ன பிரச்னை?:

கணக்கில் காட்டாமல் ஈட்டப்பட்ட வருவாயை மறைத்த ஏர்டெல், வோடோபோன்-ஐடியா ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்களின் மீது அரசு தொடுத்த வழக்கில் 92,000 கோடி ரூபாய் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவு பிறப்பித்தது.

நிறுவனங்களின் வாதத்தில் வாடகை, ஈவுத்தொகை, வட்டி வருமானம், நிலையான சொத்துகளை விற்பதன் மூலம் கிடைக்கும் லாபம், உரிமத்தின் மானியம் மற்றும் செயல்பாடு, தொலைத்தொடர்பு அல்லாத வருவாய்கள் போன்றவற்றைக் கணக்கிடப்பட்ட மொத்த வருவாய் வரையறையிலிருந்து விலக்க வேண்டும் என்று கூறப்பட்டது.

மேலும், தற்போதைய பொருளாதாரச் சூழ்நிலை காரணமாக வருமானம் குறைந்துள்ளதால் தங்களுக்கு விதிக்கப்பட்ட 1.33 லட்சம் கோடி ரூபாய் அபராதத்தை தள்ளுபடி செய்ய வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தனர். இவ்வழக்கின் முடிவை அறிவித்த உச்ச நீதிமன்றம், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வைத்த கோரிக்கையை நிராகரித்ததுடன் 92,000 கோடி ரூபாய் அபராதத்தைக் கட்டாயமாகச் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இதற்கு ஏர்டெல்லும், வோடபோனும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

First published: October 31, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்